போஸ்டர் செய்தி

இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்ட ரபேல் போர் விமானத்தில் ராஜ்நாத் சிங் உற்சாக பறந்தார்

Spread the love

பாரீஸ், அக்.9-

பிரான்சில் தயாரான அதிநவீன ரபேல் போர் விமானம் இந்தியாவிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது. அதை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பெற்றுக்கொண்டார்.

இந்திய விமானப்படையை பலப்படுத்துவற்காக, ரூ.59 ஆயிரம் கோடி செலவில் அதிநவீனமான 36 ரபேல் போர் விமானங்களை வாங்க மத்திய அரசு முடிவு செய்தது.

இதற்காக பிரான்ஸ் நாட்டின் டசால்ட் ஏவியேசன் நிறுவனத்துடன் 2016-ம் ஆண்டு ஒப்பந்தம் போடப்பட்டது. 36 விமானங்களில் முதல் விமானத்தை முறைப்படி பெறுவதற்காக ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், பிரான்சுக்கு 3 நாட்கள் அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ளார்.

6-ந் தேதி டெல்லியில் இருந்து புறப்பட்ட அவர் நேற்று முன்தினம் பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் போய்ச் சேர்ந்தார். ராஜ்நாத் சிங், பிரான்ஸ் அதிபர் மேக்ரானை பாரீஸ் எலிசி அரண்மனையில் நேற்று சந்தித்து பேசினார்.தொடர்ந்து பிரான்ஸ் ஆயுத படைகளின் தலைவர் புளோரன்ஸ் பார்லியையும் ராஜ்நாத் சிங் சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்புகளை தொடர்ந்து ரபேல் போர் விமானத்தை பெற்றுக்கொள்வதற்காக ராஜ்நாத் சிங், துறைமுக நகரான பார்டியாக்ஸ் சென்றார்.

அங்கிருந்தவாறு, இந்திய விமான படையின் 87-வது ஆண்டு தினத்தையொட்டி, அவர் இந்திய விமான படையினருக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் தனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார்.

அதையடுத்து, முதலாவது ரபேல் போர் விமானம், ராஜ்நாத் சிங்கிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது. அவர் பெற்றுக்கொண்டு, ரிப்பன் வெட்டினார். ஆயுத பூஜை செய்தார். விமானத்தின் முன் இந்திய கலாசாரப்படி தேங்காய் உடைக்கப்பட்டது.

பின்னர், ரபேல் போர் விமானத்தில் ராஜ்நாத் சிங் உற்சாகமாக பறந்து பார்த்தார்.

இரட்டை என்ஜின் கொண்ட ரபேல் போர் விமானம் 10,000 கிலோ எடை கொண்டதாகும். 15.3 மீட்டர் நீளம், 5.3 மீட்டர் உயரம், இறக்கையின் நீளம் 10.9 மீட்டர் உடையது. மணிக்கு 2,222 கி.மீ. வேகத்தில் சீறிப்பாயும். ஒரு முறை எரிபொருள் நிரப்பினால் 3,700 கி.மீ. வரை பறக்கும். நடுவானிலேயே எரிபொருள் நிரப்ப முடியும். அணு ஆயுதங்கள் உட்பட சுமார் 9,500 கிலோ வரை வெடிகுண்டுகளை சுமந்து செல்லும் திறன் கொண்டது. வானில் இருந்து வான் இலக்கை தாக்கி அழிக்கும் ஏவுகணைகள், வானில் இருந்து தரை இலக்கை தாக்கி அழிக்கும் ஏவுகணைகளை ரபேல் போர் விமானத்தில் இருந்து ஏவ முடியும். இது முழுமையான பல்துறை விமானம் ஆகும்.

4 விமானங்கள் அடங்கிய ரபேல் போர் விமானங்களின் முதல் அணி, அடுத்த ஆண்டு மே மாதம் இந்தியா வந்து சேரும். மொத்த எண்ணிக்கையான 36 விமானங்களும் இந்தியா வந்து சேர 2022ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் வரை ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரபேல் போர் விமானம் ஒப்படைக்கப்பட்ட நிகழ்வு குறித்து ராஜ்நாத் சிங் குறிப்பிடுகையில், “இந்தியாவுக்கும், பிரான்சுக்கும் இடையேயான இரு தரப்பு பாதுகாப்பு துறை உறவை வலுப்படுத்துவதில் இது நீண்ட தூரம் செல்லும். இரு தரப்பு உறவில் இது புதிய மைல் கல் ஆகும்” என்று பெருமிதத்துடன் கூறினார்.

இந்திய விமானப்படை விமானிகளுக்கு பிரான்ஸ் பயிற்சி அளித்ததற்கு ராஜ்நாத் சிங் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *