செய்திகள்

ஐதராபாத் மருத்துவமனையில் நடிகர் ரஜினிகாந்த் அனுமதி

கொரோனா தொற்று இல்லை, ரத்த அழுத்தத்தில் கடும் மாறுபாடு

ஐதராபாத் மருத்துவமனையில் நடிகர் ரஜினிகாந்த் அனுமதி

ஐதராபாத், டிச.25–

ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் இன்று காலை நடிகர் ரஜினி அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கொரோனா தொற்று இல்லை, ரத்த அழுத்தத்தில் உள்ள மாறுபாடு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஜினிகாந்த் சிவா இயக்கும் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார். நாயகிகளாக குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பை கொரோனா பரவலுக்கு முன்பே தொடங்கி 40 சதவீதம் முடித்து விட்டனர். இதையடுத்து 9 மாதங்களுக்கு பிறகு கடந்த 14-ந் தேதி ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் திரைப்பட நகரில் மீண்டும் அண்ணாத்த படப்பிடிப்பை தொடங்கினர். இதில் ரஜினிகாந்த் பங்கேற்று நடித்து வந்தார். படப்பிடிப்பில் பங்கேற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டன. அதில் படக்குழுவை சேர்ந்த 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனால் பாதுகாப்பை கருதி அண்ணாத்த படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

பரிசோதனையில் ரஜினிகாந்துக்கு தொற்று இல்லை என்று தெரிய வந்தது. ரஜினிகாந்துக்கு தொற்று இல்லை என்றாலும் தன்னை தனிமைப்படுத்தி கொண்டார். அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தது.

ரத்த அழுத்தத்தில் கடும் மாறுபாடு

இந்த நிலையில் இன்று ஐதராபாத் பகுதியில் உள்ள ஜூப்லி ஹில்ஸ் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ரஜினியின் உடல்நிலை குறித்து அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், நடிகர் ரஜினிகாந்துக்கு கொரோனா தொற்று இல்லை. கொரோனாவுக்கான எந்த அறிகுறியும் இல்லாத நிலையிலும், அவரது ரத்த அழுத்தத்தில் கடுமையான மாறுபாடு ஏற்பட்டது. இதனால் தொடர் சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வீடு திரும்புவதற்கு முன்னர் ரத்த அழுத்தம் சீராகும் வரை தொடர் சிகிச்சை அளிக்கப்படுவதுடன் டாக்டர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருப்பார்.

ரத்த அழுத்தம் மற்றும் சோர்வு தவிர மற்ற எந்த அறிகுறியும் அவரிடம் தென்படவில்லை. மருத்துவ ரீதியில் அவர் ஸ்திரமாக உள்ளார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *