செய்திகள்

சென்னை அணியின் மோசமான ஆட்டம்: ராஜஸ்தான் எளிதில் வெற்றி

அபுதாபி, அக். 20–

சென்னை அணியின் மோசமான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி எளிதில் வெற்றி பெற்றது.13வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 37வது லீக் ஆட்டம் நேற்றிரவு அபுதாபியில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி பேட்டிங்கைத் தேர்வு செய்தார். தொடக்க ஆட்டக்காரர்களாக சாம் கர்ரன் மற்றும் டூ பிளஸ்சிஸ் ஆகியோர் களமிறங்கினர். டூ பிளஸ்சிஸ் 10 ரன்களில் அவுட்டானார். அதன்பின் களமிறங்கிய ஷேன் வாட்சன் 8 ரன்னிலும், சாம் கர்ரன் 22 ரன்களிலும், அம்பத்தி ராயுடு 13 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டத்தை இழந்தனர். பின்னர் கேப்டன் தோனியுடன், ஜடேஜா இணைந்து ரன் குவிக்க முயற்சித்தனர். ஆனால் தோனி 28 ரன்களில் அவுட்டானார். அதன் பின்னர் வந்த கேதர் ஜாதவ் 4 ரன்களும், ஜடேஜா 35 ன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். சென்னை அணி 20 ஒவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்கள் எடுத்தது.

126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் முதல் 6 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 31 ரன்கள் மட்டும் எடுத்திருந்தனர். அதன்பின்னர் ஜோஸ் பட்லர் – கேப்டன் ஸ்மித் ஜோடி சேர்ந்து நிதானமாக ரன்களை எடுக்கத் தொடங்கினர். 17.3-வது ஓவரில் 126 ரன்கள் எடுத்து ராஜஸ்தன் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது. ஜோஸ் பட்லர் 70 ரன்களும் (48 பந்துகளில் 7 பவுண்டரிகள் 2 சிக்சர்கள்) ஸ்மித் 34 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

இதன் மூலம் சென்னை அணி 10 போட்டிகளில் 3 வெற்றி, 7 தோல்வி என 6 புள்ளிகளுடன் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது. அடுத்துவரும் 4 ஆட்டங்களையும் சென்னை அணி வென்றாலும், மற்ற அணிகளின் வெற்றி, தோல்விகள் சென்னை அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே சூப்பர் லீக் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு சென்னை அணிக்கு கை நழுவி போனது என்றே சொல்லலாம்.

மோசமான ஆட்டம்: ரசிர்கள் ஆதங்கம்

நேற்றைய ஆட்டம் சென்னை அணியின் மோசமான ஆட்டம் என்றே சொல்ல வேண்டும். 20 ஓவர்களில் மொத்தம் உள்ள 120 பந்துகளில் 51 பந்துகளை ரன் எதுவும் எடுக்காமல் சென்னை வீரர்கள் வீணாக்கி உள்ளனர். கடைசி 15 ஓவர்களில் வெறும் 6 பவுண்டரி மட்டுமே அடித்துள்ளனர். இந்த ஐபிஎல் தொடரில் முதலில் பேட் செய்து மிகவும் மோசமான குறைந்த ஸ்கோரை (125 ரன்கள்) எடுத்த அணி சென்னை மட்டுமே.

விளையாட்டில் வெற்றி, தோல்வி என்பது இயல்புதான். ஆனால், தோற்றாலும் போராடித் தோற்றால் அது விளையாட்டு வீரர்களுக்கு வெற்றியாகும். ஆனால் சென்னை அணியைப் பொறுத்தவரை வெற்றி பெற வேண்டும் என்கிற உணர்வே இல்லாதது போல் விளையாடியதாகவே ரசிகர்கள் ஆதங்கம் அடைந்தனர்.

தோனி பேட்டி

போட்டி முடிந்த பின்னர் கேப்டன் தோனி கூறியதாவது:-

முதல் இன்னிங்ஸை போன்று இரண்டாவது இன்னிங்ஸ் சுழற்பந்து வீச்சிற்கு சாதகமாக அமையவில்லை. வேகப்பந்து வீச்சிற்கே கை கொடுத்தது. கடந்த நான்கு ஐந்து போட்டிகளில் நாங்கள் எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்துள்ளது. பல மாற்றங்கள் செய்த போதிலும் முடிவு மட்டும் மாறவே இல்லை. லட்சக்கணக்கான ரசிகர்கள் போட்டியை பார்ப்பதால், இதில் மறைப்பதற்கு எதுவும் இல்லை.

இந்த ஆண்டு எங்களுக்குச சரியானதாக அமையவில்லை.அணியில் இருக்கும் இளம் வீரர்களுக்கு போதிய உத்வேகம் இல்லை. அதன் காரணமாகவே அவர்களை போட்டியில் களமிறக்கவில்லை. ஆனால் இனி வரும் ஆட்டங்களில் இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும். போட்டிகளில் அவர்கள் எந்தவித அழுத்தம் இல்லாமல் விளையாடலாம். எல்லா நேரங்களில் நாம் நினைத்தது போலவே நடக்க வேண்டும் என எதிர்பார்க்க முடியாது. ஆட்டத்தின் முடிவை வைத்துதான் எங்கே தவறு நடக்கிறது என்பதை கண்டறிய முடியும். போட்டி முடிவுகள் வீரர்களின் மனநிலையை பாதிக்காத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும்.

200வது ஆட்டம்

ராஜஸ்தானுக்கு எதிரான நேற்றைய ஆட்டம், ஐபிஎல் தொடரில் எம்.எஸ். தோனியின் 200-வது ஆட்டமாகும். 2008ம் ஆண்டு ஐபிஎல் போட்டி தொடங்கியது- முதல் சென்னை அணி கேப்டனாக தோனி இருந்து வருகிறார். சூதாட்ட புகார் சர்ச்சையில் சென்னை அணிக்கு 2 ஆண்டு தடை விதிக்கப்பட்டபோது, ரைசிங் புணே சூப்பர் ஜெயன்ட்ஸ் கேப்டனாக தோனி இருந்தார். ஐபிஎல் போட்டியில் அதிகமுறை விளையாடிய வீரர்கள் பட்டியலில் தோனிக்கு அடுத்த இடத்தில் சுரேஷ் ரெய்னா (194 ஆட்டங்கள்) உள்ளார்.

டெல்லி – பஞ்சாய் அணிகள் இன்று மோதல்:

13வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டியின் 38வது லீக் ஆட்டம் இன்று இரவு 7.30 மணிக்கு துபாயில் நடைபெறுகிறது. இதில் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ள டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், 7வது இடத்தில் உள்ள கிங்ஸ்லெவன் பஞ்சாய் அணியும் மோதுகின்றன. டெல்லி அணி இதுவரை 9 போட்டிகளில் விளையாடி 7 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. இதே போல் 9 போட்டிகளில் விளையாடியுள்ள பஞ்சாப் 3 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது. பஞ்சாப் அணி பிளே-ஆப் சுற்றுக்கு செல்ல அடுத்துவரும் அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் கடுமையாக போராடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *