செய்திகள்

நிலாவில் 3 ஏக்கர் நிலம் வாங்கி மனைவிக்கு கல்யாணப்பரிசு அளித்த அன்புக்கணவன்!

அஜ்மீர், டிச. 29–

சொன்னால் நம்ப மாட்டீர்கள், இது கதையல்ல, நிஜம். நிலாவில் 3 ஏக்கர் நிலம் வாங்கி மனைவிக்கு கல்யாணப்பரிசாக அளித்திருக்கிறார் அன்புக்கணவன்.

அவரவர்கள் தங்களின் திருமண நாளில் புடவை, நகை, கார், வீடு.. என்று வசதிக்கு ஏற்ப பரிசு கொடுத்திருப்பதைப் பார்த்திருப்போம். ஆனால்… ராஜஸ்தானைச் சேர்ந்த தர்மேந்திர அனிஜா, மற்றவர்களை எல்லாம் மூக்கில் விரல் வைத்து அசந்து போகும் அளவுக்கு நிலாவில் 3 ஏக்கர் நிலம் வாங்கி பரிசு அளித்திருக்கிறார் என்றால் எப்படி?

இந்த ருசிகரத் தகவல் பற்றி மேற்கொண்டு விவரம் வருமாறு:–

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரைச் சேர்ந்தவர் தர்மேந்திர அனிஜாவின் மனைவி சப்னா. இவர்கள் தங்களின் 8–வது ஆண்டு திருமண நாளை கடந்த 24ந் தேதி கொண்டாடினர். அப்போது திருமண நாள் பரிசாக மனைவிக்கு நிலாவில் 3 ஏக்கர் நிலம் வாங்கியதற்கான ஆவணங்களை வழங்கி அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார் தர்மேந்திரா.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ‘லூனா சொசைட்டி இன்டர்நேஷனல்’ என்ற நிறுவனம் மூலம் இந்த நிலத்தை தர்மேந்திர அனிஜா வாங்கியுள்ளார். ‘இதற்கான நடைமுறைகள் முடிய ஓராண்டு ஆனது. நிலாவில் நிலம் வாங்கிய ராஜ்ஸ்தானின் முதல் நபர் நானாகத்தான் இருப்பேன்’ என்றார்.

ஷாரூக்கான் வரிசையில்..

சில மாதங்களுக்கு முன், புத்த கயாவைச் சேர்ந்த நீரஜ் குமார் என்பவர் நிலம் வாங்கினார். ஓர் ஏக்கர் நிலம் வாங்கினார். நடிகர்கள் ஷாரூக் கான், மறைந்த சுஷாந்த் சிங் ராஜ்புத் ஆகியோர் இதற்கு முன் நிலாவில் நிலம் வாங்கியுள்ளதால் இவர்களிடமிருந்து உத்வேகம் பெற்று தானும் நிலம் வாங்கியதாக நீரஜ் குமார் கூறியிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *