செய்திகள்

புரெவி புயலால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை

சென்னை, டிச.3–

புரெவி புயலின் தாக்கம் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது.

வங்கக் கடலில் உருவான புரெவி புயல் திரிகோணமலையில் கரையை கடந்து தற்போது பாம்பனுக்கு 110 கி.மீ., குமரிக்கு 310 கி.மீ தூரத்தில் மையம் கொண்டுள்ளது. புரெவி புயல் அடுத்த 3 மணி நேரத்தில் மன்னார் வளைகுடா அருகே நிலைகொள்ளும் என்றும் பாம்பன் – கன்னியாகுமரி இடையே புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

‘புரெவிப் புயல்’ காரணமாக மீனவா்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக பாம்பன் துறைமுகத்தில் 7 ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது. பாம்பன் பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.

புயல் தாக்கம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் விடிய விடிய மழை பெய்தது.

நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், விழுப்புரம், தூத்துக்குடி, திருச்சி, ராமநாதபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் மழை பெய்தது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், நுங்கம்பாக்கம், திருவான்மியூர், அடையாறு, வேளச்சேரி, பாரிமுனை, ராயபுரம், மெரினா கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.

வேதாரண்யத்தில் 20 செ.மீ.

வேதாரண்யம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விடிய விடிய பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. வேதாரண்யததில் 20 செ.மீ மழை பதிவாகியுள்ள நிலையில் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.

இன்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிக அளவாக வேதாரண்யத்தில் 20 செ.மீ மழை பதிவானது.

காரைக்காலில் 16 செ.மீ., திருத்துறைபூண்டி 15 செ.மீ., நாகப்பட்டிணம் 14 செ.மீ., திருத்துறைப்பூண்டி 14 செ.மீ., மயிலாடுதுறை, ராமேஸ்வரம் 12 செ.மீ., முதுகுளத்தூர் 11 செ.மீ., சீர்காழி, குடவாசல், மஞ்சளாரு 10 செ.மீ., திருவாரூர், ஆடுதுறை, தாம்பரம், புதுக்கோட்டை 9 செ.மீ., நன்னிலம், பாம்பன், திருக்கழுக்குன்றம், பாண்டிச்சேரி 8 செ.மீ., கேளம்பாக்கம், வானூர், மன்னார்குடி, தரமணி, பரங்கிபேட்டை, கடலூர், நீடாமங்கலம் 7செ.மீ., மகாபலிபுரம், மதுராந்தகம், பொன்னேரி, தாமரைப்பாக்கம், கும்பகோணம், ஒரத்தநாடு 6செ.மீ., மீனம்பாக்கம், செய்யாறு, சிதம்பரம் 5செ.மீ., திருத்தணி, அண்ணா பல்கலைக்கழகம், டி.ஜி.பி. அலுவலகம், பூண்டி, அம்பத்தூர், திருவள்ளுர் 4செ.மீ., சென்னை நுங்கம்பாக்கம், ஊத்துக்கோட்டை, கொரட்டூர், செம்பரம்பாக்கம், பூந்தமல்லி, கொடைக்கானல் 3 செ.மீ.,மழை பதிவானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *