செய்திகள்

விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழை

வளிமண்டலச் சுழற்சி அதே இடத்தில் நீடிப்பு

விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழை

சென்னை, டிச.7–

புரெவி புயல் மன்னார் வளைகுடாவுக்கு வந்த நிலையில், அது படிப்படியாக வலுகுறைந்து தற்போது வளிமண்டலச் சுழற்சியாக அதே இடத்தில் நீடித்து வருகிறது. இதன் காரணமாக தென்மாவட்டங்கள் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இன்று அதே இடத்தில் வளிமண்டலச் சுழற்சியாக நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக இன்று (7–ந்தேதி) செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

நாளை (8–ந்தேதி) தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் .

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை பெய்த விவரம் வருமாறு:– மணியாச்சி – 16 செ.மீ., வைப்பார் – 12 செ.மீ., கடம்பூர் – 11 செ.மீ., கயத்தாறு, சீர்காழி, காரைக்கால், சித்தார் தலா 9 செ.மீ., தலைஞாயிறு, மயிலாடுதுறை, வாலிநோக்கம், நீடாமங்கலம் தலா 8 செ.மீ., குடவாசல், மணல்மேடு, பாளையம்கோட்டை தலா 7 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளான தாம்பரம், பல்லாவரம், போரூர் உள்ளிட்ட இடங்களில் இன்று அதிகாலை முதல் விட்டுவிட்டு மழை பெய்தது. இதேபோல, சிதம்பரம், திருச்சி, கும்பகோணம், சிவகங்கை, பரமக்குடி, மயிலாடுதுறையில் மிதமான மழை பதிவாகியுள்ளது. கடலூரில் ஒரு மணிநேரத்திற்கு மேலாக அதி தீவிர கனமழை பெய்தது. இதனையடுத்து குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *