செய்திகள்

வடமாநிலங்களில் இன்று முதல் 40 ‘குளோன்’ ரெயில்கள் இயக்கம்

வடமாநிலங்களில் இன்று முதல் 40 ‘குளோன்’ ரெயில்கள் இயக்கம்

வழக்கமான ரெயில்களை விட 3 மணி நேரத்துக்கு முன்னதாக போய் சேரும்

புதுடெல்லி, செப்.21–

பயணிகள் நெரிசல் மிகுந்த தடங்களில் வழக்கமான ரெயிலைப்போல மற்றொரு ரெயிலை இயக்க ரெயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. அந்த வகையில் வட மாநிலங்களில் இன்று முதல் 40 ‘குளோன்’ ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில்கள் வழக்கமான ரெயில் புறப்படுவதற்கு முன்னதாக புறப்பட்டு, சேர வேண்டிய இடங்களுக்கு 2 முதல் 3 மணி நேரத்துக்கு முன்னதாக போய் சேரும் வகையில் திட்டமிட்டப்பட்டுள்ளது.

அதிக வேகத்தில் செல்லும் இந்த ரெயில்களுக்கு நிறுத்தங்கள் குறைவாகவே இருக்கும். இந்த ரெயில்கள் அடிப்படையில் முற்றிலும் 3-ம் வகுப்பு ஏ.சி. பெட்டிகளை கொண்டிருக்கும் எனவும், 18 பெட்டிகளை கொண்ட இந்த ரெயில்களில் ஹம்சாபர் ரெயில்களுக்கான கட்டணம் வசூலிக்கப்படும்.

இன்று முதல் இயக்கப்படும் இந்த ரெயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு கடந்த 19-ந்தேதி தொடங்கியது. இதில் முதற்கட்டமாக 40 ரெயில்கள் (20 ஜோடி) இயக்கப்படுகின்றன. இதில் பெரும்பாலான ரெயில்கள் அனைத்தும் பீகார், மேற்கு வங்காளம், உத்தரபிரதேசம், டெல்லி, ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் இயக்கப்படுகின்றன.

காத்திருப்போர் பட்டியல் பயணிகள், கடைசி நேரத்தில் பயணத்தை திட்டமிடுவோர் மற்றும் அவசர பயணம் மேற்கொள்வோருக்கு இந்த ரெயில்கள் வரப்பிரசாதமாக அமையும். கொரோனா காலத்தில் பயணிகளின் தேவையை இது பூர்த்தி செய்யும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *