செய்திகள்

தமிழ்நாட்டில் இன்று முதல் ராகுல்காந்தி 3 நாள் பிரச்சாரம்

டெல்லி, பிப். 27–

தென் மாவட்டங்களில் தேர்தல் பரப்புரை மேற்கொள்வதற்காக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி, மூன்று நாள் பயணமாக இன்று தமிழ்நாட்டிற்கு வருகிறார்.

தமிழகத்தில் ஏற்கனவே கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். தொடர்ந்து தமிழகத்தில், ராகுல் காந்தி இன்று முதல் தூத்துக்குடியிலிருந்து தேர்தல் பரப்புரையை மீண்டும் தொடங்குகிறார்.

இதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் திருவனந்தபுரம் விமான நிலையம் வரும் ராகுல் காந்தி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் தூத்துக்குடி வருகிறார். பின்னர், வழக்கறிஞர்கள், உப்பளத் தொழிலாளர்களுடன் கலந்துரையாடும் அவர், தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார்.

அதைத் தொடர்ந்து, பயண வழியில் நாசரேத் பகுதியில் உள்ள பழமையான தேவாலயத்தை பார்வையிடும் அவர், நாங்குநேரி அருகே சுங்கச்சாவடி பகுதியில் நடைபெறும் தேர்தல் பரப்புரை பொதுக் கூட்டத்தில் பங்கேற்கிறார். இதையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *