செய்திகள்

என்ஜினீயரிங், எம்பிபிஎஸ் சேர்க்கையில் பில்லியர்ட்ஸ் – ஸ்னூக்கர் விளையாட்டுக்கும் இடஒதுக்கீடு: சபாஷ், எடப்பாடி பழனிசாமி

என்ஜினீயரிங், எம்பிபிஎஸ் சேர்க்கையில் பில்லியர்ட்ஸ் – ஸ்னூக்கர் விளையாட்டுக்கும் இடஒதுக்கீடு:

சபாஷ், எடப்பாடி பழனிசாமி

ஜெயலலிதா வழியில் முதல்வரின் ஊக்குவிப்பு, உற்சாகத்துக்கு பாராட்டு

சென்னை, அக்.18

கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு விளையாட்டையும், விளையாட்டு வீரர் வீராங்கனைகளையும் ஊக்குவித்து வரும் மாநிலங்களில் குறிப்பிட்டு சொல்லத்தக்க இடத்தில் தமிழகம் இருக்கிறது என்றால் அதற்கு முழு முதற்காரணம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நடவடிக்கைகளும், அவர் காட்டிய உற்சாகமும் தான். ஊக்கச் சலுகைகள் பல அளித்தும் நவீன உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி கொடுத்தும் ஜெயலலிதா முன்னோடியாகத் திகழ்ந்தார்.

உலகத்தரத்திற்கு இணையாக உருவாக்கப்பட்டிருக்கும் ஜவர்கலால் நேரு விளையாட்டு அரங்கம், செயற்கை ஓடுதளம், கால்பந்து மைதானம், நவீன உள்கட்டமைப்பு வசதிகளைக் கொண்டிருக்கும் பன்னோக்கு உள்விளையாட்டு அரங்கம், சர்வதேச தரத்தில் பேட்மிண்டன் மைதானம்… விளையாட்டுத்துறை ஊக்குவிப்பில் ஜெயலலிதாவின் அக்கறை ஆர்வத்துக்கு கண்ணெதிரில் பெருமைக்குரிய சாட்சிகள்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு குழுமம் பல்வேறு விளையாட்டுகளுக்கும் பிரபலமான திறமைமிக்க பயிற்சியாளர்களைக் கொண்டு பயிற்சி அளிப்பதோடு, இளைஞர்களை பயிற்றுவிக்க நிதி உதவியும் அளித்து வருகிறது.

ஒலிம்பிக் விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் அளித்து அவற்றை மேம்படுத்துவது தான் அரசுகளின் வாடிக்கை. முன்பெல்லாம் ஒலிம்பிக் விளையாட்டில் இல்லாத பில்லியர்ட்ஸ் ஸ்னூக்கர் விளையாட்டுக்கு அவ்வளவாக முக்கியத்துவம் இருக்காது. தரப்படவுமில்லை. இருந்தும், புரட்சித்தலைவி ஜெயலலிதா வழியில் அவரது அடிச்சுவட்டில் வெற்றி வலம் வரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதாவை போலவே தனி ஆர்வம் அக்கறை காட்டியதன் எதிரொலி, தொழில்முறை படைப்புகளில் (என்ஜினியரிங், எம்பிபிஎஸ்) சேர்வதற்கு விளையாட்டு துறைக்கான இட ஒதுக்கீட்டில் (கோட்டா) பில்லியர்ட்ஸ் ஸ்னூக்கர் விளையாட்டையும் சேர்த்திருக்கிறார்.

விளையாட்டுத் துறைக்கான இட ஒதுக்கீட்டிலும், மிஷன் இன்டர்நேஷனல் மெடடல்ஸ் ஸ்கீமிலும் பில்லியர்ட்ஸ் ஸ்னூக்கரை கட்டாயம் சேர்க்க வேண்டும் என்று இவ்விரு விளையாட்டுகளின் தமிழ்நாடு சங்கத்தின் தலைவர் சவுமினி ஸ்ரீனிவாசன் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை கொடுத்து வலியுறுத்தினார். உடனடியாக அந்த கோரிக்கையை எடப்பாடி ஏற்றார்.

கிரிக்கெட், கால்பந்து, பேட்மிண்டன், செஸ் ஆகிய விளையாட்டில் சிறந்து விளங்கும் வீரர் வீராங்கனைகளுக்கு தரப்படும் இட ஒதுக்கீட்டை போலவே, நடப்பு ஆண்டில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மதுரை பிரணவுக்கும், முந்தைய ஆண்டு எம்.ஓ.பி. வைஷ்ணவா மகளிர் கல்லூரியில் சென்னை அனுபமா ராமச்சந்திரனுக்கும் இடம் கிடைத்துள்ளது. இப்போது இருவரும் பில்லியர்ட்ஸ் ஸ்னூக்கர் வீரர் வீராங்கனைகள். எடப்பாடியின் இந்த நடவடிக்கை ஊக்குவிப்பு காரணமாக மாநிலம் தேசிய சர்வதேச அளவில் பில்லியர்ட்ஸ் ஸ்னூக்கர் விளையாட்டில் பதக்கங்களையும் பாராட்டுக்களையும் குவிக்கும் நிலை நிச்சயம் உருவாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *