செய்திகள்

அமெரிக்காவில் நடந்த காயிதே மில்லத் பேரவை மாநாடு: தமிழக இஸ்லாமிய தலைவர்கள் பங்கேற்பு

Spread the love

சென்னை, அக். 10

காயிதே மில்லத் போவை சார்பில் அமெரிக்கா, வடக்கு கரோலினா மாநிலம் சார்லோட் நகரில் மண்டல பல்கலைக்கழக நகர நூலக மண்டபத்தில் அமெரிக்க காயிதே மில்லத் பேரவை 2019ம் ஆண்டிற்கான மாநாடு மற்றும் தமிழ் மொழிச் சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றன.

அமெரிக்க காயிதே மில்லத் பேரவைத் தலைவர் கணினித்துறை வல்லுநர் வழக்கறிஞர் சல்மான் முஹம்மது தலைமை தாங்கி, எவ்விதப் பேதமும் பாராமல் அமெரிக்க வாழ் தமிழர்களுக்கு பேரவை ஆற்றிவரும் அரும்பணிகளையும், சேவைகளையும் குறிப்பிட்டுப் பேரவை மென்மேலும் சிறப்பாகப் பயணத்தைத் தொடரும் என்று தெரிவித்தார்.

கனடா நாட்டு காயிதே மில்லத் பேரவை ஒருங்கிணைப்பாளர் சலீம் வடமியான் வரவேற்றார். காயிதே மில்லத் வரலாற்று ஆவணப் படத்தைப் பேரவைச் செயலாளர் செய்யது பயாஸ் ஹுஸைன், பேரவையின் சாதனைகள் ஆவணப் படத்தைப் பேரவைப் பொருளாளர் ரஷீத் ஆலம் ஆகியோர் வழங்கினார்கள். மேரிலேண்ட் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ஷம்சுத்தீன் சையத், பதாஉர் ரஹ்மான், முஹம்மது யூசுப், அப்துர் ரவூப், திருச்சி ஸலாஹுத்தீன், பிலால், அப்துல் ஜப்பார், அப்துல் காதர், ஷபீர், பழைமைபேசி மணிவாசகம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொஹிதீன், தமிழ் மாநிலப் பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.ஆபூபக்கர் எம்.எல்.ஏ. ஆகியோர் ‘வேற்றுமை இல்லாத் தேசம் படைப்போம்’ என்ற தலைப்பில் நேரலை மூலம் சிறப்புரை ஆற்றினார்கள்.

இந்திய நாட்டின் பன்முகத் தன்மை, சமய நல்லிணக்கம் முதலியன காக்கப்பட வேண்டிய அவசியத்தை எடுத்துரைத்தனர். நேரலை நிகழ்வை பத்திரிகையாளர் எம்.கே. ஷாஹுல் ஹமீது ஏற்பாடு செய்திருந்தார்.

தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கப் பொதுச் செயலாளர், இஸ்லாமிய இலக்கியக் கழகத் தலைவர் பேராசிரியர் டாக்டர் சேமுமு முகமது அலி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு நிறைவுரை ஆற்றினார். அப்போது சங்க காலத் தமிழர் நாகரிகம், தமிழின் தொன்மை, இந்தியாவில் மத நல்லிணக்கம் பேணப்பட்டு வந்த வரலாறு, அமெரிக்க வாழ் தமிழ் குழந்தைகள் தமிழ் கற்க வேண்டியதன் அவசியம் குறித்து அவர் பேசினார்.

பேராசிரியருக்கு அமெரிக்க காயிதே மில்லத் பேரவை சார்பாக “ஆய்வியல் அறிஞர் ” விருது வழங்கிக் கவுரவிக்கப்பட்டது.

பேரவையின் வடக்கு கரோலினா மாநில ஒருங்கிணைப்பாளர் முஹம்மது தல்ஹா நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *