சிறுகதை

புதுவசந்தம் பூத்தது | சங்கீதா சுரேஷ்

Spread the love

‘‘மதனுக்கு திருமணமாகிவிட்டது. படித்த சிவில் என்ஜினீயர் படிப்புக்கு வேலை எங்கும் கிடைக்கவில்லை

கிடைக்கின்ற வேலையிலும் சம்பளம் குறைவாகவே இருந்தது.

அரசாங்க வேலையை நம்பி காலத்தை வீணாக்குவதை விட தனியார் நிறுவனங்களில் சேர்ந்து பணியாற்றலாம் என்றால் அங்கே…..

உழைப்புக்கேற்ற சம்பளம் இல்லை.

பொருளாதாரத் தேவையினால் குடும்ப பாரம் அதிகரித்தது இரண்டு பிள்ளைகளை படிப்பு தேவை இருக்கிறது.

பெண் பத்தாம் வகுப்பு படிக்கிறாள். இளையமகன் ஆறாம் வகுப்பு படிக்கிறான். இவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்து மிக்க உணவுகளை கொடுக்க போதிய வருமானம் இல்லை.

அழகான மனைவி. அவனை நம்பி வந்த மனைவியைக் காப்பாற்ற வழியில்லாமல் வெந்த சோற்றில் நொந்து வாழும் வாழ்க்கையாக மதன் வாழ்க்கை காணப்பட்டது

மதன் வாழ்வின் மீது பிடிப்பில்லாமல் கிடைத்த வேலையிலேயே வாழ்ந்து வந்தான்

சிறிய பையன் முகேஷ் மதனிடம் “அப்பா கவலைப்படாதீங்க; நான்

இருக்கேன்; படித்து முன்னேறி உங்களை காப்பாத்துவேன் ; நல்லா வச்சுக்குவேன்”

மதனின் மனதில் மகனின் வார்த்தைகள் ஒத்தடம் கொடுத்தது. உள்ளம் ததும்ப கண்ணீர் வழிந்தது.

வீட்டில் அடிப்படைத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாமல் வாழ்கிறேன் என்ன படிப்பு என்ன வேலை என்ன வாழ்க்கை என்று நொந்து கொண்டான்.

“வா கண்ணா” என அவனை மடியிலே உட்காரவைத்து அவன் தலையை கோதினான்.

மதன் மனதிற்குள் பேசினான் வாழ்க்கை புரியாத புதிர். சில கேள்விகளுக்கு பதில் உண்டு. சில கேள்விகளுக்கு பதில் இல்ல. புரியாத புதிர்களை இறைவனிடம் வைத்துவிடவேண்டும்

மதன் சிறு வயது குறும்புகள்; சிறு வயதில் அவன் படித்த நாட்களில் கண்ட இன்பங்கள் ; சந்தோஷங்கள் ; எதுவும் இப்பொழுது அவன் வாழ்வில் வருவதே இல்லை.

மனைவி மகேஸ்வரி அவன் தோளை தொட்டாள் “கவலைப்படாதீங்க’’.நிலைமை மாறும் ; இன்னைக்கு நிலைமை நாளைக்கு வராது ; நம்பிக்கையோடு இருங்க” அவனை ஆறுதல் படுத்தினாள்.

மகள் பாடப் புத்தகத்தை எடுத்து மும்முரமாய் படித்துக் கொண்டிருந்தாள்.

சிறுவயதிலிருந்து மதனுக்கு ஒரு பழக்கம் உண்டு தன் வாழ்வில் கஷ்டங்கள் நஷ்டங்கள் வரும்பொழுது அவனால் தாங்கிக் கொள்ளாத சூழ்நிலையில் அவன் வெள்ளைத் தாள்களை எடுத்து அதில் கவிதைகளும் கதைகளுமாய் எழுதுவான்

இப்பொழுதும் தன் பிரச்சனைகளை எல்லாம் மனதில் இருக்கிற பாரங்கள் எல்லாம் வெள்ளைத்தாளில் கொட்ட ஆரம்பித்தான்.

மனதுக்குள் நினைத்தான் “என்னைப்போல் படித்து முடித்து எத்தனையோ பேர் வேலை இல்லாமல் எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார்கள். அவர்கள் இதை படிக்கும் பொழுது தன்னைப் போல் இந்த பூமியில் எத்தனையோ பேர் இருக்கிறார்கள் என உணரட்டும். இதைப் படிக்கின்ற மக்கள் ஆறுதல் கொள்ளட்டும்; என்னைப்போல் உலகத்தில் எத்தனையோ பேர் இருக்கிறார்கள்”

அனால் அவர்கள் சும்மா மட்டும் இருக்கக் கூடாது.

ஏதாவது ஒரு வேலையை எடுத்து உழைத்துக்கொண்டே இருந்தால் பிழைத்துக்கொள்ளலாம் . முயற்சி திருவினையாக்கும்’’.

என்று அவன் கதையை எழுதி முடித்தான். அதை ஒரு கவரில் இட்டு இப்பொழுது சிகப்பாய் சிரிக்கும் தபால் பெட்டியில் அதை போட்டான்.

மறு வாரமே ஒரு பத்திரிகையில் அது பதிப்பில் வந்தது.

நண்பர்கள் அவனுக்கு போன் போட்டு “மதன் டேய் உனக்கு எழுத்து நல்லா வருது. ஏன்டா அந்த பீல்டில் நுழையக்கூடாது’’ என்று கூறினார்கள்.

மதன் இப்பொழுது தனக்குள்ளே கூறிக் கொண்டான் நான் என்ஜினீயரா? எழுத்தாளனா?

சார் என்ற குரல் கேட்டு எட்டிப்பார்த்தான்.

‘‘மதன்…. எழுத்தாளரா? இந்தாங்க . பத்திரிக்கை ஆபீசிலிருந்து பணம் அனுப்பியிருக்காங்க ’’ தபால்க்காரர் பணம் கொடுத்துவிட்டுப்போனர்.

மதன் வாழ்வின் பயணத்தை அதன் போக்கிலேயே தொடர்ந்தான். எழுத்தாளர் ஆகிவிட்டான்.

புதுவசந்தம் பூத்தது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *