சிறுகதை

புஷ்பாஞ்சலி | ராஜா செல்லமுத்து

Spread the love

தந்தக் கால்கள் எழில் போட, காந்தள் பூ கைகள் காற்றில் அபிநயம் காட்ட, கோயில் சிலையே மேடையில் ஆடுவது போல் ஆடிக்கொண்டிருந்தாள் காவியலட்சுமி.

அவளின் அப்பாவும் மேடையில் அவள் பின்னால். அவள் எங்கெல்லாம் ஆடிக்கொண்டு செல்கிறாளோ? அங்கெல்லாம் நகர்ந்து கொண்டே இருந்தார் அவளின் அப்பா. அவரே அவளின் குரு இருக்கட்டுமே! அதற்காக இப்படியா நடந்து கொண்டிருப்பது – எனக்கு அவர் மீது எரிச்சல் மேலோங்கியது.

பரத நாட்டியத்தின் முதல் முத்திரையான புஷ்பாஞ்சலியில் துவங்கிய மென் மல்லிகை அழகி காவியலட்சுமியின் கால்கள் ஆடியதா? கண்கள் பேசியதா? விரல்கள் விசாரித்ததா? என்ற வித்தியாசமில்லாமல் ஆடிக்கொண்டிருந்தாள் அந்தப் பஞ்சுப்பூ அழகி. அவளின் இமை அசைவுகளை இமை கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தனர் பார்வையாளர்கள். அப்பவும் அங்குமிங்கும் நடந்து கொண்டே இருந்தார் காவியலட்சுமியின் அப்பா.

‘‘என்னமா ஆடுறா..? அந்த சரஸ்வதியே சாஷ்டாங்கமா இவகிட்ட சரணாகதி அடஞ்ச மாதிரி இருக்கே – நடராஜரே ஆடுற மாதிரி ஆடுவா போல..’’என்று உச்சுக்கொட்டாத உதடுகள் இல்லை.

எல்லாம் ஆச்சர்யம் அடைந்து பேராச்சிரியத்தில் பெருமை பேசிக் கொண்டிருந்தனர். மேடையில் விதவிதமான வெளிச்சங்களை வெளியே உமிழ்ந்து கொண்டிருந்தன வண்ண வண்ண விளக்குகள்.

காவியலட்சுமி உடுத்தியிருந்த ஆடை அவள் உடலை விட்டுக்கொஞ்சங்கூட விலகவில்லை. அணிந்திருந்த ஆபரணங்களும் அவளிடம் அப்படியே ஒட்டிக்கிடந்தன. புஷ்பாஞ்சலியில் புகழ் கூட்டிய காவியலட்சுமி வர்ணத்தில் வண்ணங்கட்டி ஆடினாள் –

“என்னமோ ராகம்- என்னென்னமோ.. தாளம் – தலைய ஆட்டும் புரியாத கூட்டம்..’’ என்ற இசைஞானி இளையராஜாவின் பாடல் என்னை வந்து சற்று உரசி நின்றது. ஆடும் ஆட்டத்தின் இலக்கணமோ..? கேட்கும் பாட்டின் ராகமோ..? எதுவும் தெரியாமல் உட்கார்ந்த நான், ஆடும் காவியலட்சுமியை விட ஆட்ட அரங்கில் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்த பையனையே கவனித்தேன். ஒரு சிறுவன் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருக்க அவனின் அப்பா இது எதையும் சட்டை செய்யாமல் அப்படியே உட்கார்ந்திருந்தான்.-

‘‘இது யென்ன.. இப்படியொரு முட்டாள்த்தனம் . இவ்வளவு சிரமப்பட்டு ஆடிட்டு இருக்காங்க. இந்தாளு. அந்தப் பையன ஒக்காருன்னு சொல்ல மாட்டேன்கிறானே..’’ – என்று கோபம் கொப்பளித்துக் கொண்டு வந்தது . இதைவிடப் பெரிய சமாச்சாரம் என்னவென்றால் எங்கள் இருக்கைக்குப் பின் இருக்கையில் அமர்ந்திருந்தது அத்தனையும் குட்டீஸ்.

பட்டிமன்றப் பேச்சு போல வழவழ எனப் பேசிக் கொண்டே இருந்தன.

‘‘என்ன இது..? இவர்களெல்லாம் படித்தவர்கள் தானா..?’’ என்ற கோபம் குழந்தைகளை விட அவர்கள் பெற்றோர்கள் மேலேயே எனக்குப் பொத்துக்கிட்டு வந்தது .

இது எதையும் காதில் வாங்காமல் கடமையே கண்ணாய் ஆடிக்கொண்டிருந்தாள் காவியலட்சுமி. வர்ணத்தில் வாரி வழங்கிய அவளின் ஆடல் அலாரிப்பில் இன்னும் அள்ளியது. கூடியிருந்த கூட்டம் கை தட்டி ஆர்ப்பரித்தது.

‘‘இவளல்லவா..? ஆடலழகி.- இதுவல்லவோ நடனம்..’’ என்று முன்னணி ஆட்டக்காரர்களும் காவியலட்சுமிக்கு கட்டியங்கூறினர். ஆடலை மட்டுமல்ல பின்வரும் பாடலையும் கொஞ்சங்கூட குறையில்லாமல் பாராட்டினர்.

‘‘இந்த பாட்டு. இவங்கள ஆட வச்சிட்டு இருக்கிற குரு. ரொம்ப பெரிய ஆளா இருப்பாரு போலங்க. கர்ணாமிர்த சாகரத்துக்கே புதுசா உரை எழுதுவாரு போல..’’ என்று ஒருவர் சொல்ல

‘‘உண்மை தாங்க.. இவரு கர்நாடக சங்கீதத்துக்கே புதுசா உரை எழுதிட்டு இருக்காரு..’’ என்று சொல்ல அவரின் பேச்சும் தூய தமிழிலேயே தொட்டுத் தொடர்ந்தது. அத்தனையும் ஆடி முடித்த காவிய லட்சுமியைப் பாராட்டும் விதமாகப் பெரியவர்கள் மேடையேறினார்கள் . வார்த்தைக்கு வார்த்தை காவியலட்சுமியின் ஆடலைச் சிலாகித்துப் பேசினார்கள். அவளிடம் ஒருவர் பேச முற்பட்ட போது அவளால் வாய் திறந்து பேச முடியவில்லை.

‘‘ஏன் என்னாச்சு..?’’ என்று அந்தப் பெரியவர் கேட்க காவியலட்சுமிக்கு ஆபரேசன் நடந்திருக்கு என்று அவளின் அம்மா சொன்னார.

‘‘ஏன்?’’ என்று வினாவோடு வினவினார் அந்தப் பெரிய பேச்சாளர்.

‘‘இப்ப.. இங்க நீங்க பாத்தீங்களே..! இந்த ஆட்டத்துக்கான ஒத்திகைய அஞ்சு நாளைக்கு முன்னாடி வீட்டுல ஆடிப்பாத்திட்டு இருந்தா..! – அப்போ தரையில கெடக்கிற தண்ணியில கால் பட்டு தவறி கீழ விழுந்து காயமாயிருச்சு. இப்போ தாடையில பிளேட் வச்சிருக்கோம். டாக்டர் ஆடக்கூடாதுன்னு சொல்லிட்டாங்க. ஆனா நான் ஆடுறேன்னு சொல்லிட்டு இப்ப ஆடிட்டா..’’ என்று காவியலட்சுமியின் அம்மா சொல்ல கூட்டம் எழுந்து நின்று ஆர்ப்பரித்தது.

‘‘இது தாங்க கலை.. – இது தாங்க கடவுள்.. இவ ஆடலீங்க.. அந்த கலைவாணியே ஆடுன மாதிரி இருக்கு..’’ என்று பேச்சாளர் பேச

‘இப்போது தான் எனக்குப் புரிந்தது காவியலட்சுமியின் அப்பா ஏன்? அவள் ஆடும் திசை முழுவதும் நடந்து கொண்டிருந்தார் என்று. ஆட்டத்தை விட மகள் முக்கியமென்று இருந்திருக்கிறது ஒரு தகப்பனுக்கு .

முதலில் ஆடலைப் பாடலைப் புரிய முடியாமல் ரசித்துக் கொண்டிருந்த எனக்கு இப்போது காவியலட்சுமியின் ஆட்டத்தை விட அவள் அப்பாவின் அன்பு என்னுள் மேலோங்கி நின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *