செய்திகள்

தூய்மைக்கான தரவரிசை கணக்கெடுப்பு: பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்

சென்னை, ஜன.13–

மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சகத்தின் சார்பில் தூய்மைக்கான மதிப்பீடு – 2021 தரவரிசை கணக்கெடுப்பில் பொதுமக்கள் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களை பதிவு செய்யுமாறு சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறைஅமைச்சகத்தின் சார்பில் தூய்மை இந்தியா திட்டம் கடந்த 2014–ம் ஆண்டு அக்டோபர் 2 முதல் நகர உள்ளாட்சி அமைப்புகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் இந்தியா முழுவதிலும் உள்ள நகர உள்ளாட்சி அமைப்புகளில் கடந்த 2016–ம் ஆண்டு முதல் வருடந்தோறும் தேசிய அளவில் தூய்மை நகர கணக்கெடுப்பு பணிகள் நடத்தப்பட்டு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படுகிறது.

இக்கணக்கெடுப்பில் சென்னை மாநகராட்சி தொடர்ந்து பங்கு பெற்று வருகிறது. 2019–ம் ஆண்டு தூய்மைக்கான மதிப்பீடு கணக்கெடுப்பில் சென்னை மாநகராட்சி இந்திய அளவில் வேகமாக முன்னேறிவரும் நகரம் (Fastest mover city) என்ற விருதும், 2020–ம் ஆண்டுக்கான கணக்கெடுப்பில் திடக்கழிவு மேலாண்மையில் புதுமைப் படைத்தல் மற்றும் சிறந்த நடைமுறைகளை பின்பற்றுதலுக்கான விருதும் பெற்றுள்ளது.

இவ்வருடமும் நடைபெற உள்ள தூய்மை நகர கணக்கெடுப்பு பணி 2021 –ல் சென்னை மாநகராட்சியும் பங்கேற்க உள்ளது. இந்நிகழ்வில் பொதுமக்களின் கருத்துக்கு 1,400 மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட கணக்கெடுப்பு பணி 2021 ஜனவரி 4–ம் தேதி முதல் மார்ச் 31–ம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்நிகழ்வில், சென்னை மாநகரின் தூய்மை குறித்து தங்களது கருத்துகளை பொதுமக்கள் கட்டணமில்லா தொலைபேசி எண் 1969 என்ற எண்ணுக்கு அழைத்து தெரிவிக்கலாம். மேலும், www.swachhsurvekshan2021.org /citizenfeedback என்ற இணையதள முகவரி மற்றும் தூய்மைக்கான செயலியிலும் (Swachhata App) மற்றும் SS2021 VoteForYourCity என்ற செயலியிலும் தங்களது கருத்துகளை பதிவு செய்யலாம்.

தூய்மைக்கான மதிப்பீடு –2021–ல் சென்னை மாநகராட்சி முன்னிலை வகிக்க பொதுமக்கள் தங்களுடைய கருத்துகளை தெரிவித்து ஒத்துழைப்பினை வழங்கிடுமாறு கமிஷனர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *