நாடும் நடப்பும்

புதுவை திருப்பங்கள்

புதுவை சட்டப் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்ததில் ஆளும் காங்கிரஸ் – திமுக கூட்டணி தோல்வி அடைந்ததால் முதல்வர் நாராயணசாமி ராஜினாமா செய்துவிட்டார்.

புதுச்சேரியில் இப்படி ஆட்சிக்கவிழ்ப்பு புதிதில்லை. கட்சித்தாவுதல் காரணமாக ஆட்சி மாற்றம் ஏற்படுவதும் ஆட்சி கவிழ்வதும் பலமுறை நடந்துள்ளது. மீண்டும் நடக்கத்தான் போகிறது.

இம்முறை ஆட்சி கவிழ்ந்த போது அந்த சிறு யூனியன் பிரதேசத்தின் முன்னாள் கவர்னர் கிரன்பேடியின் ‘கறார்’ நடவடிக்கைகளும் முக்கியமான காரணம் என்பதை மறந்து விடக்கூடாது.

நாட்டின் மிகப் பிரபலமான பெண் காவல்துறை அதிகாரியாக வலம் வந்த கிரண்பேடி பணி ஓய்வுக்குப் பிறகு அரசியலில் குதித்தார். ஆரம்பத்தில் அண்ணா ஹசாரேவின் ஆதரவாளராக இருந்தார். அப்போது கேஜ்ரிவால் கட்சியை துவக்க அதில் ஆரம்ப கால தலைவர்களில் ஒருவராக கிரண்பேடி இருந்தார். சில வாரங்களில் கேஜ்ரிவாலின் கொள்கைகளை விமர்சித்து விட்டு பாரதீய ஜனதாவில் இணைந்தார்.

பிரதமர் மோடி ஆட்சியை பிடித்தபோது கிரண்பேடிக்கு ஆட்சியில் பொறுப்பு கொடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என வளைந்து கொடுக்காத தன்மை உடையவர் என்பதாலோ என்னவோ அவரை அமைச்சகப் பதவியில் அமர வைக்கவில்லை.

மீண்டும் மோடி தலைமையில் பாரதீய ஜனதா வெற்றிப் பெற்று ஆட்சியில் அமர்ந்த போது கிரண்பேடியையே புதுவை மாநில கவர்னராக நியமித்தது.

புதுவையில் மொத்தம் 30 எம்எல்ஏக்கள் உள்ளனர். ஒவ்வொரு எம்.எல்.ஏ.வுக்கும் அவரது தொகுதியில் சராசரியாக 25 ஆயிரம் வாக்களர்கள் கொண்டிருக்கிறது.

ஆகவே எம்எல்ஏக்கள் உருவாக்குவது கட்சியின் அடிப்படையில் மட்டுமின்றி தனிப்பட்ட செல்வாக்கும் முக்கிய அம்சமாகிவிடுகிறது.

அருகாமை தமிழகத்தில் அண்ணா திமுகவின் தலைமையும் திமுக தலைமையும் கூட புதுவையில் தங்களது கட்சியினர் தங்கள் ஆணைகளை சரிவர பின்பற்றுகிறார்களா? என்பதை உறுதி செய்துகொள்ள முடியாமல் திணறும் நிலையில் தேசிய கட்சிகள் காங்கிரசும் பாரதீய ஜனதாவும் கவர்னரை நியமிக்கும் அதிகார பலத்தால் சட்டமன்ற விவகாரங்களில் தலையீடு தலைவிரித்தாடும்.

அதே பாதையில்தான் கிரண்பேடியும் கடந்த நான்கு ஆண்டுகளாகவே புதுவை ஆட்சியாளர்களுக்கு தலைவலி கொடுத்து வந்தார்.

பொதுவாக பார்ப்பவர்களுக்கு மக்கள் நலன் மீது இருக்கும் அக்கறையால் தான் கிரண்பேடி அப்படி எல்லாம் செய்து வருகிறார் என்று நினைக்கலாம். ஆனால் உண்மையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களின் பிரதிநிதியாக இருக்கும் முதலமைச்சரையும் அமைச்சர்களையும் மீறி தனது அதிகார பலத்தை காட்ட ஆரம்பித்து அங்கு பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தி வருவது ஜனநாயக மரபுகளுக்கு ஒத்து வராது அல்லவா?

உண்மையில் கவர்னர் மக்கள் நலன் கொண்டே செயல்பட்டார் என்றாலும் மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்களை பணியாற்ற விடாமல் செய்து இருக்கிறார் அல்லவா?

இந்த முரண்பாடான நிலையில் பாரதிய ஜனதா வீசிய அரசியல் சதிவலையில் காங்கிரஸ் – திமுக கூட்டணியின் எண்ணிக்கை குறையும் அளவிற்கு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினமா செய்து வெளியேறி விட்டனர்.

இங்கும் சட்டமன்ற தேர்தல் தமிழகத்தில் நடைபெற இருக்கும் தேதியையொட்டி நடைபெற்றாக வேண்டிய நிலையில் இப்படி ராஜினாமா செய்து வெளியேறி என்ன பயன்? மேலும் சட்டமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டைக் கூட சமர்பிக்காத நிலையில் இப்படி ஆட்சிக் கலைப்பு அவசியமா?

எது எப்படியோ, புதுவையில் பாரதிய ஜனதாவின் புதிய கவர்னர் தமிழிசை சௌந்தராஜன் நாராயணசாமி அரசு ராஜினாமாவை ஏற்றுக் கொண்டுவிட்டார். மேலும் புது புது அரசியல் சிக்கல்களையும் அரசாட்சி அமளிதுமிளிகளையும் தேர்தல் ஏற்பாடுகளையும் நேர்த்தியாக செய்திட வேண்டும். அவரது அடுத்தகட்ட அறிவிப்புகள் கவர்னர் பதவிக்கான அங்கீகாரமாகவே அமைய இருக்கிறது என்பதை மறந்து விடக்கூடாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *