செய்திகள்

தமிழக பட்ஜெட் ; புதுச்சேரி மாநில அண்ணா தி.மு.க. வரவேற்கிறது : அன்பழகன் எம்.எல்.ஏ. கருத்து

Spread the love

புதுச்சேரி,பிப்.15–

தமிழக பட்ஜெட் அறிவிப்புகளை புதுச்சேரி மாநில அண்ணா தி.மு.க. வரவேற்கிறது என்று புதுச்சேரி மாநில அண்ணா தி.மு.க. சட்டமன்ற கட்சித் தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார்.

தமிழக பட்ஜெட் குறித்து கூறிய கருத்து வருமாறு :–

வளர்ச்சி பணிகள், தொலைநோக்கு திட்டங்கள், மக்கள் நலன், பெண்கள் பாதுகாப்பு, விவசாய நலன் உள்ளிட்ட அனைத்து விதத்திலும் மாநிலத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு தமிழக அண்ணா தி.மு.க. அரசு 2020–2021 ஆம் . ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளதை புதுச்சேரி மாநில அண்ணா தி.மு.க. வரவேற்கிறது. மத்திய அரசின் போதிய நிதி உதவி இல்லாத சூழ்நிலையிலும் மாநில அரசின் நிதி நிர்வாகம் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது.

ஏழை எளிய மக்கள் பயன்பெறுகின்ற விதத்தில் பொது வினியோகம் திட்டத்தில் குறைந்த விலையில் தரமான உணவு பொருட்களை மக்களுக்கு விநியோகம் செய்ய இவ்வாண்டு சுமார் 6 ஆயிரத்து 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது ஏழை எளியோருக்கு பயன்தரக் கூடிய செயலாகும். தினந்தோறும் பணிக்கு பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் சுமார் ரூபாய் 75 கோடி அளவில் அனைத்து பேருந்துகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்துவது என்பது மகத்தான ஒன்றாகும்.

குறிப்பாக கல்வி பயிலும் மாணவிகளுக்கும் பணிக்குச் செல்லும் பெண்களுக்கும் மற்ற ஆண்களினால் சொல்லொணா மன துயரத்திற்கு ஆளாக்கப்படுவதை தடுக்கும் விதத்தில் இந்த திட்டத்தை அண்ணா தி.மு.க. அரசு அறிவித்துள்ளது என்பது மிக உன்னதமான செயல் ஆகும். தமிழர் நாகரிகத்தின் தொன்மை உலகம் அறிந்து கொள்ளும் வகையில் கீழடி அகழ்வாராய்ச்சியில் புதிய அகழ் வைப்பகம் அமைத்திட, நிதி ஒதுக்கீடு செய்திருப்பது ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் பெருமை சேர்க்கும் செயலாகும்.

தமிழக டெல்டா மாவட்ட பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் சிறப்பு மண்டலமாக முதல்வர் அறிவித்துள்ளதை தி.மு.க. தலைவர் ஸ்டாலினும் அவரை பின்பற்றி திமுகவின் கிளை கழகமாக செயல்படும் தமிழக காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற தலைவரும் தமிழக டெல்டா மாவட்ட பகுதியை வேளாண் சிறப்பு மண்டலமாக அறிவிக்கும் உரிமை மாநில அரசுக்கு இல்லை. மத்திய அரசுக்குத்தான் உள்ளது என மாநில உரிமையை மத்திய அரசிடம் அடகு வைக்கும் விதத்தில் கருத்து தெரிவித்துள்ளனர். விவசாயம் என்பது மாநில பட்டியலில் உள்ளது. மத்திய பட்டியலில் அது இல்லை .இதைக்கூட புரிந்து கொள்ளாமல், அரைவேக்காட்டுத் தனமாக திமுகவும், காங்கிரசும் விவசாய மக்களை குழப்பிக் கொண்டு வருகின்றனர்.

வேளாண் சிறப்பு மண்டலமாக மத்திய அரசு தான் அறிவிக்க வேண்டும் என்றால் காங்கிரஸ், திமுக கூட்டணி ஆட்சியின் புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி ஏன் காரைக்கால் மாவட்டத்தையும் புதுச்சேரி பாகூரையும் வேளாண் சிறப்பு மண்டல பகுதியாக எப்படி அறிவித்தார் என்பதை காங்கிரசும்,திமுகவும் தெளிவுபடுத்த வேண்டும். சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த முஸ்லிம், கிறிஸ்தவ சமுதாய மக்களின் நலனுக்காகவும், அவர்களுடைய வழிபாட்டு தலங்களை சீர்படுத்தவும் அதிகப்படியான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

குடிநீர்ப் பிரச்சினை தீர்க்க கடல் நீரை குடிநீராக மாற்றுவதற்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விவசாய பயிர் கடன்களுக்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு அதிகப்படியான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது மூலம் நகர்ப்புற உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு தமிழகத்தின் மூலதன செலவினங்களை அதிகப்படுத்தும் விதத்தில் 26 சதவீத நிதியை மூலதன செலவினங்களுக்கு ஒதுக்கியிருப்பது என்பது தொலைநோக்கு சிந்தனை ஆகும்.

மொத்த பட்ஜெட்டில் உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 3 சதவீதத்துக்கு மேல் பற்றாக்குறை இருக்கக் கூடாத நிலையில், தமிழகத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.84 சதவீதம் பற்றாக்குறையாக மிகத்துல்லியமாக கணக்கிடப்பட்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுபோல் மிகத் துல்லியமாக கணக்கிடப்பட்டு தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டிற்காக தமிழகத்தின் துணை முதல்வர் ஓ.பி.எஸ்.க்கும், முதல்வர் ஈ.பி.எஸ்.க்கும் புதுச்சேரி மாநில அண்ணா தி.மு.க. பாராட்டுகிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *