நாடும் நடப்பும்

சுற்றுலாத் துறை சவால்களை சமாளிக்க தனியார் பங்களிப்பு

கொரோனா தொற்று பாதிப்பு பலரின் உடல் ஆரோக்கியத்தையும் பல நாடுகளின் பொருளாதாரத்தையும் தாக்கி பாதிப்பை ஏற்படுத்தியதை கண்டு வருகிறோம். கோவிட் தடுப்பூசிகள் வந்து விட்டதாகவே தெரிகிறது. அதேவேகத்தில் பொருளாதாரத்தை நிலைநிறுத்தவும் மத்திய – மாநில அரசுகள் முனைப்புடன் களம் இறங்கியுள்ளது.

கொரோனா பரவலைத் தடுக்க விரிவான ஊரடங்கை நாடெங்கும் கொண்டு வந்ததால் சரக்கு போக்குவரத்தும் பயணிகள் சென்று வருவதும் பாதிப்படைந்தது.

ஓட்டல்கள் முழுமையாக துவங்கப்படாத நிலையில் வெளியூர் செல்பவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருந்து வருகிறது. மொத்தத்தில் சுற்றுலாத்துறை செயலிழந்து செய்வதறியாது கையைப் பிசைந்து கொண்டு இருக்கிறது.

கடற்கரை ரிசார்ட்டுகள், ஆடம்பர 5 நட்சத்திர ஓட்டல்கள் உள்பட பலதரப்பட்ட சுற்றுலா அத்தியாவசிய அம்சங்கள் இயங்காததற்கு சர்வதேச விமான சர்வீஸ்கள் தூவங்கப்படாததால் என்பதும் புரிகிறது.

சர்வதேச பயணிகள் வருகை தடை செய்யப்பட்டதால் பெரும் தொற்றின் பரவல் நம் நாட்டில் குறைந்தது என்பதை புரிந்து கொண்டவர்கள் சர்வதேச விமான சர்வீஸ்கள் முழுமையாக இயங்குவதற்கு ஆதரவு தருவதில்லை.

இதனால் வர்த்தகமும் சுற்றுலாவும் தான் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இந்த சிக்கலில் இருந்து தப்பிக்க புதுமையான செயல் திட்டங்கள் அவசியமாகிறது.

கல்வித்துறையும் ஐடி அலுவலகங்களும் ஓரளவு முழுமையாக வீடியோ மற்றும் தொலைத்தொடர்பு நவீனங்களின் உதவியால் முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது.

ஆனால் சுற்றுலாத் துறையை நம்பியிருக்கும் முகவர்கள், வாகன சேவை நிறுவனங்கள், மனமகிழ் மையங்கள், அருங்காட்சியகங்கள், மிருக காட்சி சாலைகள் எல்லாம் வெறிச்சோடி செயல்பட முடியாமல் தவிக்கின்றனர்.

சமீபமாக சென்னைக்கு அருகாமையில் உள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் பகுதியில் சமீபத்திய புயல் மழையால் மதுராந்தக ஏரியும் அருகாமை நீர் நிலையங்களும் நிரம்பி இருப்பதால் பறவைகள் வரத்து அதிகரித்து வருகிறது.

அதிக மக்கள் நடமாட்டம் தற்போது இல்லாததால் பறவைகள் தங்களது இயல்பான இயற்கை வசதிகளை படு ஜாலியாக அனுபவித்து கொண்டிருப்பதை நம்மால் நினைத்துப் பார்க்க மட்டுமே தற்போது முடியும்.

விரைவில் தமிழக அரசு ஊரடங்கு தளர்வை மேலும் தளர்த்தும்போது பார்வையாளர்கள் வருகை வேடந்தாங்கலுக்கு அதிகரிக்கும். ஆனால் அதன் சுற்றுப்புற சூழலை கண்ணியமாய் காப்பதில் அக்கறை கொள்வார்களா? அதை உறுதி செய்யும் வகையில் தமிழக அரசு சுற்றுலா முகவர்கள் குழுக்களை அமைத்து நிபுணர்களின் வழிகாட்டுதலுடன் சுற்றுலா பயணிகள் சென்று வர ஏற்பாடு செய்யலாம்.

பிளாஸ்டிக் குப்பைகள், சுற்றுப்புற சூழலுக்கு தீங்கு செய்யும் கரும் புகை கக்கும் வாகனங்களை 3 கிலோமீட்டர்களுக்கு முன்பே நிறுத்தி விட்டு விசேஷ பேட்டரி வாகனங்களை மட்டும் அனுமதித்து புதுமையான சுற்றுலா வசதியை ஏற்படுத்தலாம்.

இதனால் இயற்கையை ரசிக்கும் குடும்பங்கள் வந்து செல்ல உரிய கட்டணத் தொகையைத் தர தயாராகவே இருப்பார்கள்.

இது போன்றே பாரம்பரிய நீலகிரி மலை ரெயிலை குழுமங்களுக்கு வாடகைக்குத் தர துவங்கியிருப்பதும் பாராட்டுக்குரியதாகும்.

மேட்டுப்பாளையம் – உதகை இடையே கடந்த 5–ம் தேதி காரமடையைச் சேர்ந்த தனியார் ஓட்டல் நிறுவனம், தங்கள் நிறுவன ஸ்டிக்கரை ஒட்டி மலை ரெயிலை இயக்கியது. இதில் ஒருமுறை பயணிக்க கட்டமாக ரூ.3 ஆயிரம் வசூலிக்கப்பட்டுள்ளது.

காரமடையைச் சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு தினம் உள்ளிட்ட 13 நாட்களுக்கு மலை ரெயிலை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக அந்த நிறுவனத்திடமிருந்து வைப்புத்தொகை, வாடகை கட்டணம் பெறப்பட்டுள்ளது.

வெறும் ரெயிலை மட்டுமே ரெயில்வே அளிக்கிறது. அதில் சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கப்படும் டீ, காபி, ஸ்நாக்ஸ் போன்றவை வாடகைக்கு எடுக்கும் தனியார் நிறுவனமே அளிக்கிறது. அதற்கேற்ப கட்டணத்தை நிர்ணயித்து தனியார் நிறுவனம் பயணிகளை அழைத்துச் சென்றுள்ளது.

ரெயில்வேக்கும் பயண கட்டணத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இதற்கு முன்பும் இதேபோன்று பிறந்த நாள் கொண்டாட்டம், திருமண நிகழ்ச்சி போன்றவற்றுக்கு செல்ல நாள் வாடகைக்கு ரெயில்கள் வழங்கப்பட்டு உள்ளன.

இதற்கு முன்பு கடந்த 2018–ம் ஆண்டு ஐரோப்பாவைச் சேர்ந்த தம்பதியினர் ரூ.3 லட்சம் செலுத்தி தாங்கள் இருவர் மட்டும் பயணிக்க மலை ரெயிலை வாடகைக்கு எடுத்துள்ளனர். 2019 டிசம்பரில் 71 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக மட்டும் இதேபோல வாடகைக்கு ரெயில் இயக்கப்பட்டது.

இப்படி புதுப்புது சிந்தனையுடன் சுற்றுலாத்துறையை மேம்படுத்த புது சிந்தனைகள் அவசியமாகிறது. அந்த அவசியத்தை புரிந்து கொண்டு புது திட்டங்கள் வரும்; வரவேண்டும் என்று எதிர்பார்ப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *