செய்திகள்

தாய்மொழியில் கற்றால் தான் படைப்பாற்றல் திறன் உயரும்

டெல்லி, பிப். 22–

தொடக்கக் கல்வியை தாய்மொழியில் பெறுவது குழந்தைகளின் சுயமரியாதையையும் படைப்பாற்றல் திறனையும் உயர்த்தும் என்பதால், குறைந்தபட்சம் 5 ஆம் வகுப்பு வரையிலாவது தாய்மொழி வழியில் கற்பிக்கப்பட வேண்டும் என்று துணை குடியரசுத் தலைவர் எம்.வெங்கையா நாயுடு தெரிவித்தார்.

மத்திய கல்வி மற்றும் பண்பாட்டு அமைச்சகம் ஏற்பாடு செய்த ஒரு இணைய வழியிலான தொடக்க அமர்வில் பேசிய துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு, தாய்மொழியின் பயன்பாட்டை ஊக்குவிக்க, ஐந்து முக்கிய துறைகளில் கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

தொடக்கக் கல்வியில் தாய்மொழியைப் பயன்படுத்துவதை வலியுறுத்துவது மட்டுமின்றி, நிர்வாகம், நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் அவற்றில் தீர்ப்புகளை வழங்குவதில் உள்ளூர் மொழிகளைப் பயன்படுத்துதல், உயர் மற்றும் தொழில்நுட்பக் கல்வியில் பூர்வீக மொழிகளின் பயன்பாட்டை படிப்படியாக அதிகரித்தல் ஆகியவற்றிலும் கவனம் செலுத்த வேண்டும் எனக் கூறினார்.

படைப்பாற்றலை உயர்த்தும்

மேலும் எல்லோரும் பெருமை, முன்னுரிமையுடன் தங்கள் தாய்மொழியை தங்கள் வீடுகளில் பயன்படுத்த வேண்டும். தாய்மொழியின் முக்கியத்துவத்தை, மாநில, உள்ளூர் மட்டங்களிலும் அதிகரிக்க வேண்டும். “நமது தாய்மொழிகள் மக்களிடையே ஒரு உணர்ச்சிபூர்வமான பதிலைத் தூண்ட முடியும் என்பதுடன், “நமது சமூக-பண்பாட்டு அடையாளத்திற்கான முக்கியமான இணைப்பாக, தாய்மொழி போற்றப்படுவதோடு, பாதுகாக்கப்பட்டு ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார்.

அவரவர் புரிந்துகொள்ளும் மொழியில் தொடர்பு கொள்வதன் மூலம்தான், மக்களை இணைக்க முடியும். ஆட்சி நிர்வாகத்தின் மொழி மக்களின் மொழியாக இருக்க வேண்டும். தொடக்கக் கல்வியை தாய்மொழியில் பெறுவது குழந்தைகளின் சுயமரியாதையையும் படைப்பாற்றல் திறனையும் உயர்த்தும் என்பதால், குறைந்தபட்சம் 5 ஆம் வகுப்பு வரையிலாவது தாய்மொழி வழியில் கற்பிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *