கொரோனாவில் இறந்த மருத்துவர்கள் போல்
பத்திரிகையாளர்களுக்கும் சலுகை வழங்க வேண்டும்
டெல்லி, டிச. 4-
மருத்துவர்கள், சுகாதார பணியாளர்களுக்கு வழங்கப்படுவதுபோல், கொரோனா தொற்றால் உயிரிழந்த பத்திரிகையாளர்களுக்கும் சலுகை வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு ‘இந்திய பிரஸ் கவுன்சில்’ கோரிக்கை விடுத்துள்ளது.
மத்திய – மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு, இந்திய பிரஸ் கவுன்சில் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- கொரோனா பரவல் காலத்தில், பத்திரிகையாளர்கள் பலரும் தங்களை பற்றி கவலைப்படாமல், மக்களுக்கு நாட்டு நடப்புகளை தெரிவிக்க, துணிச்சலுடன் பணியாற்றி வருகின்றனர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்த மருத்துவர்கள், சுகாதார பணியாளர்களை, கொரோனா போராளிகள் என அறிவித்து அவர்களின் குடும்பத்துக்கு உதவிகள் வழங்கப்படுகின்றன. இதேபோல், கொரோனாவால் இறந்த பத்திரிகையாளர்களையும், கொரோனா போராளிகள் என, அறிவித்து, அவர்களது குடும்பத்துக்கு, உதவி மற்றும் சலுகை வழங்க வேண்டும்.
ஹரியானா மாநிலத்தில், பத்திரிகையாளர்களுக்கு என, குழு காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை, அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பத்திரிகை கவுன்சில் மத்திய அரசுக்கு எழுதியுள்ள அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.