செய்திகள்

பில்லியர்ட்ஸ் – ஸ்னூக்கர் விளையாட்டு சாதனைக்காக இட ஒதுக்கீடு பெற்ற மதுரை பிரணவ், சென்னை அனுபமா: முதல்வருக்கு நன்றி

பில்லியர்ட்ஸ் – ஸ்னூக்கர் விளையாட்டு சாதனைக்காக இட ஒதுக்கீடு பெற்ற மதுரை பிரணவ், சென்னை அனுபமா:

முதல்வருக்கு நன்றி

‘‘தமிழக அரசின் ஊக்குவிப்பு, நிதி உதவியில் உலக சாம்பியன் ஆகி பெருமை சேர்ப்போம்’’

சென்னை, அக். 18

தொழில்முறை படிப்புகள் மற்றும் மிஷன் இன்டர்நேஷனல் மெடல்ஸ் திட்டம் (MIMS) ஆகியவற்றில் விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் பில்லியர்ட்ஸ் மற்றும் ஸ்னூக்கர் விளையாட்டு வீரர்களையும் சேர்க்க வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு பில்லியர்ட்ஸ் மற்றும் ஸ்னூக்கர் அசோசியேஷன் தலைவர் சவுமினி சீனிவாஸ் அயராது உழைத்தார். அவரது உழைப்புக்கு தற்போது கைமேல் பலன் கிடைத்துள்ளது. இதனால் திறமையான விளையாட்டு வீரர்களுக்கு நிதி உதவி கிடைக்கும்.

இவரது சீரிய உழைப்பு மற்றும் முயற்சியின் காரணமாக, இந்த கல்வியாண்டில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் சேர தமிழ்நாட்டைச் சேர்ந்த முதல் பில்லியர்ட்ஸ் மற்றும் ஸ்னூக்கர் வீரர் என்ற பெருமையை மதுரையை சேர்ந்த டி.யூ பிரணவ் நாத் பெறுகிறார்.

இளம் வீரரான பிரணவ் ஸ்னூக்கரில் உலக சாம்பியனாக ஆக வேண்டும் என கனவுடன் படிப்பிலும் கவனம் செலுத்த விரும்புகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் மதுரையில் உள்ள ஒரு கல்லூரியில் எலக்ட்ரானிக் மற்றும் கம்யூனிகேஷன்ஸ் என்ஜினியரிங் கல்வி பயில இருக்கிறார்.

கிரிக்கெட் பிரியராக இருந்த பிரணவ் பில்லியர்ட்ஸ் மற்றும் ஸ்னூக்கர் வீரராக மாறியதற்கு அவரது தந்தை தொழிலதிபரான டி.ஏ. உதயராஜாவின் தீவிர முயற்சியே காரணமாகும். தனது மகன் ஒரு விளையாட்டில் சாதனை படைக்க வேண்டும் என்று எண்ணினார். அப்போது மதுரையில் பில்லியர்ட்ஸ் மற்றும் ஸ்னூக்கர் தேசிய வீரரான பார்த்திபா ராஜேந்திரன் என்பவர் ஒரு அகாடமி நடத்தி வருவது தெரிய வந்தது. அந்த விளையாட்டு பற்றி எதுவுமே அறியாத பிரணவ், தனது தந்தையுடன் பாட் பிளாக் பில்லியர்ட்ஸ் மற்றும் ஸ்னூக்கர் அகாடமியை பார்வையிட்டார். அதில் ஈர்க்கப்பட்ட பிரணவ், ஒரு மாதத்திற்கு விளையாட அனுமதிக்குமாறு தனது தந்தையிடம் கேட்டுக் கொண்டார். தந்தையும் அதற்கு சம்மதம் தெரிவித்தார்.

அவரது பயிற்சியாளரும் வழிகாட்டியுமான பார்த்திபா, விரைவில் பிரணவ்வின் அபார திறமையை உணர்ந்தார். மேலும் அவரது உண்மையான திறனை வெளிப்படுத்த குறைந்தபட்சம் ஆறு மாதங்களாவது ஆகும், எனவே அவர் தொடர்ந்து விளையாடுவதை அனுமதிக்குமாறு அவரது தந்தையை கேட்டுக் கெண்டார். அவர் அனுமதியின்பேரில் பிரணவ் ஸ்னூக்கரை மிகவும் ஆர்வத்துடன் விளையாட ஆரம்பித்தார்.

2017ம் ஆண்டில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் நடந்த 16 வயதுக்குட்பட்ட உலக ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப்பில் பங்கேற்ற அவர் முதல் 32 இடங்களுக்குள் இடம் பிடித்தார். 2019ம் ஆண்டு புதுடெல்லியில் உள்ள இந்திய விளையாட்டு ஆணையத்தில் பயிற்சி மற்றும் தேர்வு முகாமுக்கு தென்னிந்தியாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

ஊடரங்கின்போது பிரணவ் ஒவ்வொரு நாளும் 4 மணி நேரம் பயிற்சி மேற்கொண்டார். பின்னர் இரண்டு மணி நேரம் சக வீரருடன் விளையாடினார். ஒருபுறம் என்ஜினியரிங் படிக்க வேண்டும் என்ற ஆவல் இருந்தபோதிலும் ஸ்னூக்கர் விளையாட்டில் சாதனை படைக்க வேண்டும் என்ற எண்ணமும் அவருக்கு இருந்தது.

உலக சாம்பியன் ஆக ஆசை

இது பற்றி அவர் கூறுகையில், நான் விரும்பி தேர்வு செய்த ஸ்னூக்கரில் நல்ல பயிற்சி பெற்று வருகிறேன். இருப்பினும் பில்லியர்ட்சிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறேன். எனவே நான் சேர இருக்கும் கல்லூரி, போட்டிகளில் பங்கேற்க நேரம் மற்றும் வாய்ப்பினை அளிக்கும் என்று நம்புகிறேன். உலக சாம்பியன் ஆக வேண்டும் என்பதே எனது ஆசை. இதற்கு ஊக்கம் அளிக்கும் தமிழ்நாடு பில்லியர்ட்ஸ் மற்றும் ஸ்னூக்கர் அசோசியேஷன் தலைவர் சவுமினி சீனிவாஸ், பயிற்சியாளர் பார்த்திபா மற்றும் பெற்றோருக்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

அனுபமா ராமச்சந்திரன்

இதேபோன்று மற்றொரு பில்லியர்ட்ஸ் வீராங்கனையான எம்.ஓ.பி. வைஷ்ணவ் கல்லூரியில் படிக்கும் மாணவி அனுபமா ராமச்சந்திரன் மிஷன் இன்டர்நேஷனல் மெடல்ஸ் திட்டத்தில் இடம் பிடித்துள்ளார். மயிலாப்பூர் கிளப்பில் பயிற்சி பெற்ற அனுபமா தனது அயராது உழைப்பு மற்றும் பயிற்சியினால் சர்வதேச போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்றுள்ளார். மாநில அரசும், தமிழ்நாடு பில்லியர்ட்ஸ் மற்றும் ஸ்னூக்கர் அசோசியேஷனும் தன்னிடம் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு மேலும் பல விருதுகளைச் சேர்க்க வேண்டும் என்ற கடும் முயற்சி மேற்கொண்டுள்ளார்.

இது பற்றி அவரது தந்தை ராமச்சந்திரன் கூறுகையில், 2014ம் ஆண்டு கோடை விடுமுறையில் எங்களுக்கு எந்த பயணமும் இல்லை. அனுபமாவுக்கு ஏதாவது விளையாட்டில் ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும் என்று எண்ணினேன். எனவே செஸ் அல்லது ஸ்னூக்கர் விளையாட்டு ஏதேனும் ஒன்றில் தேர்ந்தெடுக்கும்படி அனுபமாவை கேட்டபோது அவர் ஸ்னூக்கர் விளையாட்டை தேர்வு செய்தார். உடனே அதற்கான பயிற்சியும் மேற்கொண்டார். மயிலாப்பூர் கிளப்பில் கோடை கால பயிற்சி முகாமில் பங்கேற்று தீவிர பயிற்சி மேற்கொண்டார். 2015ம் ஆண்டிலேயே மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்றார். அந்த ஆண்டின் இறுதியில் ஜூனியர் ஸ்னூக்கர் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்தார் என்று பெருமையுடன் கூறினார்.

பின்னர் பெல்ஜியத்தில் நடைபெற்ற 18 மற்றும் 21 வயதுக்குட்பட்டோருக்கான உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்ற அவர் 2017ம் ஆண்டு ஜனவரி மாதம் சப் ஜூனியர் பிரிவில் வெற்றி பெற்று தேசிய அளவில் முதல் பட்டத்தை பெற்றார். பின்னர் ஒவ்வொரு ஆண்டும் அவர் பல கோப்பைகளை வென்றார். வித்யாமந்திர் பள்ளி, எம்.ஓ.பி. வைஷ்ணவ் கல்லூரி, தமிழக அரசு மற்றும் தமிழ்நாடு பில்லியர்ட்ஸ் மற்றும் ஸ்னூக்கர் அசோசியேஷன் ஆகியவை அவரது விளையாட்டு வாழ்க்கையைத் தொடர மிகுந்த ஆதரவையும் ஊக்கத்தையும் அளித்தன.

2017ம் ஆண்டில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் நடந்த 16 வயதுக்குட்பட்ட உலக ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப்பில் பங்கேற்ற அவர் வெற்றி பெற்று முதலிடம் பிடித்தார். அடுத்த ஆண்டு வெண்கல பதக்கம் வென்றார். சப் ஜூனியர், ஜூனியர் மற்றும் சீனியர் பிரிவுகளில் தேசிய அளவில் பட்டங்களை வென்றுள்ளார்.

பிரகாசமான எதிர்காலம்

தற்போது அனுபமா ராமச்சந்திரன் மிஷன் இன்டர்நேஷனல் மெடல்ஸ் திட்டத்தில் இடம் பிடித்துள்ளதால் சர்வதேச அளவில் அவரது விளையாட்டு திறன் மேம்படும். பயணம், பயிற்சி, உபகரணங்கள் மற்றும் உடைகள் வாங்குதல், உடற்பயிற்சி பயிற்சி கட்டணங்கள், வெளிநாட்டு பயிற்சியாளரின் உதவி தேவைப்படின் அதற்கான வெளிநாட்டு பயண செலவுகள் உட்பட பலவிதமான செலவுகள் இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும்.

தற்போது இரு ஸ்னூக்கர் மற்றும் பில்லியர்ட்ஸ் வீரர்கள் தமிழக அரசின் இந்த திட்டம் மூலம் பயன் அடைந்ததன் மூலம் வருங்கால வீரர்களும் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி இதில் சேர்ந்து பலன் அடைய நல்ல வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *