செய்திகள்

யார்–யாருக்கு தபால் ஓட்டு?

சென்னை, மார்ச் 2–

யார்–யாருக்கு தபால் ஓட்டு? என்று விவரத்தை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி, அரசுடன் இந்திய தேர்தல் ஆணையம் கலந்து பேசி, மேலும் சில நபர்களை அத்தியாவசிய சேவையின் கீழ் வரும் நபர்களாக அறிவிக்கிறது.

அதன்படி, ரெயிலை இயக்குபவர்கள் (லோகோ பைலட்), உதவி பைலட், ‘மோட்டார் மென்’, கார்டுகள், டிக்கெட் பரிசோதகர்கள் (டி.டி.இ.), ஏ.சி. பெட்டி உதவியாளர்கள், ரெயில்வே பாதுகாப்பு படை பணியாளர்கள், வாக்குப்பதிவு அன்று இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள ஊடகத்தினர், விமான போக்குவரத்து, கப்பல் போக்குவரத்தில் உள்ள நபர்கள் ஆகியோரை அத்தியாவசிய சேவையின் கீழ் வரும் நபர்களாக தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கிறது.

தமிழக வாக்காளர் பட்டியலில் இடம் பெற்று, வாக்குப்பதிவு அன்று (ஏப்ரல் 6-ந் தேதி) பணியில் இருப்பவராக சான்றளிக்கப்பட்டு, அந்த பணியின் மூலம் அவரால் தனது சொந்த வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க முடியாத சூழ்நிலையில், அவரை அத்தியாவசிய சேவைப்பணியின் கீழ் வரக்கூடிய, தபால் ஓட்டளிப்பதற்கு தகுதியுள்ள நபராக கருதப்படுவார்.

அந்த வகையில் வாக்குச்சாவடிகளில் ஆஜராக முடியாத அவர்கள், தபால் மூலம் வாக்களிக்க விரும்பினால் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் 12டி விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்து அளிக்க வேண்டும். இதுதொடர்பாக மேலும் விவரங்களுக்கு https://election.tn.gov.in என்ற இணையதளத்தை அணுகலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *