செய்திகள்

தமிழகத்தில் 80 வயதுக்கு மேற்பட்ட 12.91 லட்சம் பேருக்கு தபால் வாக்கு

தேர்தல் பாதுகாப்புக்கு 50 ஆயிரம் துணை ராணுவத்தினர்

தமிழகத்தில் 80 வயதுக்கு மேற்பட்ட 12.91 லட்சம் பேருக்கு தபால் வாக்கு

வாக்குப்பெட்டியை அலுவலர்கள் வீடுகளுக்கு எடுத்து செல்வார்கள்

சென்னை, மார்ச் 3–

தமிழகத்தில் 12 லட்சத்து 91 ஆயிரத்து 132 பேர் 80 வயதுக்கு மேற்பட்டோர் உள்ளனர். அவர்களுக்கு தபால் வாக்கு வழங்கப்படுகிறது.

சட்டமன்ற தேர்தலுக்கு 330 கம்பெனி துணை ராணுவத்தினர் வரவழைக்கப்படுவார்கள் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.

சட்டமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு நேற்று ஆலோசனை நடத்தினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சட்டசபை தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழு, வீடியோ கண்காணிப்பு குழு, வீடியோ பார்வையிடும் குழு, கணக்கீட்டு குழு ஆகியவை அமைக்கப்பட்டு உள்ளன. ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழு ஆகியவை ஒரு தொகுதிக்கு 3 குழுக்கள் என்ற வீதத்தில் அமைக்கப்பட்டு உள்ளன. அதன்படி 234 தொகுதிகளுக்கும் தலா 3 பறக்கும் படை என மொத்தம் 702 பறக்கும் படை அமைக்கப்பட உள்ளது.

மற்ற குழுக்கள், ஒரு தொகுதிக்கு ஒன்று என்றளவில் அமைக்கப்பட்டு உள்ளன. தேர்தல் நேரத்தில் கட்சிகள், வேட்பாளர்கள் மேற்கொள்ளும் செலவுகளை வீடியோ கண்காணிப்பு குழு படம் பிடித்து, வீடியோ பார்வையிடும் குழுவிடம் அளிக்கும். அதில் செலவு, தேர்தல் சம்பந்தப்பட்ட காட்சிகளை முடிவு செய்து, கணக்கீட்டு குழுவிடம் அளிக்கும். கணக்கீட்டு குழு, தேர்தல் செலவுகள் குறித்த மதிப்பீட்டை மேற்கொள்ளும்.

330 கம்பெனி துணை ராணுவம்

தமிழகத்திற்கு இதுவரை 45 கம்பெனி துணை ராணுவம் (ஒரு கம்பெனிக்கு 150 முதல் 160 வீரர்கள்) வரவழைக்கப்பட்டு உள்ளது. மேலும் 15 கம்பெனி துணை ராணுவம் இன்னும் 2 அல்லது 3 நாட்களுக்குள் தமிழகத்திற்கு வரவுள்ளது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் (2019-ம் ஆண்டு) 160 கம்பெனி துணை ராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு இருந்தனர். கடந்த சட்டமன்ற தேர்தலின்போது (2016-ம் ஆண்டு) 300 கம்பெனி துணை ராணுவத்தினர் வந்திருந்தனர். இந்த தேர்தலுக்கு 330 கம்பெனி துணை ராணுவத்தினர் வரவழைக்கப்படுவார்கள்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து தனியார் மற்றும் பொது இடங்களில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள், பேனர்களை அகற்றி இருக்கிறோம். அந்த வகையில் பொது இடங்களில் இருந்து 61 ஆயிரத்து 710 போஸ்டர்கள், பேனர்கள் அகற்றப்பட்டன. அது தொடர்பாக 10 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. தனியார் இடங்களில் இருந்து 21 ஆயிரத்து 133 போஸ்டர், பேனர்கள் அகற்றப்பட்டு, 36 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

தலைவர்கள் சிலையை மூட வேண்டியதில்லை

தேர்தல் நேரத்தில் மறைந்த தலைவர்களின் சிலைகளை மூட வேண்டும் என்ற அவசியம் எழவில்லை. இதுதொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கனவே உத்தரவுகளை பிறப்பித்து உள்ளது.

குமரி மாவட்டத்தில் சில பதவிகளுக்கான அரசாணையை முன்தேதியிட்டு அளித்ததாக கூறப்பட்டது. இதுகுறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கேட்கப்பட்டது. பிப்ரவரி 25-ந் தேதி அரசாணைகள் வழங்கப்பட்டதாக மாவட்ட தேர்தல் அதிகாரி தெரிவித்து உள்ளார்.

89 ஆயிரம் வாக்குச்சாவடிகள்

பொதுக்கூட்டங்கள் உள்ளிட்ட எந்த நிகழ்ச்சி என்றாலும் அங்கு மாநில அரசு அறிவித்துள்ள கொரோனா தடுப்பு நிலையான வழிகாட்டி நெறிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு முன்பு தேர்தல் நடத்தும் அதிகாரியின் அனுமதியை பெற வேண்டும். அப்போது அவர், என்னென்ன முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துவார்.

தமிழகத்தில் 68 ஆயிரத்து 320 வாக்குச்சாவடிகள் உள்ளன. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் அவற்றின் எண்ணிக்கையை 88 ஆயிரத்து 932 ஆக உயர்த்த இருக்கிறோம். கூடுதல் வாக்குச்சாவடிகளுக்கான ஒப்புதல் இன்னும் தேர்தல் ஆணையத்திடம் இருந்து வரவில்லை. வாக்குப்பதிவு அன்று 50 சதவீத வாக்குச்சாவடிகளில் ‘வெப் கேமரா’ மூலம் வாக்குப்பதிவு ஒளிபரப்பப்படும். பதற்றத்துக்குரிய வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு வீடியோவாக பதிவு செய்யப்படும்.

வீட்டில் இருந்தபடி தபால் வாக்களிப்பதற்கு 3 வகையினருக்கு சலுகை அளிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகிய 3 வகையினரின் பட்டியலை வாக்குச்சாவடி அளவிலான அலுவலர்கள் தயார் செய்வார்கள். தேர்தல் அறிவிப்பாணை வெளியான நாளில் இருந்து (வேட்புமனு தாக்கல் தொடங்கும் நாள்) 5 நாட்களுக்குள் அவர்களின் வீடுகளுக்கு அந்த அலுவலர்கள் சென்று, தபால் மூலம் வாக்களிக்க விருப்பமா? என்று கேட்பார்கள்.

அவர்கள் விருப்பம் தெரிவித்தால் 12–டி என்ற விண்ணப்பத்தை அளிப்பார்கள். அதை பூர்த்தி செய்து, கையெழுத்திட்டு அளிக்க வேண்டும். அதன்படி வாக்குப்பதிவு நாளன்று வாக்குப்பெட்டியை எடுத்துக்கொண்டு தேர்தல் அலுவலர்கள் அவர்களின் வீடுகளுக்கு செல்வார்கள். அப்போது தரப்படும் வாக்குச்சீட்டில் வாக்கை பதிவு செய்து பெட்டிக்குள் போட வேண்டும்.

அவர்களின் விரல்களில் மை வைக்கப்படாது. ஆனாலும் அவர்கள் யாராவது வாக்குச்சாவடிக்கு வந்து வாக்குப்பதிவு செய்ய முடியாது. ஏனென்றால், 12டி விண்ணப்பத்தில் கையெழுத்திட்டு அளித்ததும், அவர்களின் பெயர் இடம்பெற்றிருக்கும் பட்டியலில் உள்ள பெயர் ‘டிக்’ செய்யப்பட்டுவிடும். தமிழகத்தில் 12 லட்சத்து 91 ஆயிரத்து 132 பேர் 80 வயதுக்கு மேற்பட்டோர் ஆவர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *