சிறுகதை

பூக்கடை | ராஜா செல்லமுத்து

Spread the love

எப்போதும் பரபரவென ஜன சந்தடிகள் சங்கமித்துக் கிடக்கும் தி.நகர் ரயில்வே நிலையத்தில் அன்றும் மக்கள் கூட்டம் அலைமோதியே கிடந்தது.

மல்லிகையும் கனகாம்பரமும் ஒரு சேர சேர்ந்து மணக்கும் அந்தப் பகுதியில் சின்னப் பூக்கடை ஒன்றை நடத்தி வந்தாள் மாலதி. வீட்டில் வறுமை – சரியாகச் சம்பாதிக்காத குடிகாரக் கணவன், இரண்டு பிள்ளைகள், அவர்களின் படிப்புச் செலவு ,வாடகை வீடு, அது இதுவென்று அத்தனைக்கும் இந்தப் பூக்கடை வியாபாரமே ஆதாரம். இரண்டு குழந்தைகளுக்குத் தாயான மாலதிக்கு முப்பதுக்கும் நாற்பதுக்கும் இடைப்பட்ட வயது.

‘‘ஏன் இந்த ஆம்பளைங்க எல்லாம் இப்பிடி இருக்காங்க.. ஒருத்தனுக்குக் கூட பார்வை சரியா இல்லையே..’’ – என்ற மாலதி மாராப்பைச் சரியாக எடுத்து விட்டு பூ வியாபாரத்தில் கவனம் செலுத்தினாள்.

தி.நகர் ரயில்வே ஸ்டேசனை விட்டு வெளியே வரும் வலது கைப் பக்கம் திரும்பும் திருப்பத்தில் மாலதியின் பூக்கடை இருப்பதால் ரயில் ஏறப்போகும் மனிதர்களும் இறங்கி வருபவர்களும் மாலதியைப் பார்க்காமல் போனதே இல்லை. -காலை நேரத்தில் கொஞ்சம் பரபரப்பாக இருக்கும் பூக்கடை மத்தியான நேரத்தில் கொஞ்சம் மந்தம் பிடிக்கும். சாயங்காலம் மறுபடியும் கொஞ்சம் சூடு பிடிக்கும். அப்படியும் இப்படி மென்று தினமும் அறுநூறு, எழுநூறு ரூபாய்க்கு பூ விற்று விடுவாள் மாலதி. இவள் கண்ணியமாகச் செய்யும் இந்தத் தொழிலுக்கும் இப்போது போட்டி பிறந்தது, ஆங்காங்கே இன்னும் சில பூக்கடைகள் முளைத்து விட்டன.

‘‘மாலதி இப்ப ஏவாரம் எப்பிடி இருக்கு..?’’ என்று அடிக்கடி பூ வாங்கும் சந்தானம்மாள் மாலதியிடம் விசாரித்தாள்.

‘‘ஏதோ ஓடுதும்மா..’’ என்று கொஞ்சம் சலிப்பாகச் சொன்னாள் மாலதி.

‘‘ மாலதி.. ஏன் இதக் கேட்டேன்னா..? முன்னாடியெல்லாம் நீ.. ஒருத்தி தான் கடை வச்சிட்டு இருந்த.. இப்ப என்னடான்னா இங்கயே ரெண்டு மூணு பூக்கடை ஆகிப்போச்சே..! அதான் கேட்டேன்..’’என்று கொஞ்சம் அக்கறையுடன் கேட்டாள் சந்தானம்மாள்.

‘‘நீங்க கேட்டது ரொம்ப சரிம்மா.. இப்பவெல்லாம் நச்சுன்னு தும்முன்னாலே நாமளும் அப்பிடி தும்மனும்னுதான் இப்ப நிறைய பேர் இருக்காங்க. பொழைக்கிறதுக்கு இங்க போட்டி ரொம்ப அதிகம்மா.. இவங்களை எல்லாம் தாண்டித்தான் நாம நிம்மதியா மூச்சு விட முடியும். இல்ல.. மூச்சுக்கும் முன்னூறு பேரு போட்டி போட்டு வருவாங்க..’’ – என்று பேசிக் கொண்டிருக்கும் போதே ஒருவர் வர அவரைப் பார்த்ததும் பூவை விரித்து வைத்திருந்த பிளாஸ்டிக்கைத் தூக்கி உள்ளேயிருந்த பணத்தை எடுத்துக்கொடுத்தாள் மாலதி

இதைப் பார்த்த சந்தானம்மாள் எதுவும் பேசாமல் இருந்தாள்.

‘‘பூ வெல்லாம் எங்க வாங்குறீங்க மாலதி..?’’ என்று சந்தானம்மாள் மறுபடியும் பேச்சைத் தொடர,

‘‘எங்க வாங்குறது எல்லாம் கோயம்பேடு மார்க்கெட்டுல தான்..’’ என்று சொல்லிக்கொண்டே ஒரு வாடிக்கையாளருக்கு பூ கொடுத்துக் கொண்டிருந்தாள் மாலதி.

சற்று நேரத்தில் சந்தானம்மாள் பூக்கடைப் பக்கத்திலேயே உட்கார்ந்தாள்.

‘‘என்னோட பொண்ணு தெனமும் இந்தப் பக்கம் தானே வந்திட்டு போறா தெரியும்ல..’’ என்றாள் சந்தானம்மாள் .

‘‘ம்ம்.. – தெரியும்மா.. – ஒரு ஒடிசலான பொண்ணு தானே..! – எங்கிட்ட தானே பூ வாங்கிட்டுப் போகும்..’’ – என்று சந்தானம்மாவிடம் பேசிக் கொண்டிருக்கும் போதே இன்னொருவர் வர அப்பவும் பிளாஸ்டிக் காகிதத்தைத் தூக்கி உள்ளேயிருந்த பணத்தை எடுத்துக் கொடுத்தாள் மாலதி.

பணத்தை வாங்கியவன் நோட்டில் எழுதிக் கொடுத்து விட்டுச் சென்று விட்டான். இப்பவும் இதைக் கவனித்த சந்தானம்மாள். எதுவும் பேசாமல் அப்படியே உட்கார்ந்திருந்தாள். அப்படி அந்த அம்மா நினைத்துக் கொண்டிருக்கையில் மறுபடியும் இன்னொரு ஆள் வந்து நிற்க அப்பவும் பிளாஸ்டிக்கைத் தூக்கிக்கொண்டு பணத்தை எடுத்து அந்த ஆளிடம் கொடுக்க பணத்தை வாங்கிய அந்த ஆளும் ஒரு நோட்டில் குறித்துக் கொடுத்து விட்டுச் செல்ல இந்த முறை எப்படியாவது இதைக் கேட்டு விட வேண்டுமென்று தோன்றியது சந்தானம்மாவுக்கு.

‘‘மாலதி..’’ என்று அந்த அம்மா கூப்பிடும் போது பூக்களை நூலில் கட்டிக் கொண்டே

‘‘ம்ம்..’’ – என்று கேட்ட மாலதியிடம்

‘‘நான் கேக்குறேன்னு தப்பா நினைப்பியா..?’’ என்று அந்த அம்மா கேட்டாள்.,

‘‘இல்லம்மா – கேளுங்க..’’ என்று சொல்லிக் கொண்டே, நூலில் பூக் கட்டிக் கொண்டிருந்தாள்.

‘‘இல்ல.. நான் பாத்திட்டு தான் இருக்கேன். நாலஞ்சு பேர் இப்ப பணம் வாங்கிட்டுப் போனாங்களே..! – இவ்வளவு பேர்கிட்டயா தண்டல் வாங்கியிருக்க..?’’ என்று அந்த அம்மா கேட்டுக் கொண்டிருக்கும் போதே இன்னொரு ஆள் வந்து மாலதியிடம் நிற்க,

அப்பவும் அந்த ஆளிடம் பணம் கொடுத்தாள் மாலதி. பணத்தை வாங்கியவர் நோட்டில் எழுதிக்கொடுத்து விட்டு நகர்ந்தார்.

‘‘நீங்க..சொல்லி வாய் மூடல.. அதுக்குள்ள இன்னொரு ஆள் வந்திட்டாங்க.. என்ன அம்மா..’’ – என்று மாலதி சொல்லும் போதே சிரித்துக் கொண்டே சொன்னாள்.

‘‘அம்மா.. நீங்க.. நினைக்கிற மாதிரி இவ்வளவு பணத்த நான் வாங்கல..இந்த பூக்கடைதான் வட்டிக்குப் பணம் குடுத்தவங்களுக்கும் வட்டிக்கு பணம் வாங்குனவங்களுக்கும் சென்டர் பாய்ண்ட்..’’ என்று மாலதி சொன்னதும் அந்த அம்மா விழித்தாள்.

‘‘என்னம்மா அப்பிடிப் பாக்குறீங்க..? என்கிட்ட தான் பணத்த வாங்குனவங்க பணம் குடுப்பாங்க.. பணத்த வட்டிக்குக் குடுத்தவங்க என்கிட்ட தான் வந்து வாங்குவாங்க..’’ என்று மாலதி சொன்னபோது,

‘‘ஓ.. அப்பிடியா..?’’

‘‘ஆமாம்மா..’’

‘‘இதுனால ஒனக்கு என்ன பிரயோசனம்..?’’ மாலதி என்று அந்த அம்மா கேட்ட போது

லேசாகச் சிரித்த மாலதி,

‘‘என்னம்மா.. ஏதோ கொஞ்சம் பணம் தருவாங்க.. அவ்வளவு தான்.. பூ விக்கிறதோட இதையும் பண்றேன்..’’ என்று மாலதி சொல்லிக் கொண்டிருக்கும் போது இன்னொரு நபர் வந்து நிற்க பணத்தை எடுத்துக் கொடுத்தாள் மாலதி

‘‘ம்ம்..’’ – இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சந்தானம்மாவுக்குத் தலையே சுற்றியது.

‘‘இவ்வளவு பேருகிட்டயா..! இங்க இருக்கிறவங்க தண்டல் பணம் வாங்கியிருக்காங்க..?’’ என்று அந்த அம்மா ஆச்சரியத்தில் கேள்வி கேட்டாள்.

‘‘என்ன பண்றதும்மா.. எல்லாம் பணக்காரங்க இல்லையே..! – இப்பிடி அப்பிடின்னு கடன ஒடன வாங்கித்தான் வாழ்ந்திட்டு இருக்காங்க..’’என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது அழுது கொண்டே ஒரு பெண் வந்தாள். அவளைப் பார்த்ததும் மாலதிக்குச் சிவுக்கென்றிருந்தது.

‘‘மாலதி.. தண்டலுக்கு குடுக்க வேண்டிய காச.. என்னோட புருசன் குடிச்சிட்டு வந்திட்டான்..காசு குடுத்தவன் ஒரு மொரட்டுப் பய.. கண்டபடி திட்டுவான்.. இப்ப என்ன பண்றதுன்னு தெரியல..’’ என்று அந்தப் பெண் அழுதாள்.

‘‘நீங்க ஒண்ணும் கவலப்படாதீங்க..வீட்டுக்குப் போங்க..நான் பாத்துக்கிறேன்..’’ என்று மாலதி சொன்னாள்.

‘‘எப்படிம்மா பணம் குடுக்கலன்னா.. அந்த ஆளு குடிச்சிட்டு வந்து வீட்டுல சண்ட போடுவானே..’’ என்று மறுபடியும் அந்தப் பெண் அழுதாள்.

‘‘அக்கா நீங்க.. பயப்படாதீங்க.. நீங்க, பணம் குடுக்க லேட்டானதும் நான் குடுத்திட்டேன் – வருத்தப்படாதீங்க.. வீட்டுக்குப் போங்க..’’ என்று மாலதி சொன்னதும் படாரென மாலதியின் காலில் விழுந்தாள் அந்தப் பெண்

‘‘அக்கா எந்திருக்கா..’’ என்று அந்தப் பெண்ணை மாலதி தூக்கி விட ரயில்வே நிலையத்திற்கு வந்து போகும் ஆட்கள் அத்தனை பேரும் இந்த நிகழ்வைப் பார்த்துக் கொண்டே சென்றனர்.

‘‘மாலதி.. ஒனக்கு இருக்கிற கஷ்டத்தில..ஒரு மாசமா நீ தானே..! என்னோட பணம் முழுசும் கட்டிட்டு இருக்க.. இந்தக் கடன நான் எப்படி ஒனக்கு திருப்பிக் குடுக்கப் போறேன்..’’ என்று அந்தப் பெண் அழ அவளைத் தேற்றினாள் மாலதி

‘‘நீங்க ஒண்ணும் கவலப்படாதீங்க அக்கா.. உங்களுக்கு பணம் எப்பக் கெடைக்குதோ அப்ப எனக்குக் குடுங்க..’’ என்று மாலதி சொன்னாள்.

இது அத்தனையும் பார்த்துக் கொண்டிருந்தாள் சந்தானம்மாள்.

அப்போது சந்தானம்மாளின் மகள் வந்து சேர

‘‘வாரேன் மாலதி..’’ என்று சொல்லிய அம்மாவும் மகளும் பூக்கடையை விட்டு வெளியே கிளம்பினர்.

‘‘மாலதி.. நீ.. என்ன ஒவ்வொரு மாசமும் வாடகைய சரியா தர மாட்டேன்கிற..? இந்த மாசம் நீ.. வாடகைய சரியான தேதியில தரல அவ்வளவு தான். சட்டி பொட்டியல்லாம் தூக்கித் தூரப் போட்டுருவேன்..’’ என்று வீட்டு ஓனர் திட்டிய திட்டும்

‘‘அம்மா இன்னைக்கு ஸ்கூல் பீஸ் கட்டலன்னா..! என்னைய வெளிய போகச் சொல்லுவாங்கம்மா..’’ என்று மகள் சொன்னதும் மளிகைக் கடைக்காரனிடம் வாங்கிய பழைய பாக்கி என்று எல்லாம் மாலதியின் மனதில் வந்து வந்து போனது. இது அத்தனையும் வெளியில் சொல்லாமல்

‘இதெல்லாம் பெரிய விசயமா என்ன..?’ பாத்துக்கிரலாம் என்று நினைத்துவிட்டு தன் வறுமையை மறைத்துக்கொண்டு அவள் வீட்டுக்கே பற்றாக்குறை என்று தெரிந்தும் இது எதையும் பொருட்படுத்தாமல் அந்தப் பெண்ணுக்கு உதவியது மாலதியின் மனதில் அப்படியொரு பூரிப்பு விளைந்து நின்றது.

‘‘பாவம் கைப்புள்ளக்காரி தண்டல்காரன் பணம் கட்டலன்னா.. அந்த அக்காவ கண்டபடி திட்டுவான்.. நாம எப்பிடியும் சமாளிச்சுக்கிரலாம்..’’ என்ற மாலதிக்குப் பொங்கிய அழுகையின் அடர்த்தியில் அவளின் கண்களிலிருந்த கண்ணீர் , கீழே கிடந்த பூக்களில் விழுந்தது.

அவள் கண்ணீரில் நனைந்து கிடந்த பூக்களை எடுத்து அழுது கொண்டே நாரில் கட்டிக் கொண்டிருந்தாள் மாலதி.

கீழே கிடந்த மல்லிகை மொட்டுகள் பூச்சரங்களாய் உருமாறிக் கொண்டிருந்தன. அவள் விழிகளிலிருந்து விழும் கண்ணீர் மட்டும் உருவம் கொள்ளாமலேயே உடைந்து உருகிக் கொண்டிருந்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *