புதுடெல்லி, ஜன. 13
பொங்கல் திருநாளையொட்டி இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:
உலகம் முழுக்க பண்டிகைகள் பல படையெடுத்து வந்தாலும், திருவிழாக்கள் பல தேர்க்கோலம் பூண்டாலும், அத்தனையும் தாண்டி உயர்ந்து நிற்கும் ஒற்றைத் திருநாள் பொங்கல் திருநாள். குடிசையில் வாழ்ந்தாலும், கோபுரத்தில் இருந்தாலும் அனைவரும் நம்பி வாழ்வது உணவைத்தான், உழவர்களைத் தான். அந்த வகையில் எத்தனை பண்டிகைகள் வந்தாலும் அத்தனையையும் தாண்டி உலகமே கொண்டாட வேண்டிய திருவிழா பொங்கல் திருநாள்.
உழவர்களை போற்றும் வகையில், உயர்ந்ததொரு விழாவை உன்னதமாய் கொண்டாடுவதில் தமிழர்களே தலைநிமிர்ந்து நிற்கிறார்கள். உணவில்லையேல் இந்த உலகமில்லை என்பதை அனைவருக்கும் உணர்த்துவதற்கு உகந்த நாள் இது. உணவை உருவாக்கித் தந்து, உலகத்தை இயக்கும் உழவர்களை கொண்டாடும் நாள் இது. சாதி, மதம், இனம், மொழி எல்லாவற்றையும் கடந்து அனைவரும் உயிர் வாழ, பயிர் வளர்க்கும் உழவர்களுக்கு நாம் வாழ்நாள் முழுக்க நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.
அந்தவகையில் விவசாய பெருமக்கள் அனைவரையும் இந்த நன்னாளில் தீராத நன்றியோடு நினைத்துப் பார்ப்போம்; பொங்கல் திருநாளில் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி பொங்கட்டும்; வருங்காலங்களில் வளர்ச்சி செழிக்கட்டும்! அனைவருக்கும் இந்திய ஹஜ் அசோசியேஷன் சார்பில் மனமார்ந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சியும், மனநிறைவும் கொள்கிறேன். இவ்வாறு அந்த வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.