சென்னை, ஜன. 13
காருண்யா நிகர்நிலைப் பல்கலைக்கழக வேந்தரும், ‘ஏசு அழைக்கிறார்’ மற்றும் சீஷா சமுதாயத் தொண்டு நிறுவனருமான டாக்டர் பால் தினகரன் பொங்கல் வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:
‘கண்ணீரோடு விதைக்கிறவர்கள் கம்பீரமாக அறுப்பார்கள்’ என்பது வேத வாக்கு. நன்மையை விதைத்தால் நன்மையை அறுவடை செய்வோம் என்பதே இந்த அறுவடை திருநாளாம் பொங்கல் சொல்லும் செய்தி. இந்த பொங்கல் திருநாளில் அன்பு பொங்கிடவும், நன்மை பெருகிடவும், விவசாய நல் இதயங்களின் வாழ்வில் இன்பம் நிறைந்திடவும் இதயப்பூர்வமாக வாழ்த்துகிறேன்.
இவ்வுலகில் தேவ குமாரனாகிய ஏசு கிறிஸ்து வெற்றி வேந்தராய் வாழ்ந்தார். மனு மக்களுக்காய் பாடுபட்டார். இறுதியில் தம் உயிரையும் பொருட்படுத்தாது கல்வாரி சிலுவையில் தம்மைத்தாமே தியாக பலியாய் அர்ப்பணித்தார். அவர் மரித்து அடக்கம் பண்ணப்பட்டு 3ம் நாளில் உயிரோடு எழுந்து பரமேறிச் சென்றார். நாமும் இவ்வுலகில் வாழும் குறுகிய நாட்களில் நம் வாழ்க்கையை பரிசுத்தமாய் காத்துக் கொள்வதோடு, இவ்வுலக வாழ்வை முடித்து, அங்கு நித்தியநித்திய காலமாய் அவரோடு வாழ்ந்து அவரது அன்பை என்றென்றும் ருசிக்கும்படி வழி திறந்தார்.
ஆம் தேவாதி தேவன் மனுமக்களின் பாவங்களை மன்னித்து அவர்களை ரட்சிக்கவே மனுவுருவில் வெளிப்பட்டார். நாம் அவரது அன்பை ரட்சிப்பின் அனுபவத்தை ருசிக்க, அவரை ரட்சகராய் இதய தெய்வமாய் ஏற்றுக் கொள்வோம். அப்போது ரட்சகம் ஏசு நம் பாவங்களை நீக்கி நம்மை ரட்சிப்பார். தம் பக்கமாய் சேர்த்துக் கொள்வார். நித்தி ஜீவனைத் தந்து மகிழ்விப்பார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.