செய்திகள்

காவல் துறை 24 மணி நேரமும் தீவிர காண்காணிப்பில் ஈடுபடவேண்டும்: கலெக்டர் அண்ணாதுரை அறிவுரை

Spread the love

விழுப்புரம்,பிப்.7-

விழுப்புரம் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் பொருட்டு காவல் துறையினர் 24 மணி நேரமும் தீவிர காண்காணிப்பில் ஈடுபடவேண்டும் என்று மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை அறிவுறுத்தினார்.

பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நெருக்கடியான சூழ்நிலையின்போது எடுக்க வேண்டிய தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக விழுப்புரம் மாவட்ட பாதுகாப்பு குழுவின் ஆலோசனைக் கூட்டம் விழுப்புரத்தில் நேற்று நடைபெற்றது.

மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை தலைமை வகித்து ஆலோசனை வழங்கிப் பேசினார். அதில், மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கும் பொருட்டு காவல் துறையினர் 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும். ரௌடிகளை கண்டறிந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெட்ரோல், வேதிப் பொருள்கள் மற்றும் வேறு வகையான பொருள்கள் மூலம் திடீர் என சமூக விரோதத் தாக்குதல் போன்ற பாதிப்புகளை கண்காணித்து தடுக்க வேண்டும். கடலோரப் பகுதிகளில் ஊடுருவலை தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கை தகவல் பலகை, பொதுமக்கள் அறியும் வகையில் வைத்திருப்பதுடன், அதில் அவசரகால தகவல்களாக காவல் துறை, தீயணைப்புத் துறை, பொது சுகாதாரத் துறை மற்றும் கட்டுப்பாட்டு அறை போன்ற தொலைபேசி எண்கள் பதிவிடுதல் வேண்டும்.

பொதுமக்கள் அதிகமாக கூடக் கூடிய இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படவேண்டும். குறிப்பாக, பேருந்து நிலையம், திரையரங்குகள், பள்ளிகள், கோயில்கள் ஆகிய பகுதிகளில் சந்தேகப்படும் வகையில் செயல்படும் நபர்ககளை கண்டறிந்து கட்டுப்படுத்தும் வகையில் அதன் மூலம் கண்காணிக்க வேண்டும்.

நீர்நிலைகளில் எதிர்பாராத உடைப்பு ஏற்பட்டால், நிகழும் அசம்பாவிதங்களை தடுப்பது குறித்து, அனைத்துத் துறை அலுவலர்களால் முன்கூட்டியே திட்டமிட்டு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென, மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை அறிவுறுத்தினார்.

இந்தக் கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயா.பி.சிங், திண்டிவனம் சார்-ஆட்சியர் எஸ்.அனு மற்றும் முக்கியத் துறைகள் சார்ந்த உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *