செய்திகள்

வாகன விபத்தில் இறந்த 2 காவலர்கள் குடும்பத்திற்கு அதிகாரிகள், காவலர்கள் வழங்கிய ரூ. 28 லட்சம் உதவி தொகை

சென்னை, மார்ச் 4–

வாகன விபத்தில் இறந்த ஆயுதப்படையை சேர்ந்த இரண்டு காவலர்களின் குடும்பத்திற்கு சென்னை பெருநகர காவலில் பணிபுரியும் காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் அளித்த ரூ.28 லட்சத்திற்கான காசோலையை கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் வழங்கினார்.

இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி தாலுகா, எமனேஸ்வரம் அஞ்சல், கமலா நேரு நகரைச் சேர்ந்த பி.ரவீந்திரன் மற்றும் திருப்பூர் மாவட்டம், கொமரலிங்கம் மேற்கு கிராமத்தைச்சேர்ந்த வி.கார்த்திக் ஆகிய இருவரும் 2013ம் ஆண்டு தமிழ்நாடு காவல் துறையில் இரண்டாம் நிலைக் காவலராக பணிக்கு சேர்ந்து, சென்னை பெருநகர காவல் ஆயுதப்படை-2 புனித தோமையர் மலையில் பணிபுரிந்து வந்தனர். ரவீந்திரனுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். கார்த்திக்கு திருமணமாகி மனைவி உள்ளார்.

மேற்படி ரவீந்திரன் மற்றும் கார்த்திக் ஆகிய இருவரும் சேர்ந்து கடந்த 19.01.2021 அன்று அதிகாலை 3.50 மணியளவில் ஆவடியிலிருந்து கோயம்பேடு பேருந்து முனைய பாதுகாப்பு பணிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, வழியில் அம்பத்தூர் எஸ்டேட் ரோடு சந்திப்பில் , கார் மோதியதில் உயிரிழந்தனர்.

விபத்தில் இறந்த காவலர்களின் குடும்பத்திற்கு உதவும் வகையில் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில் சென்னை பெருநகர காவலில் பணிபுரியும் காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் சுய விருப்பத்தின் பேரில் மொத்தம் ரூ.28 லட்சம் பணம் பெறப்பட்டது.

விபத்தில் இறந்த காவலர் ரவீந்திரனின் மனைவி லக்கியா மற்றும் காவலர் கார்த்திக்கின் மனைவி விஜயலட்சுமி ஆகியோரை குடும்பத்தினருடன் நேரில் வரவழைத்து, தலா ரூ.14 லட்சத்துக்கான காசோலைகளை கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் வழங்கினார். மேலும் மேற்படி காவலர்களின் குடும்பத்திற்கு வரவேண்டிய பணப்பலன்களை விரைவில் வழங்கவும், அவர்களது குடும்பத்திற்கு தேவையான உதவிகளை வழங்கவும் உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்நிகழ்வின்போது, கூடுதல் ஆணையாளர் (தலைமையிடம்) ஏ.அமல்ராஜ், இணை ஆணையாளர் (தலைமையிடம்) எஸ்.மல்லிகா, ஆயுதப்படை துணை ஆணையாளர் சௌந்தர்ராஜன் மற்றும் காவல் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *