செய்திகள்

75 ரூபாய் நாணயத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி

உணவு – வேளாண் அமைப்பின் 75-வது ஆண்டை கொண்டாடும் விதமாக

75 ரூபாய் நாணயத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி

உயிரி செறிவூட்டப்பட்ட 8 பயிர்களையும் நாட்டுக்கு அர்ப்பணித்தார்

புதுடெல்லி, அக்.16–

உணவு மற்றும் வேளாண் அமைப்பான எப்ஏஓ-வின் 75-வது ஆண்டைக் குறிக்கும் வகையிலும், இந்தியாவுக்கும், இந்த அமைப்புக்கும் உள்ள நீண்டகால தொடர்பைக் குறிக்கும் வகையிலும், பிரதமர் நரேந்திர மோடி, 75 ரூபாய் மதிப்பிலான சிறப்பு நினைவு நாணயத்தை வெளியிட்டார். அண்மையில் உயிரி செறிவூட்டிய 8 பயிர்களின் 17 ரகங்களையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

பாதிப்புக்குள்ளாகும் வாய்ப்புள்ள மக்களை பொருளாதார ரீதியாகவும், ஊட்டச்சத்து மூலமாகவும் வலிமையானவர்களாக மாற்றும் எப்ஏஓ-வின் பயணம், ஈடு இணையற்றதாகும். இந்த அமைப்புடன் இந்தியாவுக்கு வரலாற்று தொடர்பு உள்ளது.

ஊட்டச்சத்து குறைபாடு என்பது உலகளாவிய பிரச்சினையாக உள்ளது. உலகம் முழுவதும் இந்தக் குறைபாட்டால், சுமார் 200 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். குழந்தைகள் இறப்பில் சுமார் 45% சத்துக் குறைபாட்டால் ஏற்படுகிறது.

சர்வதேச முன்னுரிமையுடன் இணைந்து, இரும்புச் சத்து, துத்தநாகச் சத்து, கால்சியம், முழுமையான புரதம், உயர் லிசின், டிரிப்டோபான் புரோ வைட்டமின் ஏ, ஒலியக் அமிலம் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகளைக் குறைக்கும் தன்மை கொண்ட தரமான புரதம் ஆகியவற்றை அதிகமாகக் கொண்ட ஊட்டச்சத்து மிக்க ரகங்களை உருவாக்குவதே அரசின் முன்னுரிமையாக உள்ளது.

8 பயிர் வகைகள்

அண்மையில் உருவாக்கப்பட்ட 8 பயிர் வகைகளின் 17 உயிரி செறிவூட்டிய ரகங்கள் பிரதமரால் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டன. இவை 3 மடங்கு ஊட்டச்சத்து கொண்டவை ஆகும்.

இந்த ரகங்கள் மற்ற உணவு வகைகளுடன் இந்திய உணவை ஊட்டச்சத்து மிக்க உணவாக மாற்றக்கூடியவை. உள்ளூர் நிலப்பரப்பு, வேளாண் ரகங்களிலிருந்து இந்த ரகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அசாமின் காரோ மலையில் சேகரிக்கப்பட்ட அரிசி வகையைக் கொண்டு, துத்தநாகச் சத்து மிக்க அரிசி உருவாக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் தங் மாவட்டத்தின் விரல் திணைகளும் செறிவூட்டப்பட்டுள்ளன.

இந்த செறிவூட்டப்பட்ட பயிர் வகைகள் மேம்படுத்தப்பட்டு, அரசின் மதிய உணவு திட்டத்திலும், அங்கன்வாடிகளிலும் இணைக்கப்படும். இயற்கையாக செறிவூட்டப்பட்ட உணவு வகைகள் மூலம் இந்தியாவை ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத நாடாக மாற்றுவதே இதன் நோக்கமாகும். இது விவசாயிகளுக்கு அதிக வருமானம் கிடைக்க வழி ஏற்படுத்துவதுடன், தொழில் வளர்ச்சிக்கான புதிய வழிகளையும் உருவாக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *