செய்திகள் வர்த்தகம்

ரூ.31 ஆயிரத்து 500 கோடி செலவில் நாகையில் சுத்திகரிப்பு ஆலை: நாளை பிரதமர் மோடி அடிக்கல்

சென்னை பெட்ரோலியம் – இந்தியன் ஆயில் இணைந்து

ரூ.31 ஆயிரத்து 500 கோடி செலவில் நாகையில் சுத்திகரிப்பு ஆலை:

நாளை பிரதமர் மோடி அடிக்கல்

கவர்னர், முதல்வர் காணொளியில் பங்கேற்பு

சென்னை, பிப். 16–

நாகப்பட்டினம் மாவட்டம் காவிரிப் படுகையில் ரூ. 31,500 கோடியில் அமையவுள்ள கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி காணொலிக்காட்சி மூலம் நாளை அடிக்கல் நாட்டுகிறார். மேலும், ரூ.1,200 கோடியில் முடிக்கப்பட்ட பணிகளையும் நாட்டுக்கு அவர் அர்ப்பணிக்க உள்ளார்.

இது குறித்து சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் (சிபிசிஎல்) மேலாண் இயக்குநர் (பொறுப்பு) ராஜீவ் அகிலவாணி, இந்தியன் ஆயில் செயல் இயக்குநர் ஜெயதேவன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:–

சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் சார்பில் ராமநாதபுரம்- தூத்துக்குடி வரையில் 143 கி.மீ. தூரத்துக்கு ரூ.700 கோடி மதிப்பில் குழாய் மூலம் இயற்கை எரிவாயு கொண்டு செல்லும் பணி தொடங்கப்பட்டு தற்போது முடிவுற்றுள்ளது.

இந்தக் குழாய் மூலம் ஓஎன்ஜிசி உற்பத்தி நிலையங்களில் இருந்து கிடைக்கும் எரிவாயுவை தூத்துக்குடிக்குக் கொண்டு செல்ல முடியும். சென்னை மணலியில் ரூ.500 கோடியில் பெட்ரோலில் கந்தகத்தை அகற்றும் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 8 பிபிஎம் குறைவான பெட்ரோலை உற்பத்தி செய்ய முடியும். இந்த 2 திட்டங்களையும் பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் நாளை (புதன்கிழமை) நாட்டுக்கு அர்பணிக்கிறார்.

நாகப்பட்டினம் மாவட்டம் காவிரிப் படுகையில் இந்தியன் ஆயில் நிறுவனம் மற்றும் சென்னை பெட்ரோலியம் கார்பரேஷன் நிறுவனம் இணைந்து ஆண்டுக்கு 9 மில்லியன் மெட்ரிக் டன் கச்சா எண்ணெயை சுத்திகரிப்பு செய்யும் வகையில் ரூ. 31,500 கோடி மதிப்பில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதன் கட்டுமானப் பணியை அடிக்கல் நாட்டி பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் காணொலிக்காட்சி மூலம் கலந்துகொள்கின்றனர்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *