செய்திகள்

கொரோனா தடுப்பூசி முதல் ‘டோஸ்’ போட்டுக் கொண்டார் பிரதமர் மோடி

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று காலை

கொரோனா தடுப்பூசி முதல் ‘டோஸ்’ போட்டுக் கொண்டார் பிரதமர் மோடி

* தடுப்பூசி போட்டுக்கொள்ள அச்சம் வேண்டாம்

* இந்தியாவை கொரோனாவிலிருந்து விடுவிப்போம்

நாட்டு மக்களுக்கு அழைப்பு

புதுடெல்லி, மார்.1–

கொரோனா தடுப்பூசி முதல் டோஸை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரதமர் நரேந்திர மோடி போட்டுக் கொண்டார். தகுதியான அனைவரும் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நாட்டு மக்களை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

பாரத் பயோடெக் நிறுவனத்தில் கோவேக்சின் தடுப்பூசியை புதுச்சேரியைச் சேர்ந்த செவிலியர் நிவேதா, பிரதமர் மோடிக்கு செலுத்தினார்.

கொரோனா தடுப்பூசி மீதான தயக்கத்தைப் போக்கும் வகையில் பிரதமர் மோடி தனது டுவிட்டரில், “எய்ம்ஸில் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை எடுத்தேன். கொரோனாவுக்கு எதிரான உலகளாவிய போராட்டத்தை வலுப்படுத்த எங்கள் மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் விரைவான நேரத்தில் எவ்வாறு பணியாற்றினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மூத்த குடிமக்கள் உள்ளிட்ட தடுப்பூசி எடுக்க தகுதியுள்ள அனைவருக்கும் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன். அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள அச்சப்பட வேண்டாம். ஒன்றாக, இந்தியவை கொரோனாவில் இருந்து விடுவிப்போம்” என்று பதிவிட்டுள்ளார்.

கடந்த ஜனவரி 16–-ம் தேதி முதல் நாடு முழுவதும் முன்களப் பணியாளர்கள், மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடந்து வருகின்றன. இந்தப் பணிகள் முடியும் தருவாயில் இருப்பதையடுத்து, 2-வது கட்டமாக இன்று மார்ச் 1–ம் தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்டோர், 45 வயதுக்கு மேற்பட்டோர் 59 வயதுக்குள் இருக்கும் இணை நோய்கள் கொண்டவர்களுக்கும் தடுப்பூசி போடப்படுகிறது.

இணை நோய்கள் உள்ளவர்களுக்கு முன்னுரிமை

இதில் நீரிழிவு நோய்கள், கடந்த ஓராண்டாக இதயக்கோளாறு நோயால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்கள் உள்ளிட்ட 20 இணை நோய்கள் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா தடுப்பூசி போடும் 60 வயதுக்கு மேற்பட்டோர் வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டு, ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட ஏதேனும் ஒன்றை எடுத்துச் செல்ல வேண்டும். இணை நோய்கள் இருப்போர் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர் ஒருவரிடம் தனக்கிருக்கும் இணை நோய்கள் குறித்த சான்றிதழ் பெற்றுவந்து தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக நீரிழிவு நோய், கடந்த ஓராண்டுக்கும் மேலாக இதய நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்கள், இதய மாற்று அறுவை சிகிச்சை செய்தோர், மிதமான மற்றும் தீவிரமான இதய நோய் இருப்போர், சிறுநீரக நோய் இருப்போர், 2 ஆண்டுகளாக தீவிரமான சுவாசம் தொடர்பான நோய்கள் இருப்போர் அதற்கான மருத்துவ சிகிச்சை பெற்றோர், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்போர், ஹெச்ஐவி தொற்று உள்ளவர்கள், ரத்த அழுத்தம் உள்ளவர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

2 செயலியில் முன்பதிவு

தடுப்பூசி பெற விரும்புவோர், ஆரோக்கிய சேது, கோ-வின் ஆகிய செயலிகளில் முன்பதிவு செய்துகொண்டும் மக்கள் கரோனா தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளலாம்.

தனியார் மருத்துவமனைகளில் ரூ.250 கட்டணம்

அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி இலவசம். அதே நேரம் தனியார் மருத்துவமனைகளில் ரூ.250 கட்டணம் வசூலிக்கப்படும்.

‘ஊசி போட்டதே தெரியவில்லை:’ புதுச்சேரி நர்சிடம் பிரதமர் தமாஷ்

பிரதமர் மோடிக்கு தடுப்பூசி செலுத்திய புதுச்சேரியை சேர்ந்த நர்ஸ் பி.நிவேதா கூறுகையில்,

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த 3 ஆண்டுகளாக நான் பணியாற்றி வருகிறேன். கொரோனா தடுப்பூசி போடும் பிரிவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் வந்தேன்.

இன்று முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட வேண்டும் என எங்களுக்கு தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இன்று காலை பணிக்கு வந்தபோது பிரதமர் இங்கே வந்திருப்பது பற்றி தெரிய வந்தது. மிகவும் ஆச்சரியப்பட்டோம். பிரதமருக்கு தடுப்பூசி செலுத்தும்போது அவர் ‘‘ஊசியை செலுத்துங்கள்’’ என்றார். செலுத்திய பிறகு ‘‘தடுப்பூசி போட்டப்பட்டு விட்டது’’ என்றேன். அதற்கு அவர் ‘‘அப்படியா, தடுப்பூசி போட்டதே தெரியவில்லையே’’ என்றார். பின்னர் நீங்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர் என பிரதமர் என்னிடம் கேட்டார். அதற்கு நான் புதுச்சேரியை சேர்ந்தவர் என்று பதில் அளித்தேன். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *