நாடும் நடப்பும்

நம்பகமான கொரோனா தடுப்பூசிகள், பிரதமர் உத்திரவாதம்

பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள ‘கோவேக்சின்’ மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தின் ‘கோவிஷீல்ட்’ ஆகிய இரு கொரோனா தடுப்பூசிகளுக்கு இந்திய மருத்துவ தரக்கட்டுப்பாட்டு ஆணையம் அங்கீகாரம் தந்துவிட்டது.

இம்முடிவை உலக சுகாதார நிறுவனமும் வரவேற்று இருப்பது இத்தடுப்பூசிகள் மீது நம்பகத் தன்மையை கொடுக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட ட்விட்டர் பதிவுகளில் கூறியிருப்பதாவது:–

கொரோனா வைரசுக்கு எதிரான போரில் திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. சீரம் இன்ஸ்டிடியூட், பாரத் பயோடெக் நிறுவனங்களின் கொரோனா தடுப்பூசிகளை பயன்படுத்த மருந்து தரக் கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது. இதன் மூலம் கொரோனா இல்லாத தேசம் உருவாகும்.இந்தியாவில் தயாரிக்கும் 2 கொரோனா தடுப்பூசிகளை அவசர பயன்பாட்டுக்கு பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டிருப்பது ஒவ்வொரு இந்தியரையும் பெருமை கொள்ளச் செய்கிறது.

சுயசார்பு இந்தியா என்ற கனவு திட்டத்தை இந்திய அறிவியல் சமூகம் நனவாக்கி உள்ளது.

கொரோனா வைரசுக்கு எதிரான போரில் மருத்துவர்கள், சுகாதார ஊழியர்கள், விஞ்ஞானிகள், போலீசார், துப்புரவு தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து கொரோனா முன்கள பணியாளர்களும் மிக சிறப்பாக பணியாற்றினர். ஏராளமான உயிர்களை காப்பாற்றினர். அவர்களுக்கு நன்றிக் கடன்பட்டுள்ளோம் என்று மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் உள்நாடு மற்றும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 8 கொரோனா தடுப்பூசிகள் பரிசோதனையில் இருந்தன. இவற்றில் பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், அஸ்ட்ரா ஜெனிகா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள ‘கோவிஷீல்டு’ என்ற கொரோனா தடுப்பூசியை மகாராஷ்டிராவின் புனே நகரைச் சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியூட் உற்பத்தி செய்து வருகிறது.

தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோ டெக் நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், புனேவில் உள்ள தேசிய வைராலஜி இன்ஸ்டிடியூட் ஆகியவை இணைந்து ‘கோவேக்ஸின்’ என்ற கொரோனா தடுப்பூசியை தயாரித்துள்ளன.

கோவிஷீல்டு, கோவேக்ஸின் கொரோனா தடுப்பூசிகள் 2 முறை போட வேண்டிய தடுப்பூசிகளாகும். இரு தடுப்பூசிகளையும் 2 முதல் 8 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் சேமித்து வைக்க முடியும்.முறையாக மூன்று கட்ட பரிசோதனை ஆய்வுகளின் அடிப்படையில் தான் இத்தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வருவதால் அவை எந்த எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தாது என உறுதியாக நம்பலாம்.

நாடு எதிர் நோக்கி இருக்கும் அடுத்த சவால் சுமார் 100 கோடி பேருக்கு மேல் இத்தடுப்பூசி மருந்து சென்றடைய வைத்தாக வேண்டிய கட்டாயமும் சாமானியனுக்கும் கட்டுப்படியாகும் விலை நிர்ணயமும் அவசியமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *