செய்திகள்

பிளஸ்–1 பொதுத்தேர்வு தொடங்கியது: 8¼ லட்சம் மாணவர்கள் எழுதினார்கள்

Spread the love

சென்னை, மார்ச்.4-

பிளஸ்–1 பொதுத்தேர்வு இன்று காலை தொடங்கியது. இந்த தேர்வை 8 லட்சத்து 32 ஆயிரத்து 475 பேர் எழுதினார்கள்.

2019–20ம் கல்வியாண்டுக்கான பிளஸ்–1 வகுப்புக்கான தேர்வு வருகிற 26-ந்தேதி வரை நடைபெறுகிறது. முதல் நாளான இன்று மொழிப்பாடத் தேர்வுகள் நடைபெற்றன. தேர்வுகள் காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1.15 மணி வரை நடைபெற்றது. முதல் 10 நிமிடங்கள் வினாத்தாளைப் படித்துப் பார்ப்பதற்கும், அடுத்த 5 நிமிடங்கள் விடைத்தாளில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களை சரிபார்ப்பதற்கும் வழங்கப்பட்டன. இவர்கள் 600 மதிப்பெண்களுக்கு தேர்வை எழுதினார்கள்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 7 ஆயிரத்து 400 மேல் நிலைப்பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 26 ஆயிரத்து 119 தேர்வர்களும், 6 ஆயிரத்து 356 தனித்தேர்வர்களும் என மொத்தம் 8 லட்சத்து 32 ஆயிரத்து 475 பேர் இந்த பொதுத்தேர்வை எழுதினார்கள். இதில் பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்களில் 4 லட்சத்து 43 ஆயிரத்து 691 மாணவிகளும், 3 லட்சத்து 88 ஆயிரத்து 783 மாணவர்களும், 1 மூன்றாம் பாலினத்தவரும் அடங்குவர். இந்த ஆண்டு கூடுதலாக ஏற்படுத்தப்பட்ட 113 தேர்வு மையங்களுடன் சேர்த்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 3 ஆயிரத்து 16 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. மேலும் தமிழ் வழியில் பயின்ற 4 லட்சத்து 38 ஆயிரத்து 988 பேருக்கு தேர்வு கட்டணத்திலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது. பழைய பாடத்திட்டத்தில் தேர்வு எழுதும் தனித்தேர்வர்களுக்கு தனியாகத் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்தது.

மாணவர்களின் விவரங்கள் அடங்கிய முதல் பக்கம் எனப்படும் முகப்புச் சீட்டு பிளஸ் –1 மாணவர்களுக்கு நீல நிறத்தில் வழங்கப்பட்டன. கடந்த ஆண்டு புதிய பாடத்திட்டத்தில் பிளஸ் 1 வகுப்பு பொதுத் தேர்வை எழுதி தேர்ச்சி பெறாத பாடங்களில் மறுதேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு, மஞ்சள் நிறத்தில் வழங்கப்பட்டன.

100 கைதிகள்

வேலூர், கடலூர், புதுக்கோட்டை, மதுரை, கோவை, பாளையங்கோட்டை, திருச்சி, சேலம் மற்றும் புழல் சிறைகளில் உள்ள 100 ஆண் சிறை கைதிகள் புழல் சிறையில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தில் தேர்வு எழுதினார்கள்.

தேர்வுக்காக மொத்தம் 44 ஆயிரத்து 500 ஆசிரியர்கள் அறை கண்காணிப்பாளர்களாக பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். தேர்வு மைய வளாகத்துக்குள் தேர்வர்கள் மற்றும் தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களும் தேர்வு அறையில் செல்போன் வைத்திருக்க தடைவிதிக்கப்பட்டு இருக்கிறது. இதனை மீறும் தேர்வர்கள், ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல், ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடும் தேர்வர்கள் மீது விதிமுறைகளின்படி உரிய தண்டனைகள் வழங்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாவட்டத்தில், 411 பள்ளிகளைச் சேர்ந்த 46,779 மாணவர்கள் 159 தேர்வு மையங்களில் எழுதினார்கள். அதேபோன்று புதுச்சேரியில் 151 பள்ளிகளைச் சேர்ந்த 14 ஆயிரத்து 779 மாணவர்கள் 40 தேர்வு மையங்களில் தேர்வை எழுதினார்கள். முக்கியப் பாடங்களை மாணவர்கள் படிப்பதற்குத் தேவையான விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தேர்வு மையங்களில் குடிநீர், இருக்கை, மின்சாரம், காற்றோட்டம், வெளிச்சம், கழிப்பிட வசதிகள் சிறப்பான முறையில் அமைக்கப்பட்டிருந்தன. தமிழகம் முழுவதும் தேர்வு மையங்களை மாவட்ட கலெக்டர்கள் ஆய்வு செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *