நாடும் நடப்பும்

சரக்கு சேவை வளர்ச்சிக்கு திட்டங்கள்

கடந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று ஏற்படுத்திய பொருளாதார சரிவுகளை பற்றி எல்லா தரப்புகளிலும் விவாதங்கள் நடந்து முடிந்து விட்ட நிலையில் நடப்பு ஆண்டிற்கான பட்ஜெட் சமர்ப்பிக்கப்பட்டு விட்டது.

பட்ஜெட் அறிவிப்புகளின் சாதக பாதகங்கள் வரும் நாட்களில் தான் முழுமையாக தெரிய வரும். உற்பத்தி துறைக்கும் வங்கிகள் சேவை துறைக்கும் தரப்பட்டிருக்கும் விசேஷ கவனம் புரிகிறது. நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல ‘ஊர் சேர்ந்து தேர் இழுப்பது’ போல் பொருளாதாரத்தில் அனைத்து அம்சங்களுக்கும் கவனம் தரப்பட்டு உந்துதல் கொடுத்தாக வேண்டிய கட்டாயம் உள்ளதை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் புரிந்து கொண்டு இம்முறை பட்ஜெட்டை சமர்பித்து இருப்பது வரவேற்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

பட்ஜெட் சமர்ப்பித்த மறுகணமே அதுபற்றி கருத்து கூறுபவர்கள் பல நல்ல அம்சங்கள் இருப்பதாக சுட்டிக்காட்டுகிறார்கள்.

அதில் சரக்கு போக்குவரத்துக்கு கொடுக்கப்பட்டு இருக்கும் கவனம் பாராட்டுக்கு உரியது. உற்பத்தி துறைக்கு வளர்ச்சி திட்டங்களை வகுத்துவிட்டு, அதை கொண்டு செல்ல சரக்கு போக்குவரத்து துறையை விரிவாக்க முனைந்திருப்பது தங்களது நிதிநிலை அறிக்கையின் மீது இருக்கும் முழு நம்பிக்கை அது சுட்டிக்காட்டுகிறது.

வாகன சேவை துறைகள் பெரும்பாலும் அரசுக்கு வருமானம் ஈட்டுவதாகவே தெரியவில்லை. ரெயில் சேவைகள் இன்றும் குறைந்த கட்டணம் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் அரசுக்கு வருமானம் ஈட்டாத ஒரு துறையாகவே தான் தெரிகிறது. ஆனால் ரெயில்வே துறையின் சரக்கு போக்குவரத்து மிக லாபகரமாக இருப்பதாகவே மாறிவிட்டது.

முந்தைய ஆண்டுகளில் ரெயில் பயணிகளின் அதிகரிப்பும் கட்டண மாற்றங்களால் ஓரளவு வருவாய் அதிகரிப்பும் இருந்தாலும் மத்திய அரசுக்கு கையை கடிக்கும் லாபம் ஈட்டா நிலையே நிலவுகிறது.

ஆனால் அந்த இழப்புகளை ஈடு செய்யும் வகையில் சரக்கு கையாளுதல் நல்ல வருவாய் ஈட்டி வருகிறது. அந்த வரிசையில் சாலை போக்குவரத்து, ரெயில் போக்குவரத்து இதற்கெல்லாம் இணையாக கப்பல் போக்குவரத்தும் சரக்கு கையாளுதல் பட்டியலில் இருக்கிறது.

2020 ல் மிகப்பெரிய தாக்கத்தால் துவண்டுவிட்ட துறை கப்பல் சரக்கு கையாளுதலாகும். அதற்கு கொரோனா தொற்று மட்டுமா காரணம்? ஊரடங்கு காரணங்களாலும், உலகளாவிய உற்பத்தி பாதிப்பு காரணமாகவும் கப்பல்துறை மிகப்பெரிய வீழ்ச்சியை கண்டது உண்மை தான், ஆனால் இந்திய கப்பல்துறைக்கு மேலும் சீனப் பொருட்களுக்கான தடை அறிவிப்பாலும் சரக்கு போக்குவரத்து மீண்டு எழ வழியின்றி இருக்கிறது.

நமது துறைமுகங்களில் மிக அதிக சரக்கு கையாளுதலில் சீனச் சரக்கு இறக்குகுமதிகளே அதிகமாகும்! அப்படி இருந்த நிலையில் நம்நாட்டு உற்பத்தி துறை உலகெங்கும் குறித்த நேரத்தில் ஓரளவு குறைந்த கட்டணத்தில் அனுப்பி வைக்க முடிந்தது.

ஆனால் சீனப் பொருட்களுக்கு மத்திய அரசு தடை விதித்து விட்டதால் சரக்கு வரத்து முற்றிலும் தடைபட்டு விட்டது. ஏற்றுமதி செய்பவர்களுக்கு சரக்கு கப்பல்கள் முன்பு போல் வசதி இல்லை.

முன்பெல்லாம் சில மணி நேரத்தில் சரக்கை அனுப்ப கண்டெய்னர் வசதி கிடைத்து விடும். ஆனால் சமீபமாக மாதக் கணக்கில் காத்திருக்க வேண்டிய கட்டாயம் இருப்பதால் கடல்வழி இந்திய வாணிப சேவை நிலைகுலைந்து சூறாவளியில் சிக்கிய கப்பலாய் எத்திசையில் செல்வது என்பதை யோசித்து வரும் நிலையில் தான் இன்று பட்ஜெட் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இம்முறை பட்ஜெட்டில் கப்பல் சரக்கு கையாளுதலுக்கும் கட்டண நிர்ணயங்களில் சலுகைகளும் நேரடியாக தெரிகிறது.

சரக்கு கண்டெய்னர்களின் வசதிகள் அதிகரிப்புக்கும் அதிக காத்திருப்பு கெடுவை குறைப்பதற்கும் விசேஷ முயற்சிகள் இல்லாதது வருத்தத்தை தருகிறது.

பட்ஜெட்டில் எல்லாத் துறைகளின் குறைபாடுகளையும் ஒரே நேரத்தில் சீர் செய்து விடமுடியாது! ஆகையால் தவித்துக் கொண்டிருக்கும் கப்பல் சரக்கு போக்குவரத்து துறைக்கு விரைவில் விசேஷ அறிவிப்புகளை வெளியிட மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும் என்று அத்துறையை சார்ந்திருப்போர் மட்டுமின்றி பொருளாதார நலனில் அக்கறை கொண்டுள்ள நிபுணர்களும் விரும்புகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *