சிறுகதை

பித்ருக்கள் | ராஜா செல்லமுத்து

Spread the love

அதிகாலையில் ‘‘கா.. கா..’’ என்று காகம் கரையும் சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்த்தான் கோபி. வீட்டு ஜன்னலின் அருகே உள்ள சுற்றுச்சுவரில் உட்கார்ந்து கொண்டு மறுபடியும் மறுபடியும் ‘‘கா..கா..’’ என்றே கத்தியது.

ஏன்..? இந்நேரம் இப்பிடி கத்திட்டு இருக்குது. வீட்டிலிருந்து அடி தண்ணீர்க் குழாயில் தண்ணீர் அடித்துக் கொண்டே கத்தும் காகத்தைக் கவனித்தான்.சுற்றுச்சுவரிலிருந்து ஒரே தாவு தாவி ஜன்னலின் மேலே ஏறி உட்கார்ந்து கொண்டு மறுபடியும் கத்த ஆரம்பித்தது. அது அப்படிக்கத்தும் போது அதன் பின் வால் போன்ற இறக்கை அப்படியே அதன் அடி வயிற்றைத் தொட்டு பின் மேலே வந்தது. சுற்றுச்சுவரிலிருந்து தாவி வீட்டைச் சுற்றி நிறைந்து கிடக்கும் கேபிள் டிவி வயரின் மீது ஏறி அமர்ந்து ஊஞ்சல் போல ஆடிக்கொண்டிருந்தது. கீழே விழுவது போன்ற பாவனையில் அப்படியும் இப்படியுமாய் ஆடிக்கொண்டிருந்தாலும் அதன் வாயிலிருந்து வெளிவரும் ‘‘கா..கா..’’ என்ற சத்தத்தை மட்டும் காகம் நிறுத்தவே இல்லை. பஞ்சு மேகங்கள் போல பனி படரும் அந்தக் காலை வேளையில் இந்தக் காகம் மட்டும் ஏன்..? இப்படிக் கத்திக்கொண்டிருக்கிறது என்ற கேள்வியைத் தனக்குள் சுமந்து கொண்டே தண்ணீர் அடித்துக் கொண்டிருந்தான் கோபி.

‘‘போ..ஏய்..போ..’’ என்று அவன் கத்திப் பார்த்தும் அந்தக் காகம் கேபிள் வயரை விட்டு எழுந்து போகவே இல்லை.

‘‘என்னப்பா..தம்பி..’’ என்றபடியே பக்கத்து வீட்டு அம்மா .தண்ணீர் அடிக்கும் பாத்திரத்துடன் வந்து நின்றாங்க.

‘‘ஒண்ணுல்லம்மா ..- இந்த கால நேரத்தில இந்த காக்கா ஏன்.. இப்பிடி கத்திட்டு இருக்கு..! என்று கோபி கேட்க

‘‘காக்காவுக்கு இந்த கால நேரம் புதுசு இல்ல.. ஒனக்கு தான் புதுசு..’’ என்று பூடகம் போட்டாங்க அந்த அம்மா

‘‘புரியலீங்களே..’’

‘‘தம்பி..என்னைக்காவது நீ.. அதிகாலையில எந்திரிச்சிருக்கியா..? என்று ஒரு ஏளனக் கேள்வியைக்கேட்டாங்க.

‘‘இல்ல..’’

‘‘ம்.., ஒனக்கு வேணும்னா.. இந்த அதிகாலை நேரம் காக்கா கத்துறது புதுசா இருக்கலாம். ஆனா..! எங்களுக்கு இது பழசுப்பா..’’ – என்று ரொம்பவே சாதாரணமாகப் பேசினாங்க அந்த அம்மா.

‘‘என்ன சொல்றீங்க..? இந்த காக்கா தெனமும் இங்க வந்து கத்திட்டு தான் இருக்கா..?

‘‘ஆமா.’’

‘‘ஏன்..?’’

‘‘இப்பப்பாரு.. என்ன நடக்குதுன்னு..’’ என்று அந்த அம்மா சொல்ல எதிர் வீட்டிற்குள்ளிருந்து வந்த பெண் இரண்டு மூன்று சப்பாத்திகளைப் பிய்த்துக்கொண்டு வீட்டுச்சுவற்றில் ஏற்கனவே வைத்திருந்த ஒரு பழைய கிண்ணத்தில் அதைப்போட்டாள்.

‘‘கா.. கா..’’ என்று கரைந்த அந்தக் காகம் பட்டெனப்பறந்து போய் அந்தக் கிண்ணத்திலிருந்த சப்பாத்தியை தன் அலகால் கவ்விக்கொண்டு ‘‘விர்’’ரெனப் பறந்தது. அதை அடுத்து வந்த இன்னொரு காகம் தன் கூரிய அலகால் சப்பாத்தித் துண்டை எடுத்துக்கொண்டு கேபிள் வயரில் உட்கார்ந்து சப்பாத்தித் துண்டை தன் இடது காலுக்கு மாற்றி ‘‘டொக்..டொக்..’’என்று பிய்த்துத்தின்றது. இத அத்தனையும் தண்ணீர் அடித்துக் கொண்டே கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான் கோபி

‘‘என்ன தம்பி..இப்பப்புரிஞ்சதா..? என்று அந்த அம்மா கேட்க

‘‘இல்ல.. புரியலையே..?’’ என்று கோபி சொல்ல

‘‘என்னப்பா.. புரியலன்னு சொல்ற..? என்று ஆச்சர்யம் அடைந்தார்.

கோபி அடித்துக் கொண்டிருந்த தண்ணீர் பானை நிரம்பியது ‘‘ம்.. என்று உள் மூச்சை வெளியே விடாமலே அந்தத் தண்ணீர்ப் பாத்திரத்தைத் தூக்கி ஒதுக்குப் புறமாய் வைத்து விட்டு அடுத்த பாத்திரத்தை எடுத்து வைத்து அடிக்க ஆரம்பித்தான்.

‘‘தம்பி.. இப்ப நீ.. பாத்தியே.. இந்த காக்காவெல்லாம் என்னன்னு நினைச்ச..? என்று அந்த அம்மா கேள்வி கேட்க

‘‘தெரியலயே..’’ என்று சொன்ன கோபி. தண்ணீர் அடிப்பதிலேயே கவனம் செலுத்தினான். அந்த இரண்டு காக்கைகளும் மாறி மாறிப் பறந்து வந்து அந்த சப்பாத்திகளைத் தூக்கிச் சென்று தின்று கொண்டிருந்தது. –

‘‘இந்த காக்காவெல்லாம் அந்த வீட்டுக்காரங்களோட ‘பித்ருக்கள்’ ப்பா..’’ என்று சொல்ல

‘‘பித்ருக்களா..? அப்பிடின்னா என்ன..?’’ என்று கோபி கொஞ்சம் வியப்பாகக்கேட்டான்

‘‘ஆமாப்பா.. – அந்த வீட்டுல இருக்காருல்ல அன்பு அவர ஒனக்கு தெரியுமா..?

‘‘ம்… தெரியுமே..’’ என்று கோபி சொல்ல அவருக்கு அப்பா, அம்மா ரெண்டு பேருமே இல்ல தெரியுமில்ல.

‘‘இல்ல , எனக்குத் தெரியாது..’’ என்று கோபி சொல்ல

‘‘இருக்கட்டும்.. இருக்கட்டும்.. அன்புவோட அப்பா, அம்மா தான் இந்த காக்கா உருவத்தில பித்ருக்களா இருக்கிறதா சொல்லி தெனமும் இப்படி காக்காவுக்கு சோறு வச்சிட்டு இருக்காங்க..’’ என்று அந்த அம்மா சொல்ல

‘‘உண்மையாவா..?’’

‘‘ஆமா தம்பி… செத்துப் போன நம்மோட உறவுகள் பித்ருக்களா இப்படி காக்கா உருவத்தில் உலாவுறதா ஒரு நம்பிக்கை- அதான் அந்த அம்மா தெனமும் காக்காவுக்கு சோறு வச்சிட்டு இருக்காங்க..?’’ என்று சொல்ல

‘‘ஓ..அதான் இந்தம்மா.. தெனமும் காக்காவுக்கு சோறு வச்சிட்டு இருக்காஙகளா..? என்று கோபி சொல்ல பிய்த்து வைத்த சப்பாத்திகளை ஒன்று விடாமல் சாப்பிட்ட காகங்கள் ‘‘கா…கா..’’ என்று கரைந்து கொண்டே இருந்தன. அதன் சத்தத்தைக்கேட்ட அன்புவின் மனைவி இன்னும் ஏதோ பொருளை எடுத்துக்கொண்டு வீட்டிற்குள்ளிருந்து வெளியே வந்தாள்.

‘‘எங்க மாமாவும் அத்தையும் இப்பிடித்தான் பசியே.. பொறுக்க மாட்டாங்க..’’ என்று காகங்களைப்பார்த்துச் சொல்லிக்கொண்டே உணவு வைக்க

‘‘சர்.. சர்..’’ என்று பறந்து வந்த காகங்கள் அந்த உணவைச் சாப்பிட ஆரம்பித்தன. இதைக் கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டே மற்றொரு பானையில் தண்ணீர் அடித்துக்கொண்டிருந்தான் கோபி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *