செய்திகள் வாழ்வியல்

பெரிய காஞ்சிபுரம் பச்சை வண்ணர் பெருமாள் கோவில்

அருள்மிகு மரகதவல்லித் தாயார் உடனுறை பச்சைவண்ணர் பெருமாள் திருக்கோவில், பெரிய காஞ்சிபுரம், சுவாமி : ஸ்ரீ பச்சைவண்ணர் (மரகத வண்ணம்), அம்பாள் : மரகதவல்லித் தாயார்.

தலச்சிறப்பு :

இத்திருப்பதியின் நுழைவு வாயில் கிழக்கு நோக்கியும் மூலவர் பச்சை வண்ணர் என்கிற மரகத வண்ணர் அமைந்துள்ள மண்டபவாயில் தெற்கு நோக்கியும் மூலவர் பச்சை வண்ணர் பெருமாள் கிழக்கு நோக்கியும் சேவார்த்திகளுக்குத் தரிசனம் வழங்கிக் கொண்டுள்ளார்.

தாயார் சந்நிதி தனிச் சந்நிதியாக உள்ளது. தாயார் சந்நிதிக்கு முன்பு பீடத்தில் யந்திரபிரவாசனி (ஸ்ரீசுத்தமந்திரம்) சிலா ரூபத்தில் பிரதிட்டை செய்து வைக்கப்பட்டுள்ளது. சீனிவாசப்பெருமாள் நின்ற திருக்கோலத்தில் உள்ளார். இங்கு மகாலெட்சுமி தாயார் உற்சவ ரூபத்தில் கஜலட்சுமியாகக் காட்சித் தருகிறார். ஆதிசேசன் காவலாக உள்ளார்.

தல வரலாறு :

தொண்மைக் காலத்தில் திருவட்டாறு என்கிற பகுதி யாதவக்குப்பம் என்று ஆகி, பிறகு அப்பெயர் மருவி தற்போது கோனேரிகுப்பம் என்று வழங்கப்படும் பகுதியானது. பசுக்கள் நிறைந்த யாதவர்கள் நிறைந்த பகுதியாக விளங்கியது. அச்சமயம் மரீச்சி என்னும் மகரிஷி இப்பகுதியில் வாழ்ந்து வந்ததாகவும் அவர் மகாவிஷ்ணுவின் பரமபக்தர் என்றும் அதனால் சதா மகாவிஷ்ணுவை நினைத்து அவரின் புகழைப் பாடிக்கொண்டு இருந்தவர் என்றும் இதனால் இவரின் பக்திக்கு மகிழ்ந்து மகாவிஷ்ணு இராம அவதாரத்தில் விஷ்ணுரூபத்தில் பச்சைநிற மேனி கொண்டு இந்த மரீச்சி மகரிஷிக்குக் காட்சித் தந்த இடமாகக் இத்திருத்தலம் கருதப்படுகிறது.

இத்திருத்தலம் திவ்ய தேசங்களில் ஒன்றாகக் கருதப்படவில்லை. ஆனால் பவளவண்ணப் பெருமாளைத் தரிசிக்கும் பக்தர்கள் இந்த பச்சை வண்ணர் பெருமாளையும் ஒரு சேர சேவித்தால் புண்ணியம் என்பது சான்றோர்களின் எண்ணம் ஆகும். திவ்ய தேசங்களில் 2 பெருமாள் உருவங்களில் இவர் ஒருவராகவே காட்சித் தருவது சிறப்பு ஆகும். எனவே பவளவண்ணர் பெருமாளைச் சேவிக்கச் செல்லும் சேவார்த்திகள் பச்சை வண்ணரையும் சேவிக்க வேண்டும் என்ற கருத்தை வலியூட்டுகின்றனர். இங்குள்ள சந்தான கிருஷ்ணருக்கு குழந்தை இல்லாதோர் குழந்தை வேண்டி பரிகாரம் செய்தால் பலன் உண்டு என்பது ஐதீகம்.

நடைதிறப்பு : 

காலை 7 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7.30 வரை.

கோவில் முகவரி : அருள்மிகு மரகதவல்லித் தாயார் உடனுறை பச்சைவண்ணர் பெருமாள் திருக்கோவில், பெரிய காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாவட்டம். தொலைபேசி எண்.௦௪௪–27229540

ஒன்றும் மறந்தறியேன் ஓதநீர் வண்ணனை

நான் இன்று மறப்பேனோ ஏழைகாள் அன்று கருவறை கடந்து கைதொழுதேன்

கண்டேன் திருவரங்க மேயான் திசை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *