போஸ்டர் செய்தி

ஸ்டாலின் எத்தனை பொய் பேசினாலும் மக்களிடம் எடுபடாது

Spread the love

சென்னை, ஜன.22–

ஒவ்வொரு நாளும் மக்களுக்கு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறோம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் அளவுக்கு தொழிற்சாலைகள் துவங்க ஒப்புதல் அளிக்கப்பட்டு அடிக்கல் நாட்டப்பட இருப்பதாகவும் முதல்வர் கூறி, அந்த நிறுவனங்களின் பட்டியலையும் வேலைவாய்ப்பு பெறுவோர் எண்ணிக்கையையும் சொன்னார்.

ஸ்டாலின் எத்தனை பொய் பேசினாலும் அது மக்களிடம் எடுபடாது என்றும் எடப்பாடி பழனிசாமி காட்டமாக கூறினார்.

சேலம் ஆத்தூரில் எம்.ஜி.ஆர். 103–வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் மிக பிரமாண்டமாக நடந்தது. இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:–

நேற்றையதினம் ஸ்டாலின் பேசும்போது, புள்ளிவிவரத்தை சொல்கிறேன் என்று சொல்லி இன்றைக்கு வேலை இல்லாமல் இருப்பவர்கள் தற்கொலை செய்து கொண்டு இருக்கிறார்கள் என்று சொல்கிறார். நாங்கள் கேட்கிறோம், நீங்கள், உங்கள் ஆட்சியில் எவ்வளவு கோடி கொண்டுவந்து கொடுத்தீர்கள் தமிழ்நாட்டில்? எத்தனை புதிய தொழிற்சாலைகளை கொண்டு வந்தீர்கள்? மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் 13 ஆண்டுகாலம் இருந்தீர்கள், தொழிற்சாலைகள் ஏதாவது கொண்டு வந்தீர்களா? படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுத் தந்தீர்களா? எதுவுமே இல்லை. ஆனால் அம்மா 2015-ல் உலக முதலீட்டாளர் மாநாட்டை நடத்தி 2 லட்சத்து 42 ஆயிரம் கோடி ரூபாய் தொழில் முதலீட்டை ஈர்த்தார். அம்மா வழியில் நடக்கும் அம்மாவின் அரசு 2019 ஜனவரி மாதம் 23 மற்றும் 24 தேதிகளில் சென்னையில் தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்டோம், 3 லட்சத்து 431 கோடி ரூபாய் தொழில் முதலீட்டை ஈர்த்தோம். அதன் மூலமாக பத்தரை லட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இதெல்லாம் இந்த அரசு செய்த சாதனை.

புதிய திட்டங்கள்

தூத்துக்குடியில் 49 ஆயிரம் கோடி ரூபாயில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கவிருக்கிறோம். இதன் மூலமாக நேரடியாக 5,000 நபர்களுக்கும், மறைமுகமாக 15,000 நபர்களுக்கும், மொத்தம் 20,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். நேற்றையதினம் அம்மாவினுடைய அரசு, அம்மாவினுடைய அமைச்சரவையிலே ஒப்புதலை வழங்கியிருக்கிறது.

அதேபோல, பிஒய்டி மொபைல் போன் உதிரிபாகம் தயாரிப்பதற்கு 603 கோடி ரூபாயில் அனுமதி கொடுத்திருக்கிறார்கள். இதனால் 11,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். மிஸ்பா சிகாம் இந்திய நிறுவனம் முதலீடு 504 கோடி ரூபாய். இதனால் 330 நபர்களுக்கு வேலை கிடைக்கும். காளீஸ்வரி டெக் நிறுவனம் முதலீடு 230 கோடி, 755 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். லீ டெக் மொபைல் நிறுவனம் முதலீடு 1900 கோடி, 16,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும், அதற்கான உத்தரவு வழங்கப்பட்டிருக்கிறது. இனி பணி துவங்க வேண்டும்.

ரூ.2500 கோடி நிறுவனத்துக்கு நாளை அடிக்கல்

வரும் 23ம் தேதி (நாளை) டிஎல்எப் நிறுவனம் ரூபாய் 2500 கோடியில் நிறுவி, 17 ஆயிரம் நபர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கவுள்ளார்கள். அதற்கு நான் அடிக்கல் நாட்டவுள்ளேன். 6.2.2020-ல் போடு கார் நிறுவனம் அடிக்கல் நாட்டவுள்ளார்கள். இதனால் ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கின்றது. சியட் டயர் நிறுவனம் ரூபாய் 4 ஆயிரம் கோடியில் 12.2.2020-ல் நிறுவவுள்ளதற்கு நானே அடிக்கல் நாட்டவுள்ளேன். இவையெல்லாம் அம்மா மறைவிற்குப் பிறகு அம்மாவின் அரசு தீவிரமாக தமிழகத்தில் புதிய, புதிய தொழில்கள் தொடங்க வேண்டுமென்பதற்காக ஒவ்வொரு நாளும் எடுத்த நடவடிக்கைகளின் அடிப்படையில் ஆயிரக்கணக்கான கோடி தமிழகத்தில் முதலீடு செய்ய தொழிலதிபர்கள் முன் வந்து கொண்டிருக்கின்றார்கள். அதன் மூலமாக படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. மறைமுகமாக பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

ஸ்டாலின் பொய் எடுபடாது

அம்மாவின் அரசு உங்களுடைய அரசு, மக்களுடைய அரசு, மக்களுக்குத் தேவையான திட்டங்களை நிறைவேற்றுகின்ற ஒரே அரசு என்பதை இந்த நேரத்திலே சுட்டிக்காட்டி, ஸ்டாலின் அவர்களே நீங்கள் எத்தனை பொய் பேசினாலும் மக்களிடத்திலே எடுபடாது. ஏனென்றால் நாங்கள் ஒவ்வொரு நாளும் மக்களுக்காக திட்டங்களைத் தீட்டி நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கின்றோம். மக்களுக்குத் தேவையான நன்மைகளை செய்து கொண்டிருக்கின்றோம்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *