செய்திகள்

ஸ்டாலின் பொய் பிரச்சாரம் மக்களிடம் இனி எடுபடாது: எடப்பாடி பழனிசாமி பேச்சு

Spread the love

சேலம், பிப். 25–

ஸ்டாலின் பொய் பிரச்சாரம் இனி மக்களிடம் எடுபடாது. 2021லும் அண்ணா தி.மு.க ஆட்சி தான் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சேலத்தில் நடந்த ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:–

இந்த ஆட்சியில் எந்தத் திட்டமும் நிறைவேற்றப்படவில்லை என்ற ஒரு தவறான குற்றச்சாட்டை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் சொல்லுகிறார். இன்றைக்கு, துறை வாரியாக தேசிய விருதுகளைப் பெற்றுக் கொண்டிருக்கிறோம். மின்சாரத் துறையில், தேசிய விருது, வேளாண்மைத் துறையில் தொடர்ந்து ஐந்தாண்டு காலம் உணவு தானிய உற்பத்தி. இன்றைக்கு இந்தியாவிலேயே அதிக அளவில் உற்பத்தி செய்து தேசிய விருதை பெற்ற ஒரே அரசு தமிழ்நாடு அரசு. உறுப்பு மாற்று அறுவை சிகிக்சையில் தொடர்ந்து தேசிய அளவில் விருதுகளைப் பெற்றிருக்கிறோம். பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்திற்கு மத்திய அரசு விருது. தூய்மை பாரதம் திட்டத்திற்கு சிறந்த விருது, மாற்றுத் திறனாளிகளுக்கு அதிக கடனுதவி வழங்கியதற்காக, தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கிக்கு தேசிய விருது. போக்குவரத்துத் துறையில், கல்வித் துறையில் விருதுகள் பெற்றிருக்கிறோம். அதற்கு மேலாக, மத்திய அரசின் திறன்மிக்க நல்லாட்சி தரவரிசையில் முதலிடம், முதன்மை மாநிலம் என்று இன்றைக்கு நாம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறோம் என்று சொன்னால், எந்த அளவுக்கு இன்றைக்கு சிறப்பாக ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். வேண்டுமென்றே திட்டமிட்டு இன்றைக்கு ஸ்டாலின் பொய்யான செய்தியை மக்களிடத்திலே பரப்புகிறார். ஆரம்பக் கட்டத்திலே நான் முதலமைச்சராக பொறுப்பேற்கின்றபொழுது ஸ்டாலின், இந்த எடப்பாடி பழனிசாமியின் அரசு பத்து நாள் நீடிக்கும் என்றார், நீடித்தது. அப்புறம் 1 மாதம் தான் நீடிக்கும் என்றார், நீடித்தது. அதற்குப் பிறகு பட்ஜெட் போடுகிற வரைக்கும் இந்த ஆட்சி நீடிக்குமா என்றார், நீடித்தது. மானியக் கோரிக்கை முடியும் வரை இந்த ஆட்சி நீடிக்குமா என்றார், நீடித்தது, அப்புறம் 6 மாதங்கள் நீடிக்குமா என்றார், நீடித்தது. 1 வருடம் நீடிக்குமா என்றார், நீடித்தது. இப்பொழுது மூன்றாண்டுகள் நிறைவு பெற்று நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது.

2021லும் அண்ணா தி.மு.க. ஆட்சி தான்

2021-லும் அண்ணா தி.மு.க. தான் ஆட்சி அமைக்கும், அதையும் ஸ்டாலின் பார்க்கத் தான் போகிறார். எங்கள் மடியிலே கனமில்லை, வழியிலே பயமில்லை. நீங்கள் எந்த குற்றச்சாட்டைச் சொன்னாலும், அதைப்பற்றி எங்களுக்கு கவலையில்லை, தப்பு செய்தால் தானே பயப்பட வேண்டும். உங்களுடைய ஆட்சியில் நடைபெற்ற ஊழல் போல எங்கள் ஆட்சியில் எந்த ஊழலும் நடைபெறவில்லை. எவ்வளவோ பொய்யான வழக்குகளை போட்டுப் பார்த்தீர்கள், அதையெல்லாம் நிரூபணம் செய்ய முடியவில்லை. உங்களுடைய ஆட்சியில் பூச்சி மருந்து ஊழல், வீராணம் ஊழல், இன்னும் அந்த பைப் எல்லாம் காட்சியளிக்கிறது, அந்த ஊழலுக்கு அதுவே சாட்சி.

எப்பொழுது பார்த்தாலும், அண்ணா தி.மு.க. அரசு ஊழல் அரசு என்று ஒரு பொய்யை திருப்பித் திருப்பிச் சொன்னால் மக்கள் நம்புவார்கள் என்று பார்க்கிறார், நிச்சயம் நம்பமாட்டார்கள். ஏனென்றால், நாங்கள் உண்மையைச் சொல்கிறோம், சொன்னதைச் செய்கிறோம். ஆகவே, மக்கள் எங்களை நம்புகிறார்கள். நீங்கள் அப்படியா இருக்கிறீர்கள்?

பொய் பேசும் ஸ்டாலின்

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலிலே எவ்வளவு பெரிய பொய் பேசினீர்கள். கொஞ்ச நஞ்சமாகவா பொய் பேசினீர்கள். கல்விக் கடன் ரத்து, விவசாயிகள் வாங்கிய கடன் தேசியமயமான வங்கியானாலும் சரி, கூட்டுறவு வங்கியானலும் சரி, தனியார் வங்கியானாலும் சரி, பொய் தானே சொல்கிறோம், விலை கொடுத்தா வாங்குகிறோம். இலவசமாக சொல்வது தானே. தனியார் வங்கியில் வாங்கிய கடன் கூட ரத்தாம். இப்படிப்பட்ட பொய் பேசுகின்ற மகா பொய்யாளி யார் என்றால் ஸ்டாலின் தான். அப்புறம் சொன்னார், 5 சவரனுக்கு கீழ் இருந்தால் நகைக் கடன் தள்ளுபடி, இது எல்லாம் செய்ய முடியுமா. நீங்கள் ஆட்சியிலா இருக்கிறீர்கள். ஆட்சியிலே இருப்பது நாங்கள். நாங்கள் சொல்வதை செய்ய முடியுமா, நீங்கள் சொல்வதை செய்ய முடியுமா. இப்படி ஏமாற்றி, பொய் பேசி நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றீர்கள். அது முடிந்து 5 மாதம் கழித்து உள்ளாட்சி தேர்தல் நடந்தது, நம்முடைய சேலம் மாவட்டத்தில் அண்ணா தி.மு.க. கழகம் மாவட்ட கவுன்சிலர் 22-க்கு 18 நாங்கள் ஜெயித்திருக்கிறோம். ஐந்தே மாதத்தில் பொய் நிலைக்கவில்லை. உங்களுடைய பொய் முகம் வெளிச்சத்திற்கு வந்து விட்டது. மக்கள் அழகாக உண்மையை உணர்ந்தார்கள். எங்கள் பக்கம் வாக்கு அளித்தார்கள்.

பொய் நிலைக்காது

ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர்கள், 20-க்கு 19 நாங்கள் தான் ஜெயித்து இருக்கின்றோம். ஆக, நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பொய் பிரச்சாரம் செய்து மக்களை ஏமாற்றி அதன்மூலம் வெற்றி பெற்றீர்கள். பொய் என்றைக்கும் நிலைக்காது என்பதை உள்ளாட்சி மன்றத் தேர்தல் மூலமாக மக்கள் நிரூபித்து விட்டார்கள். வரஇருக்கின்ற மாநகராட்சி தேர்தலில் சேலம் மாநகராட்சியில் 60 வார்டுகள் இருக்கின்றது. அண்ணா தி.மு.க. கூட்டணி அதனை முழுவதையும் வெற்றி பெறும். ஏன் என்று சொன்னால் நீங்கள் வைத்த கோரிக்கைகளை அனைத்தும் நிறைவேற்றி இருக்கின்றோம். நாங்கள் திட்டங்களை நிறைவேற்றியதால் கேட்கிறோம், நிறைவேற்றாமல் கேட்கவில்லை. வருகின்ற மாநகராட்சி தேர்தல் மிக முக்கியமான தேர்தல். நம்முடைய வேட்பாளர் வெற்றி பெற்றால் தான் அரசு செயல்படுத்தும் திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற முடியும். இந்த பகுதியினுடைய அடிப்படை தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என்று சொன்னால் அந்த உள்ளாட்சியிலே அண்ணா தி.மு.க.வை சேர்ந்தவர் அதில் பிரதிநிதியாக இருந்தால் தான் அரசு போடுகின்ற திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற முடியும். சேலம் மாவட்டம் முதலமைச்சரை பெற்றுள்ள மாவட்டம் என்பதை நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். இந்த மாவட்ட மக்கள் என்னிடம் அளிக்கின்ற மனுக்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்பதை நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *