செய்திகள்

அ.தி.மு.க. ஆட்சி தொடர மக்கள் விரும்புகிறார்கள்: எடப்பாடி பேச்சு

ஏராளமான திட்டங்களை நிறைவேற்றி மக்களின் நன்மதிப்பை பெற்றிருக்கிறோம்

அ.தி.மு.க. ஆட்சி தொடர மக்கள் விரும்புகிறார்கள்: எடப்பாடி பேச்சு

சிறுபான்மை மக்களுக்கு என்றென்றும் பாதுகாப்பு அரண் அம்மாவின் அரசு

ஆம்பூரில் இன்று தீவிர பிரச்சாரம்

ஆம்பூர், பிப்.10–

அண்ணா தி.மு.க. தொடர்ந்து ஆட்சிக்கு வரவேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். இதனை யாராலும் தடுக்க முடியாது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சிறுபான்மை மக்களுக்கு என்றென்றும் பாதுகாப்பு அரண் அம்மாவின் அரசு தான் என்றும் அவர் கூறினார்.

தமிழகம் முழுவதும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். அவர் செல்லும் இடமெல்லாம் மக்கள் வெள்ளமென உற்சாகத்துடனும், எழுச்சியுடனும் வருகிறார்கள். முதலமைச்சரின் பேச்சை ஆர்வத்துடன் கேட்டு கை தட்டி ஆரவாரம் செய்து வரவேற்கிறார்கள். பெண்கள் அதிக அளவில் வந்து பங்கேற்கிறார்கள். நாளுக்கு நாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு செல்வாக்கு பெருகி வருவதை காணமுடிகிறது.

ஒவ்வொரு கூட்டத்திலும் ஸ்டாலினின் பொய் பிரச்சாரத்திற்கு தக்க ஆதாரங்களை புள்ளி விவரங்களுடன் பதிலடி கொடுத்து வருகிறார்.

நேற்று ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொண்ட முதலமைச்சர் இன்று திருப்பத்தூர் மாவட்டத்தில் தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்து ஆதரவு திரட்டுகிறார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (10–ந் தேதி) திருப்பத்தூர் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டபோது ஆம்பூரில் நடைபெற்ற மகளிர் சுயஉதவிக் குழுவினர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசியதாவது:–

பெண்கள் நாட்டின் கண்கள், பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்கலாம். அந்த சக்தி அவர்களுக்கு இருக்கின்றது. இன்றைக்கு கல்வி, வேலைவாய்ப்பில் என அனைத்து துறைகளிலும் ஆண்களை விட பெண்கள் சாதித்துக் கொண்டிருக்கின்றார்கள். ஒரு குடும்பத்தில், குடும்பத்தலைவி எவ்வாறு சிறப்பாக செயல்படுகிறாறோ, அந்த அளவுக்கு குடும்பம் ஏற்றம் பெறும்.

அதற்காகத்தான் அம்மா பெண்கள் முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் அளித்தார். பெண்கள் முன்னேற்றம் அடைந்தால் தான் நாடு முன்னேற்றம் அடையும். பெண்கள் முன்னேற்றம் அடைய அம்மாவின் அரசு எடுத்த நடவடிக்கைகள் எந்த அளவிற்கு பயனளிக்கின்றது என்பது இன்றைக்கு நிரூபணமாகிக் கொண்டிருக்கின்றது. அம்மாவின் அரசு தொடர்ந்து பெண்களின் முன்னேற்றத்திற்காக அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்ற செய்தியை இந்த நேரத்திலே கூறிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.

தற்போது மகப்பேறு நிதியுதவி 18,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் 67 லட்சம் கர்ப்பிணித் தாய்மார்கள் பயனடைந்துள்ளனர். அதே போன்று கர்பிணித் தாய்மார்கள் பெற்றெடுக்கின்ற குழந்தைகள் வளமோடு, நலமோடு வளர வேண்டும் என்பதற்காக 16 வகையான பொருட்கள் அடங்கிய குழந்தைகள் நல பரிசுப் பெட்டகம் வழங்கி வருகிறது அம்மாவின் அரசு. இதன் மூலம் 25 லட்சம் குழந்தைகள் பயன்பெற்றுள்ளனர்.

இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் என்று சென்னை மற்றும் கோவையை தேர்ந்தெடுத்துள்ளார்கள். அந்த அளவுக்கு நிர்வாக திறமை மிக்க அரசு அம்மாவின் அரசு என்பதை நாம் நிரூபித்துக்கொண்டிருக்கின்றோம். அதேபோல கருவுற்ற தாய்மார்களின் உடல்நலனை மேம்படுத்தும் வகையில் பல்வேறு சித்த மருந்துகள் அடங்கிய அம்மா மகப்பேறு சஞ்சீவி பெட்டகம் 1.07 கோடி தாய்மார்கள் பெற்றுள்ளார்கள். பெண்கள் கருவுற்ற காலத்தில் இருந்து குழந்தை பெறும் வரை ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த திட்டத்தை செயல்படுத்திய அரசு அம்மாவின் அரசு.

பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு இந்திய தண்டனைச் சட்டத்தில் கடுமையான சட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது அண்ணா தி.மு.க. அரசு. இது உங்களுடைய அரசு, மக்களுடைய அரசு. மக்களின் எண்ணங்களை நிறைவேற்றுகின்ற அரசு. 2011–ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் அம்மா, நான் ஆட்சிக்கு வந்ததும் இல்லத்தரசிகளின் இன்னல்களை குறைக்க மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்குவேன் என்று அறிவித்தார். அதன்படி அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கினார்.

வாக்குறுதி நிறைவேற்றம்

தி.மு.க ஆட்சியில் இதுபோன்ற திட்டங்கள் உண்டா? ஏழை மக்களை சிந்தித்துப் பார்த்தார்களா? ஏழை மக்களுக்காக திட்டங்களை கொண்டு வந்தார்களா? ஒன்றுமே கிடையாது. நாங்கள் தேர்தல் நேரத்தில் என்னென்ன வாக்குறுதி அளித்தோமோ அதை எல்லாம் சிந்தாமல், சிதறாமல் நிறைவேற்றி வருகின்றோம். தி.மு.க.-வினரும் வாக்குறுதி அளித்தார்கள். நிலமற்ற விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் கொடுக்கப்படும் என்று, இந்தப் பகுதியில் எந்த விவசாயிக்காவது 2 ஏக்கர் நிலம் கிடைத்ததா? நிலத்தை கொடுக்காமல் போனாலும் பரவாயில்லை, அப்பாவி மக்களிடத்திலிருந்து நிலத்தை பிடுங்காமல் இருந்தாலே, அதை அவர்களது சாதனையாக நினைத்துக்கொள்ளலாம்.

ஸ்டாலின் செல்லும் இடம் எல்லாம் பேசி வருகின்றார். அண்ணா தி.மு.க ஆட்சியில் என்ன குறை? என்று கேட்கிறார். நாங்கள் தான் பதவியில் இருக்கிறோம். இந்தப் பகுதியில் கூட பாதாள சாக்கடைத் திட்டத்தை நாங்கள்தானே நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். பாதாள சாக்கடைத் திட்டத்தை ஏறத்தாழ 70 விழுக்காடு நிறைவேற்றியிருக்கின்றோம்.

ஆம்பூர் நகராட்சியில் அம்ருத் திட்டத்தின் மூலம் குடிநீர் திட்டத்தை நிறைவேற்றியிருக்கிறோம். திமுக எம்.எல்.ஏ. தொகுதி என்றாலும், 234 தொகுதிகளையும் எங்கள் தொகுதி என்று கருதி மக்களுக்கு நல்லது செய்ய வேண்டுமென்ற பரந்த நோக்கத்தோடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனால், திமுக-காரர்கள் அவ்வாறு நினைக்கமாட்டார்கள். எப்போது பார்த்தாலும் ஸ்டாலின், தான் ஜெயித்து வந்த சென்னையிலுள்ள கொளத்தூர் தொகுதிக்குச் சென்றுதான் நலத்திட்ட உதவிகள் செய்வார், அங்கு தான் பேசுவார், வேறு எந்தத் தொகுதிக்கும் செல்லமாட்டார். அப்படிப்பட்ட குறுகிய எண்ணம் கொண்ட கட்சி திமுக.

தமிழகம் முதலிடம்

அதேபோல, இன்றையதினம் மதம், ஜாதியின் அடிப்படையில் வாக்குகள் பெறுவதற்கு சில கட்சியினர் முயற்சி செய்து கொண்டிருக்கின்றார்கள். அண்ணா திமுக மதத்தைப் பார்த்து ஆட்சி செய்கிற அரசு அல்ல. ஆண், பெண் ஜாதி மட்டுமே நாங்கள் பார்க்கிறோம். இந்தியாவிலேயே சட்டம் -ஒழுங்கை பேணிக் காப்பதில் முதல் மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்ந்து, தற்போது தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக இருக்கின்றது.

இந்த மண்ணில் பிறந்த எந்த மதத்தைச் சார்ந்தவர்களுக்கும் அம்மாவின் அரசு முழு பாதுகாப்பு கொடுக்கும். இதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது. இருபெரும் தலைவர்கள் வழியில் நாங்கள் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கின்றோம். சிறுபான்மையின மக்களுக்கு இந்த ஆட்சியில் எவ்வித பாதுகாப்பும் இல்லை என்ற தவறான செய்தியை எதிர்க்கட்சியினர் பரப்பி வருகின்றனர். நூற்றுக்கு நூறு சதவீதம் அது பொய். நாங்கள் மக்களை மதிக்கிறோம், நேசிக்கிறோம், மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கின்றோம். அதனால்தான் எங்கள் அரசு தொடர்ந்து வெற்றி பெற்று மக்களுக்கு பணி செய்து வருகிறது.

சிறுபான்மையின மக்களுக்கு நாங்கள் ஏராளமான திட்டங்களை வழங்கிக் கொண்டிருக்கின்றோம். புரட்சித் தலைவி அம்மா புனித இரமலான் நோன்பு மேற்கொள்ள 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களுக்கு 5,145 டன் அரிசியை வழங்கிக் கொண்டிருந்தார். நாகூர் தர்கா சந்தனக்கூடு திருவிழா நடத்த விலையில்லாமல் சந்தனக் கட்டைகள் வழங்குகிறோம்.

மாவட்ட ஹாஜிகளுக்கு 20 ஆயிரம் ரூபாய் மதிப்பூதியம் கொடுக்கின்றோம். உலமாக்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் 1500 ரூபாயிலிருந்து 3000 ரூபாயாக உயர்த்தியுள்ளோம். ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள மத்திய அரசு வழங்கி வந்த நிதியுதவியை நிறுத்தினாலும், அம்மாவின் அரசு தொடர்ந்து வழங்கிக் கொண்டிருக்கிறது. இசுலாமியப் பெருமக்களின் கோரிக்கையை ஏற்று ஹஜ் புனித பயணம் மேற்கொள்வதற்கான நிதியுதவியை 6 கோடி ரூபாயிலிருந்து 10 கோடி ரூபாயாக நாங்கள் உயர்த்தியிருக்கிறோம்.

பாதுகாப்பு அரண்

அண்மையில் நான் நாகப்பட்டினம் சென்ற போது, நாகூர் தர்காவில் பழுதடைந்துள்ள குளத்தின் தடுப்புச் சுவரை புதிதாகக் கட்டிக்கொடுக்க வேண்டுமென்று அங்குள்ள இசுலாமியப் பெருமக்கள் வைத்த கோரிக்கையை ஏற்று ஏறத்தாழ 4.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குளத்தின் கரை கட்டிக் கொடுக்கும் பணி தொடங்கவுள்ளது. எனவே, சிறுபான்மையின மக்களுக்கு பாதுகாப்பு அரணாக இருக்கின்ற அரசு அம்மாவின் அரசு என்பதை நாங்கள் நிரூபித்துக் காட்டிக் கொண்டிருக்கிறோம்.

சென்ற தைப்பொங்கலின் போது 1,000 ரூபாய் கொடுத்தோம். கொரோனா வந்த நேரத்திலும், குடும்பத்திற்கு 1,000 ரூபாய் கொடுத்தோம். இந்த தைப் பொங்கலுக்கு 2,500 கொடுத்தோம். சென்ற தைப்பொங்கல் தொடங்கி, இந்த தைப்பொங்கல் வரை 4,500 ரூபாய், ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் கொடுத்த ஒரே அரசாங்கம் அம்மாவின் அரசாங்கம். எந்த ஆட்சியில், எந்த அரசாங்கத்தில் கொடுத்தார்கள்?

ஒரு விவசாயி முதலமைச்சராக இருக்கின்ற காரணத்தினால், மக்களின் துன்பங்களையும், துயரங்களையும் தெரிந்த காரணத்தால், இரவு, பகல் பாராமல் உழைக்கின்ற உழைப்பாளி குடும்பம் சந்தோஷமாக தைப்பொங்கலை கொண்டாட வேண்டுமென்பதற்காக அன்று முதல் இன்று வரை குடும்ப அட்டைதாரர்களுக்கு பரிசாக அந்த நிதியை கொடுத்துக் கொண்டிருக்கிறது.

இது உங்களுடைய அரசு, நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ நாங்கள் அதை செய்து கொடுத்தோம். நீங்கள் தான் முதலமைச்சர். ஸ்டாலின் வேண்டுமென்றால் அவர் முதலமைச்சர், முதலமைச்சரென்று கனவு கண்டுகொண்டிருக்கலாம், என்னைப் பொறுத்தவரை இங்கு இருக்கின்றவர்கள்தான் முதலமைச்சர். நீங்கள் என்ன ஆணையிடுகிறீர்களோ, என்ன நினைக்கிறீர்களோ அதை நிறைவேற்றுவது முதலமைச்சருடைய பணி.

அந்த வேலைதான் நான் செய்துகொண்டிருக்கிறேன். அவரைப் போல எங்கு பார்த்தாலும் மூன்று மாதத்தில் சி.எம். ஆகிவிடுவேன், மூன்று மாதத்தில் சி.எம்.ஆகிவிடுவேன், இது என்ன கடையில் விற்கும் பொருளா? இவர் வாங்கிக் கொண்டு போவதற்கு. மக்கள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்க வேண்டும், இதை அவர் மறந்து விட்டார்.

தி.மு.க. குடும்பமே அப்படித்தான் இருக்கிறார்கள். மக்களைப் பற்றி நினைக்கவே மாட்டார்கள். அவர் மூன்று மாதத்தில் சி.எம். ஆவேன் என்கிறார், நாங்களா தடுக்கிறோம்? நாங்களா உங்களை தடுக்க முடியும்? மக்கள் என்ன எண்ணுகிறார்களோ, அந்த எண்ணப்படிதான் நடக்கும். மக்கள் அண்ணா தி.மு.க., ஆட்சிக்கு வரவேண்டுமென்று நினைக்கிறார்கள். அதை யாராலும் தடுக்க முடியாது. ஏனென்றால் அத்தனை திட்டங்களை நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம். மக்களின் நன்மதிப்பை பெற்றிருக்கின்றோம். அதன் மூலமாக, எங்கள் அரசு தொடரும் என்று நம்புகிறோம்.

மீண்டும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் கண்ட கனவு, புரட்சித்தலைவி அம்மா கண்ட கனவு, இருபெரும் தலைவர்களுடைய வழியில் செயல்படும் ஆட்சி தொடர வாக்களிப்பீர் இரட்டை இலைக்கு. கழக வேட்பாளரை வெற்றி பெறச் செய்து மக்களுடைய ஆட்சி தொடர எங்களுடைய அரசுக்கு ஆதரவு தாருங்கள், கழகத்திற்கு ஆதரவு தாருங்கள் என்று இருகரம் கூப்பி வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *