செய்திகள்

சட்டசபையை புறக்கணித்த தி.மு.க.வை தேர்தலில் மக்கள் புறக்கணிப்பார்கள்: சட்டசபையில் அமைச்சர் பி.தங்கமணி திட்டவட்டம்

சென்னை, பிப்.4

சட்டசபையை புறக்கணித்த தி.மு.க.வை நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் மக்கள் புறக்கணிப்பார்கள் என்று சட்டசபையில் மின்துறை அமைச்சர் பி.தங்கமணி கூறினார்.

சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது அண்ணா தி.மு.க. உறுப்பினர் கஸ்தூரி வாசு, வால்பாறை தொகுதி காடம்பாறை பகுதி மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதி. இங்குள்ள மரப்பாலம் வெள்ளிமுடி மற்றும் செட்டில்மென்ட் பகுதிகளுக்கு மின் இணைப்பு வழங்க அரசு நடவடிக்கை எடுக்குமா? என்று கேட்டார்.

இதற்கு மின்துறை அமைச்சர் பி.தங்கமணி பதில் அளித்தார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை குடிமராமத்து நாயகன் என்று அழைக்கிறோம். அவர் மழைக்கு சொந்தக்காரர். ராசிக்காரர். மார்கழி மாதத்தில் கூட மழை மும்மாரி பொழிகிறது.

எடப்பாடி பழனிசாமி தலைமையில் அம்மாவின் ஆட்சி மீண்டும் அமைவதற்கு இதெல்லாம் எடுத்துக்காட்டு.

சட்டமன்ற உறுப்பினர்களை மக்கள் தேர்ந்தெடுத்து இங்கு அனுப்புகிறார்கள். ஆனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளான தி.மு.க. வினர் இந்த அவைக்கு வந்து மக்களின் கோரிக்கைகளை எடுத்துக் கூறி பேசுவதற்கு பதிலாக இந்த அவையையே புறக்கணித்து சென்றிருக்கிறார்கள். இப்படி புறக்கணித்து சென்றவர்களை இந்த தேர்தலில் மக்கள் புறக்கணிப்பார்கள். மீண்டும் எடப்பாடி தான் முதலமைச்சர். அவருக்கு உறுதுணையாக இருக்கும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தையும் பாராட்டுகிறேன் என்று அமைச்சர் பி.தங்கமணி கூறினார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், உறுப்பினர் குறிப்பிட்ட பகுதிகளுக்கு இப்போது சூரிய சக்தி மூலம் மின்சாரம் வழங்கப்படுகிறது என்று கூறினார்.

தொடர்ந்து கஸ்தூரி வாசு எழுந்து, தி.மு.க. ஆட்சியில் இருண்டு கிடந்த தமிழகத்தை ஒளிமயமாக்கி மின்மிகை மாநிலமாக உயர்த்தி இருக்கிறீர்கள். அதுமட்டுமல்ல அனைவருக்கும் 100 யூனிட் இலவச மின்சாரமும் வழங்குகிறீர்கள். மழை காரணமாக சூரிய ஒளி மின் விளக்குகள் எரிவதில்லை. எனவே மின் இணைப்புகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இதற்கு அமைச்சர் தங்கமணி பதில் அளிக்கையில், மலை பகுதியில் மின் இணைப்பு வழங்குவதற்கு வனத்துறையிடமிருந்து தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும். இதற்காக உச்சநீதிமன்றம் ஆணை ஒன்றை பிறப்பித்திருக்கிறது. எனவே வனத்துறை அனுமதி கொடுத்தால் பிரச்சினை இல்லை. தமிழ்நாடு முழுவதும் 3,971 மலைப்பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. 160 வீடுகள் வனத்துறை தடையில்லா சான்றிதழ் தந்தால் அதற்கும் மின் இணைப்பு வழங்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

விருகை ரவி எழுந்து விருகம்பாக்கம் தொகுதியில் 2016ம் ஆண்டு வாக்கு கேட்க சென்றபோது, இந்த பகுதியில் புதைவழி மின் கம்பிகள் புதைக்கப்படும் என்று தெரிவித்தேன். 50 சதவீத பணிகள் முடிவடைந்திருக்கின்றன. சில பகுதிகள் ஆக்கிரமிப்பு மற்றும் குறுகலான சாலைகளாக உள்ளன. எனவே இந்த பகுதிகளிலும் புதைவழி மின் கம்பிகள் புதைக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர், சென்னை நகர் முழுவதும் எந்தெந்த பகுதியில் புதைவழி மின் கம்பி இல்லையோ, அந்த பகுதிகளில் எல்லாம் புதைவழி மின் கம்பி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. உறுப்பினர் சொன்ன கோரிக்கையும் ஆய்வு செய்து நிறைவேற்றப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *