சினிமா

தனுஷின் ரசிகர்களுக்கு மகரசங்கராந்தி கரும்பு, தித்திக்கும் சர்க்கரைப் பொங்கல்!

Spread the love

ஆடுகளத்தில் (சினிமா) அசுர(ன்) வேகம் காட்டக்கூடிய இளைய தலைமுறையினரில் தனி சிவப்புக் கம்பளம் விரிக்கக்கூடிய நடிகர்கள் இருக்கிறார்கள் என்றால் அதில் தன்னைப் பதிவு செய்து கொண்டிருக்கும் முதல் தரமானவர் என்று அடையாளம் காட்டிக் கொண்டிருப்பவர் தனுஷ்.

கலைப்புலி எஸ் தாணுவின் அசுரன் (இயக்கம் – வெற்றிமாறன்) படத்துக்குப் பிறகு வரக்கூடிய ஒரு படம் ‘பட்டாஸ்’ என்று எக்கச்சக்க எதிர்பார்ப்பு இருந்து கொண்டிருந்த நிலையில்…

கதாபாத்திரத்தின் தன்மையிலும் நடிப்பிலும் எதிர்பார்ப்பில் ஏமாற்றம் இல்லை, அசுரனுக்கு இணையாக நடிப்பில் ஒரே நேர்கோட்டில் நின்றிருக்கிறார் தனுஷ், வெற்றிக் கோட்டில் கால் பதித்திருக்கிறார்.

சத்யஜோதி பிலிம்ஸ் டி.ஜி.தியாகராஜனின் கலை வாரிசுகள் செந்தில் தியாகராஜன், அர்ஜுன் தியாகராஜன் இன்றைய இளசுகளின் எதிர்பார்ப்பு எப்படி இருக்கும் என்று அதன் ரகசியத்தை புரிந்து கொண்டு ஆக்ஷன் ஃபார்முலாவை உதறாமல் நாயகனின் நடிப்புக்கு தீனி போடும் இயக்குனர் ஆர்.எஸ். துரை செந்தில் குமாரை தேடிப்பிடித்து இருப்பது தான் கலை வாரிசுகளின் சாமர்த்தியம்.

செலவழித்த பணத்தை திரும்ப எடுத்துவிடும் சாமர்த்தியத்தில் பட்டாஸை திரையில் காட்டியிருக்கிறார்கள்.

ஜனரஞ்சக வெற்றி என்று சொன்னால்…

* முதலிடம் தந்தை – மகன் தனுஷ்!

* இரண்டாமிடம் இதுவரையில் பார்த்திராத வேடத்தில் சினேகா!

* மூன்றாமிடம் எழுத்து – இயக்கம் துரை செந்தில்குமார்!

சுமார் 150 நிமிடம் திரையில் ஓடும் கதையில் மண்வாசனை மறந்து போன பண்டைய புராதன தற்காப்புக்கலை அடிமுறையை தூசி தட்டி திரையில் எடுத்துக்கொடுத்து உயரத் தூக்கிப் பிடித்து இருப்பதற்காக துரை செந்தில்குமார் – தனுஷ் இரட்டையர்களுக்கு ஜே! (சூர்யாவை அழைத்துக்கொண்டு தமிழனின் பெருமை போதிதர்மரை தரணியில் வெள்ளித்திரை மூலம் மறு நினைவூட்டல் செய்திருக்கும் ஏ.ஆர்.முருகதாஸ் அடிச்சுவட்டில்…)

இரட்டை வேடம் தனுசுக்கு. அப்பா திரவியம் பெருமாள், மகன் பட்டாஸ் எனப்படும் சக்தி. வித்யாச கேரக்டருக்காக தேடுதல் வேட்டையில் மெனக்கெடும் தனுஷுக்கு அப்பா –பிள்ளை வேடம் என்றால் அது மகரசங்கராந்தி சர்க்கரை பொங்கலும், கரும்பும் போல.

என்னமாய் உரு மாறுகிறார்? உள்ளத்தில் உறைகிறார்; விஐபி படத்திலிருந்து பாதை மாறி பயணிக்க ஆரம்பித்திருக்கும் தனுஷின் கலை வாழ்க்கை நாளுக்கு நாள் மெருகேறுகிறதே!

திரவியம் பெருமாள் – அந்தப் பேரிலேயே என்ன ஒரு கம்பீரம்? கெத்து. தனுஷிடம் குறையில்லாத நடிப்பு. தோற்றத்திலும் சரி, நடிப்பிலும் சரி நல்ல முதிர்ச்சி.

அடிமுறை கலையில் – கராத்தே, குங்பூ, வர்மக்கலை ஆகியவற்றுக்கெல்லாம் தாய் இந்த அடிமுறை கலை. சேர சோழ பாண்டியன் காலத்தில் உச்சம் தொட்ட இந்த தற்காப்பு கலையில் வாத்தியார் நாசரின் சிஷ்யனாக தனுஷ் அறிமுகம். அக்காட்சியில் ஆரம்பித்து நாசரின் மகன் நவீன் சந்திராவால் குள்ளநரித்தனத்தில் சூழ்ச்சியால் கொல்லப்படும் காட்சி வரை தனுஷ்… அவரின் சாம்ராஜ்ஜியத்தில் ராஜபாட்டை நாயகன்!

பின்னணியில் சிவாஷ்டகம் ஒலிக்க கை கால்களை முன்னும் பின்னும் தூக்கி ஒரு கால் தரையில் பதித்து மறு கால் உயர்த்தி தூக்கி சிவதாண்டவம் ஸ்டைலில் அடிமுறை கலையில் தன் முழு பலத்தையும் காட்டும் அந்த வெறித்தனம் திரையில் வெலவெலக்க (கலகலக்க) வைக்கும்.

சங்க இலக்கியங்களில் கூறப்படும் ஆண்மகனின் காதல் – வீரம்; மனசில் ஒட்டுகிறார் தனுஷ். சினேக சங்கமத்தில் காதல் அது ஒரு தனிச் சுவை.

மீசை தாடி இல்லாத கெட்டப்பில் மகன் பட்டாஸ் தனுஷ். நாயகியுடன் கேலி சேட்டை, நண்பனுடன் கலாட்டா, சில்மிஷம். தனுஷ்: நடிப்பில் இரு துருவம்!

ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவாளர். ஸ்டண்ட் டைரக்டர் திலீப் சுப்பராயன் – இருவரும் துரை செந்திலுக்கு பலம். விவேக் மெர்வின் இசையில் மவனே… பாடல் மனசில் நிற்கும்!

டி.ஜி. தியாகராஜன் தயாரிப்பில் துரை  செந்தில்குமாரின் இயக்கத்தில் பட்டாஸ்:

தனுஷ் ரசிகர்களுக்கு மகர சங்கராந்தி கரும்பு;

தித்திக்கும் சர்க்கரை பொங்கல்!

–  வீ. ராம்ஜீ

* * *

துரை செந்தில்குமாரை மறக்க முடியுமா – சினேகா?

கன்னியாகுமரி கதாபாத்திரத்தில் சினேகா. அடிமுறை கலைப் பயிற்சியில் நாசரின் கட்டளைக்கு கீழ்ப்படிந்து செய்து காட்டும் – அசத்தும் அந்த மின்னல் வேகம். மகன் தனுசை பார்த்ததும் அவனிடம் தன் கணவனின் சாயல் தெரிந்ததும் பரவசம். தந்தை சாவுக்கு காரணமானவனை அடையாளம் காட்டி அவனை பழிவாங்க கொலைவெறி வைராக்கியம் தீயில் கருகும் கணவனைப் பார்த்து கதறும் சோகம். 8 வயது மகனை தூக்கி வரும்போது குறுக்கிடும் வெள்ளைக்காரனை வர்மக்கலை மூலம் சாகடித்து அந்த கொலைவெறியில் உக்கிரம் தணியும் சினேகா… அவரது கலை வாழ்க்கையில் மறக்கமுடியாது. முன்வரிசை படங்களின் பட்டியலில் பட்டாஸ் பேர் சொல்லும். இன்னும் அதே வசீகரம், அதே புன்னகை – அது சினேகாவுக்கு இயற்கை தந்த வரம்!

அடியோடு மறக்கப்பட்டு போன அடிமுறையை வரைகலை காட்சிகளோடு நினைவூட்டி இருப்பதில் இயக்குனர் துரை செந்தில்குமாருக்கு பாராட்டு!

* * *

நவீன் சந்திரா நடிப்பில் குறை இல்லை! நாசர் அடிமுறை கலை வாத்தியார்; சரியான தேர்வு! மெஹ்பிரின் நாயகி – வந்து வந்து போகிறார், ஓகே ஓகே! முனீஸ்காந்த் நட்சத்திர பட்டியலில் உண்டு. அதிகம் வேலை இல்லை!

* * *

நவீன் – சந்திரா தனுஷ் மோதும் அடிமுறை கலை; பொறி பறக்கும் விறுவிறுப்பு. காமிராவின் சுழற்சி ரசிக்கவைக்கும். திரைக்கதையில் திருப்பமோ, பரபரப்போ இல்லை. நம் ஊகம் எப்படியோ, காட்சிகள் அப்படியே!

ஜானியின் (டான்ஸ் டைரக்டர்) இயக்கத்தில் தனுஷின் நடன அசைவுகள் பிரமாதம். இதுவரை திரையில் பார்க்காத ஸ்டைலிலும் ஒயிலிலும் தனுஷ். அவரின் ரசிகர்கள் எகிறிக் குதிப்பார்கள்!

* * *

அடுத்த யோகிபாபு சதீஷ் தான்….!

காமெடியில் பெரும் தலைகள் இளைஞர்கள் பட்டத்தோடு சேர முடியாத ஒரு சூழ்நிலையில் சதீஷூக்கு அடித்திருக்கிறது யோகம்.

ரூபாய் 5 லட்சம் செக்குக்கான ‘ப்ளோ அப்’ பப்ளிசிட்டி போஸ்டரை திருடி வைத்துக்கொண்டு அதை முதுகில் கட்டியபடி இப்போ நாம லட்சாதிபதி என்று சொல்வதும்…

‘பாங்க்ல இதுக்கு காசு தர மாட்டானா’ என்று தனுஷிடம் அப்பாவித்தனமாக கேள்வி எழுப்பும்போதும் குபீர் சிரிப்பை வரவழைக்கிறார்!

காமெடிக்கு கலக்கப்போவது யாரு சதீஷ். அடுத்தடுத்து நான்கு படங்களுக்கு ஒப்பந்தமானார் என்றால்… அடுத்த யோகிபாபு இவரே! நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது!

* * *

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *