செய்திகள்

சுதந்திர போராட்ட வீரர் பொல்லான் பிறந்த நாள்: அரசு விழாவாக கொண்டாடப்படும்

சுதந்திர போராட்ட வீரர் பொல்லான் பிறந்த நாள்:

அரசு விழாவாக கொண்டாடப்படும்

எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

முழு உருவச்சிலையுடன் மணிமண்டபம் அமைப்படுகிறது

நாமக்கல், பிப்.16-

சுதந்திர போராட்ட வீரர் பொல்லான் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

ஆதி தமிழர் முன்னேற்ற கழகத்தின் சார்பில் அருந்ததியர் அரசியல் மாநாடு நேற்று நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு ஆதி தமிழர் முன்னேற்ற கழகத்தின் தலைவர் நாகராஜன் தலைமை தாங்கினார். இதில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:–

முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அருந்ததியர் சமுதாயத்தை அடையாளம் காட்டினார். அவர் வழியில் செயல்படும் இந்த அரசு அருந்ததியருக்கு பல நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது.

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.82 ஆயிரம் கோடி கடனுதவி வழங்கி உள்ளோம். பட்டியலின மக்கள் பல தொழில்கள் செய்து வாழ்க்கையில் ஏற்றம் பெற இந்த அரசு பல்வேறு திட்டங்களை செய்து வருகிறது.

தமிழகத்தில் விரைவில் 55 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. வீட்டுமனைப்பட்டா இல்லாத இடத்தை பட்டியலின மக்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். வீடு மற்றும் வீட்டுமனை இல்லாத பட்டியலின மக்களுக்கு நிலம் வழங்கி கான்கிரீட் வீடு கட்டித் தரப்படும். தூய்மைப் பணியாளர் நல வாரியம் மற்றும் தோல் பதனிடும் நல வாரியத்துக்கு விரைவில் பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள்.

17 லட்சம் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்

ஆதி திராவிடர் நலத்துறை சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 17 லட்சம் விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டு உள்ளது. 2013-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை பட்டியலின மாணவர்கள் உயர்கல்வி பயில ரூ.3 ஆயிரத்து 952 கோடி கல்வி உதவித்தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

சுதந்திர பேராட்ட வரலாற்றில் கொங்கு மண்டலத்திற்கு தனி பெருமை உள்ளது. சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை படை தளபதியாக இருந்த அருந்ததியர் சமுதாயத்தை சேர்ந்த பொல்லானுக்கு தனி சிறப்பு உள்ளது. ஆங்கிலேயர் படையில் மாறுவேடத்தில் இருந்து கொண்டு தீரன் சின்னமலைக்கு ஆங்கிலேயர்களைப் பற்றிய தகவல்களை ரகசியமாக கூறி வந்ததாகவும், இதை அறிந்த ஆங்கிலேயர்கள் பொல்லானை சுட்டுக்கொன்றதாகவும் வரலாறு கூறுகிறது.

அருந்ததியர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்றும், அவரின் வீரத்தினை வருங்கால சந்ததியினருக்கு எடுத்துச் செல்லும் வகையிலும் சுதந்திர போராட்ட வீரர் பொல்லானுக்கு தமிழக அரசு சார்பில் திருவுருவச்சிலையுடன் மணிமண்டபம் அமைக்கப்படும். அவரது புகழுக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் அவரது பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் .மறைந்த முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்திலிருந்து அருந்ததியர் சமுதாய மக்கள் அண்ணா தி.மு.க.வுக்கு ஆதரவாக இருப்பார்கள். வருகிற சட்டமன்ற தேர்தலில் அண்ணா தி.மு.க. அமோக வெற்றி பெற நீங்கள் துணை நிற்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த மாநாட்டில் அமைச்சர்கள் தங்கமணி, டாக்டர் சரோஜா, கே.சி.கருப்பணன், எம்.ஆர். விஜயபாஸ்கர், சந்திரசேகரன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கே.பி.பி.பாஸ்கர், சந்திரசேகரன், பொன்.சரஸ்வதி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் சாரதா, துணை தலைவர் பி.ஆர்.சுந்தரம் உள்பட அண்ணா தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

விழாவில் முதலமைச்சருக்கு ஆதி தமிழர் முன்னேற்ற கழகம் சார்பில் வெள்ளி வீரவாள் பரிசாக அளிக்கப்பட்டது. முன்னதாக ஆதி தமிழர் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் ஆனந்தன் வரவேற்று பேசினார். முடிவில் துணை பொதுச்செயலாளர் செல்வக்குமார் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *