சிறுகதை

பாரம்பரியம்! | இரா.இரவிக்குமார்

நாட்டு வைத்தியர் வேலப்பனை அவரது கிராமத்தில் வந்து சந்தித்தனர் இரு குடும்பத்தினர்.

பட்டணத்திலிருந்த தன் நண்பன் அவர்களிடம் கொடுத்தனுப்பிய கடிதங்களைக் காட்டினர்.

அவற்றைப் படித்துப் பார்த்தார் நாட்டு வைத்தியர் வேலப்பன்.

இரு கடிதங்களிலும் தான் எலும்புச்சிகிச்சை அளிக்கப்போகும் இரண்டு நோயாளிகளின் விரைவான ஆரோக்கியம் அல்லது அவர்களின் பழைய சகஜமான நிலைமையை அவர்களுக்கு திருப்பித் தருதல் அதுவும் குறுகிய காலத்தில் எவ்வளவு முக்கியம் என்பது குறிப்பிடப்பட்டிருந்தது.

இளம்பெண் ஒருத்திக்கு முழங்கை மூட்டு பிசகியது. வேதனையுடன் வந்திருந்தாள். அவளுக்கு இன்னும் இரண்டு வாரத்தில் திருமணம் நடைபெறவுள்ளது. அவளுக்குக் கணவனாக வரவிருப்பவன் லண்டனில் வேலைபார்க்கிறான்.

மூன்று மாதங்களுக்குமுன் இங்கு இந்தியாவிற்கு வந்து பெண்ணைப் பார்த்துவிட்டு திருமணத்திற்கு நிச்சயம் செய்துவிட்டுப் போனான் .

அடுத்தவாரம் மீண்டும் வருகிறான். திருமணம் முடிந்தபின் அவளைத் தன்னுடன் அழைத்துப் போக அவளது விசா பெறுவதற்கான ஏற்பாடுகளைச் செய்துவிட்டான். அவன் மட்டும் தனியாக லண்டன் போய்விடுவான். மூன்று மாதம் கழித்து மீண்டும் அவளுக்கு விசா கிடைத்தபின் இங்கு வந்து அவளைத் தன்னுடன் நிரந்தரமாகத் தங்க அழைத்துப்போவான். ஏனெனில் கடந்த முறையும் இம்முறையும் அவனுக்கு விடுமுறை போதிய அளவு கிடைக்கவில்லை.

எல்லாமே அவசரகதியில் செய்து முடிக்கவேண்டிய நிர்ப்பந்தம். நடுத்தர வருமான வர்க்கத்தைச் சேர்ந்த குடும்பம். வெளிநாட்டில் வேலைபார்க்கும் மாப்பிள்ளை கிடைத்ததைக் கொண்டாடும் மனப்பான்மை நடுத்தர வர்க்கத்தில் அதிகம்.

முழங்கை பிசகி வந்திருந்த பெண்ணுடன் அவளின் பெற்றோரும் அண்ணனும் வந்திருந்தனர். அவர்கள் மிகவும் கவலை, இனந்தெரியாத பதைபதைப்பு கொண்டு சோர்வாகக் காணப்பட்டார்கள். மொத்தத்தில் அவர்களைப் பார்க்கவே வைத்தியர் வேலப்பனுக்குப் பரிதாபமாக இருந்தது.

இப்படிப்பட்ட நோயாளிகள் அவரிடம் சிகிச்சைக்கு வருவது முதல்முறையல்ல. ஆனால் இதுவரை சிகிச்சைக்கு வந்தவர்கள் அக்கம் பக்கத்து கிராமத்தில் உள்ளவர்கள். திருமணம், அறுவடை, கோயில் விசேஷம், கிராமத்துப் பண்டிகை போன்றவற்றைக் காரணம் காட்டித் தங்களுக்கு நேர்ந்த எலும்பு முறிவிலிருந்து வேகமான நிவாரணம் கேட்டு அவரை வற்புறுத்துவார்கள்.

ஆனால் சென்னைப் பட்டணத்திலிருந்து தன் நண்பன் அதே மாதிரி வேண்டுகோளுடன் தான் அனுப்பும் நோயாளிகளை விரைந்து குணப்படுத்த வேண்டுமென்ற காலக் கெடுவுடன் கூடிய கடிதங்களை நோயாளியின் கையிலே கொடுத்தனுப்பியிருப்பது இதுவே முதல்முறை!

பட்டணத்து நண்பன் அனுப்பியிருந்த மற்றொருவர் குடும்பத் தலைவன். மனைவி நோயாளி, மகள்கள் ஒன்பது, பத்து வயது நிரம்பியவர்கள். அன்றாட ஜீவனத்திற்கே அல்லல்படும் ரகம். அவரை நம்பித்தான் குடும்பமே உள்ளது. கூலிவேலை செய்து பிழைக்கும் அவர் ஏணியிலிருந்து இடறி விழுந்து இடுப்பிலிருந்து தொடை எலும்பு நழுவி நடக்கமுடியாமல் படுக்க வைத்த நிலையிலே சென்னையிலிருந்து திருநெல்வேலியிலுள்ள இவர் கிராமத்திற்கு அவர் நண்பனால் அனுப்பி வைக்கப்பட்டிருந்தார்.

வேலப்பன் தன் நண்பன் தன்மீது வைத்திருக்கும் நம்பிக்கையை எண்ணி மெய்சிலிர்த்தார்.

சென்னைக்கு அருகிலே புத்தூரில் தன்னைப் போலவே எலும்புச் சிகிச்சை அளிக்கும் நாட்டு வைத்தியர் இருப்பதை அவர் நன்கு அறிவார். அருகில் இருக்கும் அங்குப் போகாமல் தன்னிடம் அவர்கள் வந்திருப்பது தன் நண்பனின் பரிந்துரையால்தான் என்பது அவருக்கு மிகவும் தெளிவாகப் புரிந்தது. இதனால் தனக்குள்ள பொறுப்பும் கடமையும் அதிகமானதை அவர் உணர்ந்தார்.

“ஏம்மா ரொம்பப் பயந்திட்டியா?… கல்யாணத்தில நீ ஜம்முனு எல்லா வேலையும் செய்யலாம்! அவருக்கு மூணுமுறை மாலை மாத்தும்போது இதே கையால் அவர் கழுத்தைக் கட்டிப்பிடிக்கவும் செய்யலாம்! அந்த அளவுக்குப் பலமாக அசைக்கவும் எந்தச் சின்ன அசைவையும் உன் இஷ்டம்போலப் பண்ணவும் முடியும்!”- அவரின் வேடிக்கைப் பேச்சைக் கேட்டு அந்த அழகிய இளம்பெண் மன உடல் வேதனை குறைந்து நம்பிக்கையுடன் கூடிய இளம்புன்னகை அவளது முகத்தில் லேசாக மலர்ந்தது. அவளின் பெற்றோரும் அண்ணனும் சிறிது மகிழ்ச்சியடைந்தனர்.

“அங்கிள், குணமாக எத்தனை நாளாகும்? மறுபடி முன்னமாதிரியே எல்லா வேலையும் செய்ய கையை நீட்ட மடக்க முடியுமா? எப்படி வேணுமானாலும் சுத்தவோ வீசவோ முடியுமா?”

“என்னம்மா… நீ கிரிக்கெட்டா விளையாடப்போற? கண்டிப்பா பழைய வேலை எல்லாத்தையும் நீ பண்ணலாம். இந்தக் கையால முன்னவிட பலமா பழைய வேலை எதையும் நீ செய்யலாம்! கல்யாணத்துக்குப் பின்னால நீ புருஷனனோட சரிசமமா ஃபைட் பண்ணலாம்! அதுக்கு நான் கியாரண்டி!”– அவள் பெற்றோர், அண்ணனுடன் சுற்றியிருந்தவர்களும் அவர் பதிலைக் கேட்டுக் கொல்லென்று சிரிக்க அவள் முகம் சிவந்தாள்.

அவளுடன் பேசிக்கொண்டிருந்தபோது அவளது வலது முழங்கை மூட்டு பிசகிய கையைத் தன் தோளுக்கு நேராக நீட்டிப் பிடித்து அவளது உள்ளங்கை விரல்களை ஒவ்வொன்றாகத் தன் வலது கைவிரல்களால் நீட்டியும் மடக்கியும் கொண்டிருந்தார் அவர். அவரது இடது கை அவளது தோளுக்கும் முழங்கைக்கும் இடையே உள்ள சதைப்பிடிப்பான பகுதியை அதன் மேலிருந்த ஜாக்கெட்டின் கைப்பாகத்துடன் அடியில் கெட்டியாகப் பிடித்திருந்தது.

பேச்சின் சுவாரஸியத்தில் சற்றே வேதனை மறந்து பேசிக்கொண்டிருந்த அவள் திடீரென்று வீரிட்டுக் கத்த ‘எல்லாம் முடிஞ்சிட்டுது… சரியாகிட்டுது!” என்று அவர் அவளது முதுகில் தட்டிக் கொடுத்தார். அவர் தன் வலது கையால் அவளது மணிக்கட்டுக்குமேல் பிடித்து முழங்கையில் பிசகியிருந்த மூட்டைப் பிடித்து இழுத்து ஒழுங்காகச் சரியான இடத்தில் நான்கே வினாடிகளில் சரியாகச் செருகியிருந்தார்.

அவளைமாதிரியே அந்தக் குடும்பத் தலைவனை உட்காரவைத்துப் பின்புறம் ஒருவன் கெட்டியாகப் பிடித்துக்கொள்ள அவனது நழுவிய தொடை எலும்பை இடுப்பின் பந்துகிண்ண மூட்டுடன் இழுத்துப் பொருத்தினார்.

சென்னையிலுள்ள அவர் நண்பர் அவர்களை அவரிடம் பரிந்துரைத்து அனுப்பியவர் டாக்டர் கண்ணன் . புகழ்பெற்ற எலும்புச்சிகிச்சை நிபுணர் – ஆர்த்தோபிடிக் சர்ஜரியில் கொடிகட்டிப் பறப்பவர் டாக்டர் கண்ணன்! பாரம்பரிய எலும்புச் சிகிச்சையின் மகத்துவத்தையும் எந்தெந்த வகையில் அது சிறந்தது என்பதையும் நன்கு அறிந்துவைத்திருந்தார் அவர்! தன் நண்பனின் திறமையையும் அவர் நன்கு தெரிந்து வைத்திருந்தார்!

‘நீ எதிர்பார்த்தபடி இருவரின் சிகிச்சையும் முழுவெற்றி! நாளைக்கே அவர்கள் ஊர் திரும்புகிறார்கள்! மூன்று நாட்களுக்கு அவர்கள் பத்து போடுவதற்கு வேண்டிய களிம்பையும் கொடுத்தனுப்புகிறேன்.’ என்று நாட்டு வைத்தியர் வேலப்பன் அவர் செல்போன்மூலம் எஸ்.எம்.எஸ் அனுப்பினார்.

‘யூ ஆர் கிரேட்!” என்று பதிலளித்தார் டாக்டர் கண்ணன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *