சிறுகதை

பழைய ஞாபகம் | ராஜா செல்லமுத்து

கிராமம் தொலைத்து விட்டு நகரத்தில் வாழ்ந்த ராஜாராமுக்கு நகரமும் அலுத்துப்போக ஒரு முறை கிராமம் சென்று வரலாம் என்று எண்ணினான். அவன் புத்தியில் உதித்த அந்தச் சிந்தனையை செயல் படுத்த நினைத்தவனின் ஆசையில் கூட்டுச் சேர்ந்து கொண்டனர் சில நண்பர்கள்.

‘‘அப்பிடின்னா.. நீ சொல்டறபடி உன்னோட கிராமத்துக்கு போய்த்தான் ஆகணுமா..?’’ என்று ராஜாராமனின் நண்பர்கள் கேட்ட போது

‘‘ஆமா.. சங்கர்.. ரொம்ப வருசமாச்சு.. போய்ட்டு வருவமோ.. நீ எங்க கிராமத்துக்கு வரலியே..!’’

‘‘ம்ம்..’’

‘‘வந்து பாரு.. நீயே அசந்து போயிருவ.. அப்படியொரு மண்வாசனை , காடு,தோட்டம், துறவு வீடு, ஆடு, மாடு,கோழின்னு.. அச்சு அசலான கிராமத்து நீ பாத்தது இல்லையே.. ஒரு தடவை வந்து பாருங்க.. அந்த அனுபவமே உங்களுக்கு வேறமாதிரியான அனுபவத்த தரும்..’’ என்று ராஜாராம் சொன்னான்.

நண்பர்கள் அனைவருக்கும் இந்த வார்த்தை புதிய உற்சாகத்தைத் தந்தது.

அன்று இரவே நகரத்திலிருந்து கிராமத்துக்குக் கிளம்பினார்கள்.

போகும் போதே ஆர்வத்தின் ஆசை அவர்களுக்குள் ரொம்பவே தொற்றிக் கொண்டது.

‘‘ராஜா ராம்..’’

‘‘ம்ம்..’’

‘‘நீ.. கிராமத்திலிருந்து நகரத்துக்கு வந்து எத்தன வருசமாகும்..?’’ என்று ஒரு நண்பன் கேட்டான்.

‘‘ம்ம்.. ஒரு முப்பது வருசமாச்சு.. என்று ஒரு பெருமூச்சை விட்டுக்கொண்டு சொன்னான் ராஜாராம்.

‘‘என்ன முப்பது வருசமா..?’’

‘‘ஆமா.. நீ எப்பவாச்சும் உங்க கிராமத்துக்கு போறது உண்டா..?’’

‘‘ போவேன்.. ஆனா குடும்பம் எல்லாம் இங்க இருக்கிறதால..ஒடனே இங்க வந்திருவேன்..’’ என்று ராஜா ராம் சொன்னான்.

கிராமத்துப் பயணம் இனிதே ஆரம்பமானது.

அவர்களின் எண்ணம் முழுவதும் கிராம வாசனை ஒட்டிக் கொண்டே உடன் வந்தது.

கிராமம் வந்து இறங்கியதும் அவர்களுக்குள் ஒரு உற்சாக கங்கையே உருண்டோடியது.

முன்பு பார்த்த கிராமம் இப்போது இல்லை என்பது ராஜாராமின் மூளையில் பட்டென அடத்தது.

கிராமத்துச் சாலைகளெல்லாம் கட்டிங்களாகச் காட்சியளித்தன.

புழுதித் தெருக்கள் எல்லாம் சிமெண்ட் சாலைகளாக மாறிப்போயிருந்தன.

மரம் ,செடி, கொடிகள், பூக்கள் பூத்திருந்த காடுகள் எல்லாம் வேறு தோற்றத்தில் தோற்றமளித்துக் கொண்டிருந்தன.

‘‘டேய்.. என்னடா இது.. எங்க கிராமம் செடி, கொடி, மரம், கிணறு அப்பிடின்னு அச்சு அசலா பட்டிக்காடு மாதிரி இருக்குமுன்னு சொன்ன.. இங்க வந்து பாத்தா டவுன விட ரொம்ப பயங்கரமா இருக்கே.. இப்பவெல்லாம் கிராமங்கிறது எதுவும் இல்ல போல எல்லாம் நகரமாயிருச்சு..’’ என்றான் ஒரு நண்பன் .

‘‘ஆமாடா..’’ என்று ஆமோதித்தான் ராஜாராம்.

‘‘இப்பவெல்லாம் ஏபிசி அப்பிடிங்கிற பாகுபாடு கூட சினிமா தியேட்டர்கள்ல இல்ல .. எல்லாம் ஒரே ‘ஏ’ சென்டர் தான். அப்பிடித்தான் கிராமம் நகரம் அப்பிடின்னு எதுவும் இல்ல.. இப்ப எல்லாமே நகரமா மாறியிருச்சு..’’ என்று இன்னொரு நண்பனான மணி சொன்ன போது

‘‘ஆமா..’’ என்றே எல்லோரும் ஆமோதித்தனர்.

தெருவை நேர்நோக்கிப் பார்த்தனர் அத்தனையும் அவென்யூக்களாக மாறியிருந்தன. கடந்து போகும் அத்தனை பேரின் கைகளிலும் ஸ்மார்ட் போன் இருந்தது.

‘‘டேய்.. ராஜாராம் என்னடா.. என்னமோ கிராமம் அது இதுன்னு கூட்டிட்டு வந்த.. இங்கு வந்து பார்த்தா அவ்வளவும் புஷ் ஆகிக்கெடக்கே..’’ என்று ராஜாராமை அடிக்காத குறையாகப் பேசினார்கள்.

‘‘ஆமாடா.. எனக்கே ஒரு மாதிரியா தான் இருக்கு ..’’என்ற ராஜாராம் நண்பர்கள் பேசிக்கொண்டே ஒரு தெருவில் நடந்தனர் .

அப்போது புசுக்கென ராஜாராமுக்கு ஏதோ ஒன்று உறைத்தது.

‘‘என்னாடா.. ஏன்..? இங்க நின்னிட்ட..?’’ என்று கேட்டனர்.

‘‘ஒன்னுல்ல.. இங்க ஒரு புரோட்டா கடை இருந்தது.. அதான் நின்னேன்..’’ என்றான் ராஜா ராம்.

‘‘தம்பி.. நீங்க.. சொல்ற அந்த புரோட்ட கடை இது தான்..’’ என்று ஒருவர் அந்த இருக்கும் இடத்தை காட்டினார்.

‘‘என்னது.. இவ்வளவு பெரிய கட்டிடமா..?’’ என்று வாய் பிளந்தான் ராஜாராம்.

‘‘ஆமா.. தம்பி நீ.. சொன்ன அந்த புரோட்டா கடை தான் இது . இப்பவும் இது புரோட்டா கடை தான்..’’ என்று அந்தக் கிராமத்துக்காரர் சொன்னார்.

‘‘டேய்.. வாங்கடா.. இந்த புரோட்டா கடையில புரோட்டா ரொம்ப நல்லயிருக்கும்..’’ என்று ராஜாராம் சொல்ல அத்தனை பேரும் அந்தப்பிரதான *ஹோட்டலுக்குள் அனைவரும் நுழைந்தனர்.

அவர்கனிள் முன்னால் வகை வகையாய் உணவுகள் வைக்கப்பட்டன.

‘‘அண்ணே.. எனக்கு புரோட்டா..’’ என்றான் ராஜாராம்.

‘‘தம்பி.. நீங்க முனியாண்டி மகன் ராஜாராம் தானே..!’’ என்று அந்தப் பெரியவர் சொல்ல

‘‘ஆமா.. அண்ணே.. நான் தான்..’’ என்றான் ராஜா ராம் .

‘‘சின்ன வயசில.. நீங்க இங்க தானே சாப்பிடுவீங்க..?’’

‘‘ஆமா அண்ணே.. நீங்க மூனு புரோட்டா வச்சா.. நான் நாலு அஞ்சுன்னு நெறையா.. சாப்பிடுவேன் புரோட்டாவும் சால்னாவும் அப்பிடியொரு டேஸ்ட்டுல இருக்கும். புரோட்டாவ பிச்சுப்போட்டு அதுல சால்னாவ ஊத்திச் சாப்பிட்டா.. அவ்வளவு சுவையாயிருக்கும். நாக்குலயே டேஸ்ட்டு நிக்கும்..’’ என்று ராஜாராம் சொன்னவுடன் அவர்கள் முன்னால் புரோட்டா வைக்கப்பட்டது.

‘‘சாப்பிடுங்க..’’ என்று கடைக்காரர் சொல்ல ராஜா ராம் உட்பட அத்தனை பேரும் புரோட்டாவைச் சாப்பிட ஆரம்பித்தனர்.

புரோட்டாவை பிய்த்து அதில் சால்னாவை ஊற்றி புரோட்டவை வாயில் வைத்தபோது

‘‘த்தூ.. த்தூ..’’ என்று அனைவரும் துப்பினர்

‘‘என்னடா.. புரோட்டா இவ்வளவு மோசமா இருக்கு.. கொஞ்சங்கூட டேஸ்ட இல்லையே..!’’ என்று நண்பர்கள் சொல்ல

‘‘ஆமா..’’ என்று ராஜா ராமுவும் சொன்னான்

‘‘அண்ணே முன்னாடியிருந்த டேஸ்ட்டு புரோட்டாவுல இப்ப இல்லையேண்ணே..’’ என்று ராஜாராம் சொல்ல கடைமுதலாளியும் அதை ஏற்றுக்கொண்டு ஆமாம் என்று சொல்லும் பாணியில் தலையாட்டினார்.

‘‘இல்லண்ணே.. ஊரும் உங்க ஓட்டலும் நிறைய மாறியிருக்கு ..மக்கள்ட்ட பாசம்.. நேசம்.. அன்பு.. அரவணைப்பு.. ரொம்பவே குறைஞ்சு போச்சி. உங்க ஓட்டல் சின்னதா இருந்த போது..இந்த ரோட்ல இங்க அடிச்சிட்டு இருந்த காத்துல வந்த மண்ணு புரோட்டாவுல ஒட்டிட்டு இருக்கும் போது இருந்த சுவை இப்ப ஏசியில பெரிய கட்டிடத்தில இருக்கும் போது இல்லையேண்ணே..இங்க இப்ப எல்லாம் தொலைஞ்சு போச்சு..’’ என்று ராஜாராம் சொன்ன போது அந்த ஊரிலிருந்த சில பேர் அந்த ஹோட்டலில் ராஜாராமைக் கண்டும் காணாமலேயே சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *