சிறுகதை

பழசும் வேணும் புதுசும் வேணும் | செருவை.நாகராசன்

Spread the love

நீங்க என்ன சார் சொல்றீங்க? காட்டை அழிச்சிட்டு கால்நடை மருத்துவமனை கட்டறதா? மூன்று ஏக்கர்னா முப்பதாயிரம் காட்டு மரங்கள் அடியோடு வெட்டப்பட்டு அழிக்கப்படுமே. இதற்கு எப்படி அனுமதி கொடுத்தாங்க? நம்ம ஊர்ல ரோட்டோரமே நெறைய புறம்போக்கு நிலங்கள் கிடக்கே? அதுல கட்டலாமே அதையெல்லாம் புறக்கணிச்சிட்டு….. காட்டை

அழிக்கிறதா ? அதிர்ச்சியிலிருந்து மீளாதவராய் மருத்துவர் மதியழகன் சில வினாடிகள் நிறுத்தினார்.

சார்! நான் இடம் தர்றேன்னு சொல்றேன். என்னோட ஹையர் எலிமென்டரி ஸ்கூல் ரெண்டு ஏக்கர் இடத்துல இருக்கு. அதுல அரை ஏக்கர் அதாவது 50 சென்ட். நிலம் நான் ஒதுக்கி என் செலவுல ரிஜிஸ்டர் பண்ணித் தர்றேன்னு சொல்றேன். எனக்கு ஒரு பைசா வேண்டாம். காட்டையும் அதன் செழுமையையும் ஆயிரக்கணக்கான மரங்களையும் வெட்டி சாய்க்கிற அக்கிரமச் செயல் வேண்டாம்னுதான் நான் மட்டும் இல்லே ஊரே சேர்ந்து போராடறோம். உண்ணாவிரதம் இருந்தாச்சு. சாலை மறியல் போராட்டம் நடத்தியாச்சு. ஆனா பெரியவர் பிச்சை முத்து பிடிவாதமா இருக்கார். கால்நடை மருத்துவமனை பில்டிங் கட்ட அவர்தான் காண்ட்ராக்ட் எடுத்திருக்கார் என்றார் ஆசிரியர் அரவிந்தன் ஒரு வித கவலையுடன்.

ஆமா பெரியவர் பிச்சை முத்து பிடிவாதம் பிடிக்க என்ன காரணம்? வெட்னரி ஹாஸ்பிடல் கட்ட ஒரு இடம் தானே வேணும். ஃபாரஸ்ட்லதான் கட்டுவேன்னு சொன்னா அதுல எதுவும் உள் நோக்கம் இருக்கா என்ன? என்றார் மதியழகன். கழுத்தில் மாட்டியிருந்த தனது ஸ்டெத்தைக் கழற்றி தனது விசாலமான மேசையில் வைத்த வாறே.

உள் நோக்கமா? என்ன சார்… இப்படி கேட்டுட்டீங்க? உள் நோக்கம் டன் கணக்குல இருக்கு.ஆமாங்க சார். ஆயிரக்கணக்கான டன் மரங்கள் கிடைக்கும். முப்பதாயிரம்னா முன்னூறுன்னு கணக்கு காட்டுவாங்க. நூற்றுல ஒரு பங்கு வெலைதான் நாட்டுக்குப் போகும். அந்த ஏலத்தையும் பெரியவர் பிச்சை முத்து ஆள் வச்சு அமுக்கிட்டாரு. பல கோடி பணத்தை அள்ளப் போறாருங்க சார். என்றார் அரவிந்தன் அழுத்தம் நிறைந்த குரலில்.

எனக்கு எல்லாமே புரியுது. பணத்தாசை பிடிச்சுதான் பெரியவர் பிச்சை முத்து இதுல பிடிவாதமா இருக்கார்னு ரொம்ப தௌிவாவே சொல்லிட்டீங்க. சரிங்க சார் இனி நான் பார்த்துக்கிறேன். சீக்கிரமே நல்ல செய்தி உங்களுக்கு வரும். நம்ம ஊர் போராட்டத்துக்கும் நல்ல பலன் கிடைக்கும் சரிங்களா? பேசன்ட்ஸ் நிறைய வெயிட் பண்றாங்க என்றவர் எழுந்து நின்று கைக்கூப்பி தனது ஆசிரியரை அனுப்பி வைத்தார் மதியழகன்.

அவரது மனதில் ஒரு திட்டம் தோன்றி மனதில் ஆழமாய் பரவி நல்ல செயலுக்கு நம்பிக்கையுட்டியது.

மருத்துவர் மதியழகனும் அவரின் ஐந்தாண்டு கால ஆரம்பப் பள்ளி ஆசிரியரான அரவிந்தனும் ஒரே ஊர் துறவிக்காடு. ஊரின் பெயருக்கு ஏற்றார்போல் அக்கிராமத்தை ஒட்டியே இருநூறு ஏக்கர் போல இலட்சக்கணக்கான மரங்களோடு அவை வானளாவி வளர்ந்த நிலையில் செழிப்பும் அடர்த்தியும் நிறைந்து அந்த ஊருக்கே பெருமை தந்து கொண்டிருந்தது.

பரந்து விரிந்த அக்காட்டில் பலாப்பழ மரங்கள்தான் அதிகம். வேப்பம் பழம் மாதிரி அளவிலும் நிறத்திலும் பலாப்பழம் இருக்கும். மரங்களின் கிளைகளில் மேலும் பலப் பல கம்புக் கிளைகள் விரித்து அவை மஞ்சள் நிறப் பழங்களை ஏந்திக் காட்சி தருவது மிக ரம்மியமாக இருக்கும். அதன் இனிப்புச் சுவை தேனை மிஞ்சும். அந்த சீசன் காலங்களில் ஒவ்வொரு மரத்திலும் ஏறி ஊர்ச்சிறுவர்கள் நூற்றுக் கணக்கில் தென்படுவர். அவை மனிதர்கள் முளைத்த மரங்களாக மிளிரும். காட்டில் ஏராளமான நரிகளும் உண்டு. இரவில் அவை கூட்டமாகச் சேர்ந்து ஊளையிடும்போது சிறுவர்களின் நெஞ்சு நடுங்கும். அக்காட்டை ஒட்டிய ஊருக்குச் செல்லும் சாலையே இரவில் தவிர்த்து மாற்றுப் பாதையில்தான் ஊரார் செல்வது வழக்கம்.

மேலும் அக்காட்டில் பல இலட்சக்கணக்கான வன உயிரினங்கள் குரங்கு, முயல், அணில், உடும்பு, பாம்பு, தேள், பூரான் என்று கணக்கிலடங்காதவையும், கொக்கு, புறா, நாரை, சிட்டுக்குருவி வகைகள் வௌவால் என்று அவைகளின் நிரந்தர வாழ்விடமாக அமைத்து வாழ்ந்து வருகின்றன. ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான காடு அது.

காட்டின் நடுவில் ஒரு கோவிலும் உண்டு. போத்தியம்மன் வீற்றிருக்கும் ஆயிரம் ச.அடி காட்டுக் கோவில் அது. ஆண்டுதோறும் ஊரார் அனைவரும் அங்கு ஒன்று கூடி பொங்கல் வைத்து சாமி கும்பிடுவர். ஆண்களும் பெண்களும் பெரியவர்களும் குழந்தைகளுமாக கூடும் கூட்ட இரைச்சலில் அங்குள்ள ஆயிரக்கணக்கான பறவைகளும் தங்கள் குரல்களை நிறுத்திக் கொண்டு சப்தமின்றி மனிதக்குரல்களில் மூழ்கும்.

நாற்பதே வயதான பஞ்சாயத்து தலைவருக்கு வீடுகள், நன்செய், புன்செய் நிலங்கள், அரிசி ஆலை, ரியல் எஸ்டேட் என்று ஏகப்பட்ட வசதி. இருப்பினும் காட்டை அழித்து தான் வாழ ஆசை. வசதியை மேலும் பெருக்கிக் கொள்ள ஆசை. மெட்ரிக் பயிலும் அவரது ஒரு மகன் கடந்த இரு வாரங்களாக டெங்குவால் பாதிக்கப்பட்டு உயிர் பிழைப்பானா? என்று நிலைக்கெல்லாம் போக தக்க ஆறுதல் சொல்லி மருத்துவர் மதியழகன் தான் தனது மருத்துவத்துறையில் வைத்து சிகிச்சை அளித்து வருகிறார். நூறு விழுக்காடு டெங்குவிலிருந்து விடுபட்ட விமல் குணமாகி வீடு செல்லும் நாள் இன்று.

பிரசிடென்ட் வந்திருக்கார் என்று பணியாளர் சொன்னதும் வரச்சொல் என்றார் மதியழகன். அறையில் நுழைந்த பிச்சைமுத்து இரு கைகளையும் தலைக்கு மேலே கூப்பிய வண்ணம் சிரித்துக் கொண்டே டாக்டர் அருகில் வந்து டாக்டருக்கு நன்றி! நன்றி! நன்றி! ஒரே மகனை நல்லபடியா காப்பறிக் கொடுத்துட்டீங்க. என் வம்சத்தை வாழ வைச்சிட்டீங்க என்று டாக்டர் எதிரே ஆப்பிள், அன்னாசி, மாதுளை என்று நீன்று பல வகைப் பழங்கள் நிரம்பிய பெரிய தட்டினை நீட்டினார். மருத்துவர் எழுந்து நின்று அதை மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டார்.

ஒரே மகன் விலை மதிப்பற்ற அந்த உயிரை நான் மீட்டுக் கொடுத்தேன்னு நன்றி சொல்றீங்க. அதே மாதிரி ஊரார் அதாவது ஐம்பதாயிரம் பேர் ஒன்று சேர்ந்து உங்களுக்கு காலம் புரா நன்றி சொல்ல வேண்டாமா? தங்கள் ஆயுள் உள்ளவரை உங்களை நினைக்க வேண்டாமா? என்றார் மதியழகன் உறுதியான குரலில் தீரக்கமான பார்வையுடன்.

நீங்க என்ன சார் சொல்றீங்க? என்றும் புரிந்தும் புரியாதவராய் பிச்சைமுத்து ் அவர் ஆசிரியரை மருத்துவமனை அருகில் பார்த்துவிட்டார்! சரி! விசயம் டாக்டருக்கு வந்துவிட்டது என்று நினைத்துக்கொண்டார்.

நீங்க அழிக்க நினைக்கிற அந்தக் காடுதான் அதைச் சுற்றியுள்ள பல ஊர் மக்கள் சுவாசிக்க ஆக்ஸிஜன் தந்துக்கிட்டிருக்கு. அது கெடலாமா! லட்சக்கணக்கான உயிரினங்கள் அங்கே வாழுது. ஆவை காட்டுல பொசுங்கலாமா? தங்கள் வாழ்விடத்தை விட்டு வேறு இடம் தேடி அலையலாமா! மேகங்கள் மழையைப் பொழிய ஆயிரக்கணக்கான மரங்களும் அவசியமில்லையா? காட்டுல ஒரு ஓரம்னாலும் நம்ம மூக்கை மட்டும் வெட்டிக்கிட்ட மாதிரி முனியா ஆகிவிடாதா? மரம் வளர்ப்போம்; மழை பெறுவோம்னு கோடிக்கணக்கானோர் குரல் கொடுத்துக்கிட்டிருக்க நீங்க புல்டோசர்களையும் நூற்றுக்கணக்கான மர அறுவை மெசின்களையும் லாரிகளையும் கொண்டு வந்து பய முறுத்தலாமா? காசு முக்கியமா? ஊரார் முக்கியமா? வுனச் செழிப்பும் வன உயிரினங்களும் முக்கியமா? பிரசிடென்ட் அய்யா? சொல்லுங்க

நம்ம ஊருக்கு பழசும் வேணும் புதுசும் வேணும். அதாவது காடும் வேணும். கால்நடை மருந்தகமும் வேணும். என்ன நான் சொல்றது சரியா?

மருத்துவர் சொன்னா அதை யாரும் மறுக்காதபடி தான் சொல்வாங்க டாக்டர்! எப்ப என் மகனுக்கு டெங்குன்னு உறுதியானதோ அப்பவே நான் நொறுங்கிப் போயிட்டேன். டாக்டர்! பழைய பிச்சை முத்து எனக்குள்ளேயிருந்து ஓடிப்போயிட்டான். என் மகன் உசிருக்கு முன்னாடி என் சொத்தெல்லாம் ஒரு துரும்பு டாக்டர். நம்ம ஊர் ரோட்டோரம் நெறைய புறம்போக்கு நிலம் என்னோட ஆக்கிரமிப்புல இருக்கு. நிச்சயம் கால் நடை மருத்துவமனை நம்ம ஊர்ல அமையும். ஆனா காடு அழியாது. ஒரு மரம் கூட வெட்டப்படாது. இது சத்தியம் டாக்டர் என பிச்சை முத்து நா தழுதழுக்க கூறியதும் தலைவரிடம் கை குலுக்கிய மருத்துவர் தனது ஆன்ட்ராய்டு செல்போனை எடுத்து ஆசிரியரின் எண்களில் விரல் பதிக்க ஆர்வமானார்.

பசுமையைக் காக்க விரும்புறதால இன்று முதல் நீங்க பச்சை முத்து சரியா? என்றார் மருத்துவர். அவரின் பாராட்டை ஏற்றவரின் முகத்தில் புன்னகை பரவியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *