செய்திகள்

முறைத்து பார்க்கும் ’குட்டி பாப்பா’ ஓவியத்தின் விலை ரூ.177 கோடி

Spread the love

ஹாங்காங், அக். 09–

உலக நாடுகள் ஆச்சரியப்படும் வகையில், ஒரு சிறுமியின் ஓவியம் ரூ.177 கோடிக்கு ஏலம் போனதால், பலரும் வியப்பின் உச்சிக்கே சென்றுள்ளனர்.

ஓவியக் கலை அழகிய சார்ந்த ஒன்று ஆகும். இது இயற்கையாகவோ, ஒரு பொருளாகவோ, நிழற்படத்தை ஒத்தவையாகவோ, பண்பியல் சார்ந்ததாகவோ இருக்கலாம். உலகின் பிரபல ஓவியர்களின் ஓவியங்கள் காலத்தால் அழியாமல் இன்று காட்சி பொருளாக வைக்கப்பட்டுள்ளன.

இவை சில சமயங்களில் ஆச்சரியப்படும் வகையில், பல கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் ஹாங்காங்கில் ஒரு ஓவியம் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அங்கு சோதிபை நிறுவனம் நடத்திய ஓவியங்கள் ஏல விற்பனையில், ஜப்பானை சேர்ந்த பிரபல ஓவியக் கலைஞர் யோஷிடோமா நாரா வரைந்த ஓவியமும் இடம்பெற்றிருந்தது.

இதற்கு ‘நைப் பிகைண்ட் பேக்’(Knife Behind Back) என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் கார்டூன் சிறுமி ஒருவர், பெரிய கண்களுடன் முறைத்துப் பார்க்கிறார். சிவப்பு நிற ஆடை அணிந்திருக்கிறார். அவரது ஒரு கை முன்னால் இருக்கும் நிலையில், மற்றொரு கை பின்னால் உள்ளது.

இதனால் பின்னால் இருக்கும் கையில் என்ன இருக்கும்? என்ற எதிர்பார்ப்பு எழுகிறது. ஆனால் ஓவியத்தை பெயரில் அவரது பின் கையில் கத்தி இருப்பதாக கூறுகிறது. ஏதோவொரு காரணத்திற்காக தான், கத்தியை மறைத்து வைத்துள்ளார்.

ஒருவேளை யாரையாவது தாக்க தயாராக இருக்கிறாளா? என்ற கேள்வி தோன்றுகிறது. இந்த விஷயத்தை முன்வைத்து ஏலம் தொடங்கியது. 10 நிமிடங்கள் நீடித்த நிலையில், 25 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஓவியம் ஏலம் போனது.

ரூ.177 கோடிக்கு ஏலம்

அதாவது இந்திய மதிப்பில் ரூ.177 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. ஓவியர் யோஷிடோமா ஏராளமான அற்புத ஓவியங்களை வரைந்துள்ளார். அவற்றில் அதிக விலைக்கு ஏலம் போனது இந்த சிறுமியின் ஓவியம் ஆகும்.

12 ஆண்டுகள் ஜெர்மனியில் இருந்து விட்டு, கடந்த 2000 ஆம் ஆண்டு யோஷிடோமா மீண்டும் ஜப்பானுக்கு திரும்பினார். அப்போது இந்த சிறுமியின் ஓவியத்தை வரைந்துள்ளார்.

இந்நிலையில், இந்த ஏலத்திற்கு ஏற்பாடு செய்த நபர்கள் கூறுகையில், ’நைப் பிகைண்ட் பேக்’ ஓவியத்தை 6 பேர் ஏலம் கேட்டு போட்டி போட்டனர். இறுதியில் அறிவித்த தொகையை விட 5 மடங்கு அதிக விலைக்கு கேட்டவருக்கு விலை போனது என்றனர்.

ஹாங்காங் நகரில் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், சோதிபை நிறுவனம் 5 நாட்கள் மராத்தான் ஏலத்தை நடத்தி வருகிறது. மொத்தம் 20 ஏலங்கள் மூலம் 336 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஈட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *