செய்திகள் வாழ்வியல்

தேவார பதிகம் பாடப்பெற்ற தொண்டை நாட்டு சிவாலயம்: பாடி திருவல்லீஸ்வரர் கோவில்

Spread the love

குரு பார்த்தால் கோடி நன்மை என்பது ஐதீகம். அந்த குரு பகவானுக்கே சாப விமோசனம் தந்த திருத்தலம் தான் பாடி என்று அழைக்கப்படும். திருவலிதாயத்தில் அமைந்துள்ள ஜெகதாம்பிகை சமேத திருவல்லீஸ்வரர் கோவில்.

சென்னை – ஆவடி சாலையில் பாடி டிவிஎஸ் லூகாஸ் பேருந்து நிறுத்தம் அருகில் இந்த கோவில் உள்ளது. சுமார் 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த தலம் தேவார பதிகம் பாடப்பெற்ற தொண்டை நாட்டு சிவாலயங்களில் இருபத்தியொன்றாம் திருத்தலமாகும்.

இங்கு வீற்றிருக்கும் இறைவன் திருவலிதாயநார், திருவல்லீஸ்வர பெருமான் ஆகிய நாமங்களுடன் சுயம்பு லிங்கமாக காட்சி தருகிறார். அன்னையின் திருநாமம் தாயம்மை , ஜெகதாம்பிகை என்று பல பெயர்களில் வழங்கப் பெறுகிறது.

இந்த கோவிலின் தல விருட்சம் பாதிரி மரம். ஆண்டுக்கு ஒருமுறையே இந்த மரத்தில் நீலநிறத்தில் பூக்கள் பூக்கும். பரத்துவாச மாமுனிவர் ‘‘வலியன்’’ என்ற கருங்குருவி வடிவமெடுத்து இத்தலத்து இறைவனை வழிபட்டு பாப விமோசனம் பெற்று மாமுனிவரானதால் இத்தலம் ‘‘வலிதாயம்’’ அதாவது திருவலிதாயம் என்று அழைக்கப்படுகிறது.

‘‘திருமால் கேசவ பெருமாள்’’ என்கிற பெயரோடு இத்தலத்தை வழிபட்டு கொலைப்பாவம் நீங்கப் பெற்றார். அகத்தியர், அனுமன், வாயு, இந்திரன், அக்னி, சூரியன், மன்மதன், சந்திரன் ஆகியோர் வழிபட்டு அருள் பெற்ற தலம். அகத்தியரும் அனுமனும் இத்தலத்திற்கு வந்து பூஜித்து சென்றதாக புராணங்கள் கூறுகின்றன. அருணகிரி நாதர், திருஞானசம்பந்தர், ராமலிங்க அடிகளார் மற்றும் பாம்பன் சுவாமிகள் போன்ற பெரியோர்கள் பலர் போற்றிப்பாடிய பெருமை வாய்ந்தது. இதன் காரணமாகவே இந்தக்கோயில் இருக்கின்ற பகுதி பரமனைப் பாடிய நல்லூர் என்று அழைக்கப்பட்டு நாளடைவில் பாடி என்றழைக்கப்படுவதாகவும் தலப்புரணாம் கூறுகிறது.

திருவலிதாயம் தலத்தில் 14 கல்வெட்டுகள் உள்ளன. தொண்டை மண்டலத்தின் 24 கோட்டங்களுள் இத்தலம் புழல் கோட்டத்துக்கு உட்பட்ட அம்பத்தூர் நாட்டைச் சேர்ந்தது என்றும் ஜெயம் கொண்ட சோழ மண்டலத்து விக்கிரம சோழ வள நாட்டைச் சேர்ந்ததும் என்றும் இறைவனை திருவலிதாயமுடைய நாயனார் என்றும் இக்கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.

குரு பகவானுக்கு தனி சந்நிதி திருவலிதாயத்தில் எழுந்தியிருக்கும் திருவல்லீஸ்வரரை தேவகுருவான வியாழ பகவான் வழிபட்டு பாவ நிவர்த்தி பெற்றதன் காரணமாக இத்தலம் குருஸ்தலம் என்று பெயர் பெற்றிருக்கிறது.

கோவிலுக்குள் நுழைந்தவுடன் வலது புறத்தில் குரு பகவானுக்கு தனி சந்நிதி இருக்கிறது. ஆனந்தபாபு என்கிற ஒரு பக்தரின் கனவில் திருவலிதாய நாதர் தோன்றி தேவகுருவிற்கு தனி சந்நிதி அமைக்குமாறு சொல்லி அருளியபடியால், இந்து சமய அறநிலையத்துறையின் முறையான அனுமதி பெற்று வியாழ குருபகாவனுக்கு தனி சன்னதி அமைக்கப்பட்டது. குரு பரிகார தலங்களாக சொல்லப்படும் தலங்களில் திருவலிதாயமும் ஒன்றாகும். குரு பகவான் தன்னைப் பற்றி இருந்த தோஷம் நீங்க இத்தலத்தில் தவமிருந்தே சிவனருள் பெற்றார் என்பதால் இத்தலத்தில் குரு பகவானுக்கு தனி சிறப்புண்டு.

ஆலங்குடி, திருச்செந்தூர், தென்குடித்திட்டை ஆகிய குருதோஷ நிவர்த்தித் தலங்களின் வரிசையில் முக்கியத்தலமாக கருதப்படுகின்ற இந்த திருவல்லீசுவரர் திருத்தலத்தில் தனி சந்திதியில் அமர்ந்து அருள் பாலிக்கும் வியாழ குருபகவான் யானை மீது அமர்ந்திருக்கிறார்.

ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை வியாழ பகவானுக்கு சிறப்பு அபிஷேகமும் மகா தீபாராதனையும் நடைபெறும். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீபம் ஏற்றி வழிபாடு நடத்துகின்றனர்.

இக்கோவிலில் 3 நிலைகளை உடைய கிழக்கு வாசல் கோபுரமே பிரதான கோபுரம். கோபுர வாசல் வழியாக உள்ளே நுழைந்ததும் ஒரு விசாலமான வெளிப் பிரகாரம் உள்ளது. அதில் கொடிமரம், நந்தி சுவாமி சந்நிதிக்கு நேர் எதிரே உள்ளது. வெளிப் பிரகாரத்தில் இருந்து உள் மண்டபத்தில் நுழைந்தவுடன் மூலவர் திருவலிதாயநாதர் சந்நிதி கிழக்குப் நோக்கி அமைந்திருக்கிறது.

சுவாமி சந்நிதி கருவறை கஜப்பிரஷ்ட விமான அமைப்புடையது. உள் பிரகாரத்தின் வலது புறம் தெற்கு நோக்கிய அம்பாள் தாயம்மை சந்நிதி இருக்கிறது. அம்பாள் சந்நிதிக்கு நேர் எதிரே தெற்கு வெளிப் பிரகாரத்தில் சிம்ம வாகனம் அம்பாளை நோக்கியவாறு உள்ளது. ஈசன் கருவறையின் உள்ளேயும் ஒரு அம்பாள் திருவுருவம் உள்ளது.உள் பிரகாரத்தில் சூரியன், 4 கரங்களுடன் உள்ள பாலசுப்ரமனியர், விநாயகர், தட்சினாமூர்த்தி, மஹாவிஷ்னு, பிரம்மா, விஷ்ணு துர்க்கை ஆகியோரின் உருவச்சிலைகள் இருக்கின்றன. ஈசன் கருவறை பின்புற கோஷ்டத்தில் அநேக தலங்களில் லிங்கோத்பவர் தான் இருப்பார். ஆனால் இங்கு மகாவிஷ்ணு காணப்படுகிறார். மகாவிஷ்ணு, அவரின் அம்சமான பரசுராமர், ராமர் ஆகியோர் சிவபெருமானை வழிபட்ட தலங்களில் எல்லாம் லிங்கோத்பவர் இருக்கும் இடத்தில் மகாவிஷ்ணு இருப்பார். அவ்வகையில் இத்தல இறைவனை இராமர் வழிபட்டுள்ளார். மேலும் சோமஸ்கந்தர், வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகன், அனுமன் பூஜித்த அனுமலிங்கம், இந்திரன் சாபம் நீக்கிய மீனாட்சி சுந்தரேஸ்வரர் சந்நிதிகள் உள்ளன.

திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஒரு பாடல் உள்ளது. கோவிலில் உள்ள தூண்களில் நடராஜர், முருகர், கோதண்டராமர், மச்சாவதாரமூர்த்தி, கூர்மாவதாரமூர்த்தி ஆகியோரின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

கோவிலுக்குள் நுழைந்தவுடன் இடது புறத்தில் பக்தர்கள் அரிசி வாங்கி வந்து அங்கு கொட்டுகின்றனர். கோவிலின் கோபுரத்தில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட புறாக்கள் அவற்றை கூடி மகிழ்ந்து உண்ணும் காட்சி பக்தர்களுக்கு மனமகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. இக்கோவிலில் முதலமைச்சரின் அன்னதான திட்டத்தின் கீழ் தினமும் மதியம் 1 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி: அருள்மிகு ஜெகதாம்பிகை சமேத திருவல்லீஸ்வரர் திருக்கோயில், பாடி, சென்னை 600 00050. போன் 044 2654 0706.

* * *

திருவலிதாய தேவாரம்

பக்த ரோடுபல ரும்பொலி யம்மலர் அங்கை புனல்தூவி

ஒத்த சொல்லியுல கத்தவர் தாந்தொழு தேத்த உயர் சென்னி

மத்தம் வைத்தபெருமான் பிரியாதுறை கின்ற வலிதாயம்

சித்தம் வைத்த அடியாரவர் மேலடையாமற் றிடர்நோயே

– திருஞானசம்பந்தர்.

* * *

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *