செய்திகள்

தமிழக முன்னேற்றத்திற்கான பட்ஜெட்: தலைவர்கள் வரவேற்பு

Spread the love

சென்னை, பிப்.15–

தமிழக சட்டசபையில் நேற்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்த 2020–21–ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை கட்சி தலைவர்கள் வரவேற்று பாராட்டு தெரிவித்துள்ளனர்.

தமிழக பட்ஜெட் குறித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

தமிழக சட்டப்பேரவையில் மாநில நிதியமைச்சரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்த 2020–21 நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் வேளாண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த துறைகளின் வளர்ச்சிக்காக ஏராளமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. பாசனத் திட்டங்களுக்கு குறிப்பிடத்தக்க அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

வேளாண்மை தான் தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்கும் என்பதை உணர்ந்து கொண்டிருக்கும் தமிழக அரசு, 8 மாவட்டங்களில் வேளாண் பதப்படுத்தும் மண்டலங்கள் அமைக்கப்படும்; தென்காசியில் எலுமிச்சை, தூத்துக்குடியில் மிளகாய் மையங்கள் அமைக்கப்படும்; உழவர்களின் ஐயங்களை தீர்ப்பதற்காக உழவர் – அலுவலர் தொடர்புத் திட்டம்; உழவர் பாதுகாப்பு திட்டத்திற்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு உள்ளிட்ட ஏராளமான திட்டங்களை அறிவித்திருக்கிறது. உழவர்களுக்கு ரூ.11,000 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதால் உழவர்களுக்கு தாராளமாக கடன் கிடைக்கும்.

நதி இணைப்புக்கு நிதி

நீர்ப்பாசனத் திட்டங்களுக்காகவும் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நீண்ட காலமாக கிடப்பில் கிடந்த காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டத்தில் முதல்கட்டமாக காவிரி – வெள்ளாறு இடையே இணைப்புக் கால்வாய் அமைப்பதற்கான நிலங்களை கையகப்படுத்த ரூ.700 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருப்பதும், அத்திக்கடவு – அவினாசி திட்டத்திற்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கியிருப்பதும், காவிரி – சரபங்கா நீரேற்றுப் பாசனத் திட்டத்திற்கு கூடுதலாக ரூ.340 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதும் வரவேற்கத் தக்கவை ஆகும்.

906 குளங்கள், 183 அணைக்கட்டுகளை சீரமைக்கவும், 37 செயற்கை செறிவூட்டல் கிணறுகள் அமைக்கவும் ரூ.649 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதும், நீர்ப்பாசனத்துறைக்கு ரூ.6991 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதும் பாராட்டப்பட வேண்டியவை ஆகும். இந்தத் திட்டங்களில் பெரும்பாலானவை பாட்டாளி மக்கள் கட்சியின் நிழல்நிதி அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்தவையாகும்.

தொழில் வளர்ச்சி

தொழில் வளர்ச்சிக்கான திட்டங்களுக்கும் நிதிநிலை அறிக்கையில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. சென்னை – பெங்களூர் தொழில்வடத்திட்டத்தின் கீழ் பொன்னேரியில் 21,966 ஏக்கரில் தொழில் முனைய மேம்பாட்டு திட்டம்; சென்னை – கன்னியாகுமரி இடையே பொருளாதார பெருவழிச்சாலை திட்டம்; சேலம் புத்தரகவுண்டன்பாளையம், உமையாள்புரம் ஆகிய இடங்களில் புதிதாக சிப்காட் தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும்; திருநெல்வேலி கங்கைகொண்டானில் ரூ.77.94 கோடி செலவில் உணவு பூங்கா அமைக்கப்படும் ஆகிய அறிவிப்புகள் தமிழகத்தில் தொழில் வளர்ச்சியை ஊக்குவிப்பதுடன், பல்லாயிரக் கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுக்கும். மகளிர் பாதுகாப்புக்காக அரசு பேருந்துகளில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதுடன், மகளிர் நலத் திட்டங்களுக்காக ரூ.78,796 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது பாராட்டத்தக்கதாகும்.

பள்ளி கல்விக்கு அதிக நிதி

பள்ளிக்கல்வித் துறைக்கு 2019–20 ஆம் ஆண்டில் ரூ.28,757 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், 2020–21 ஆம் ஆண்டில் அதைவிட 21.20% கூடுதலாக ரூ.34,841 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. கடந்த காலங்களில் பள்ளிக்கல்வித் துறைக்கான ஒதுக்கீடு இந்த அளவுக்கு உயர்த்தப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும். தமிழ்நாட்டில் மத்திய அரசின் நிதியுதவியுடன் அமைக்கப்படவுள்ள 11 மருத்துவக்கல்லூரிகளுக்கு ரூ.1,200 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருப்பதுடன், அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியை அரசே ஏற்று நடத்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசு மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது. இது எந்த மாநிலத்திலும் இல்லாத சாதனையாகும். மூன்றே கால் மணி நேரம் நீடித்த நிதிநிலை அறிக்கை உரையில் மின்சக்தி, தொழில்துறை, உயர்கல்வி உள்ளிட்ட துறைகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது. உட்கட்டமைப்புத் திட்டங்களுக்கும் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

அதேநேரத்தில் வரி தவிர்த்த அரசின் பிற வருவாய்களை அதிகரிக்க எந்தத் திட்டமும் அறிவிக்கப்பட வில்லை. தமிழகத்தின் கடன்சுமை கட்டுப்பாடின்றி நான்கரை லட்சம் கோடிக்கும் கூடுதலாக அதிகரித்து இருப்பது கவலையளிக்கிறது. தூத்துக்குடியில் சுற்றுச்சூழலை சீர் கெடுத்து வந்த ஸ்டெர்லைட் ஆலை நீண்ட போராட்டத்திற்கு பிறகு மூடப்பட்டுள்ள நிலையில், அங்கு புதிதாக ரூ.49,000 கோடி செலவில் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலையை அமைப்பது சுற்றுச்சூழல் சீர்கேட்டுக்கு வழிவகுக்கக்கூடும். இனி வரும் காலங்களிலாவது இத்தகைய திட்டங்களை கைவிட அரசு கொள்கை முடிவெடுக்க வேண்டும்.

இவ்வாறு டாக்டர் ராம்தாஸ் கூறியுள்ளார்.

விஜயகாந்த்

தமிழக பட்ஜெட் குறித்து தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

2020–2021 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் பல திட்டங்களுக்கு பல ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கி தமிழக அரசு அறிவித்து இருக்கிறது. முக்கியமாக நெடுஞ்சாலைத்துறைக்கு ரூபாய் 15 ஆயிரத்து 850 கோடி, சாலை மேம்பாட்டிற்கு ரூபாய் 5 ஆயிரத்து 500 கோடி, மாற்றுத்திறனாளிகளுக்கு ரூபாய் 667 கோடி, அத்திக்கடவு – அவிநாசி திட்டத்திற்கு ரூபாய் 500 கோடி, கிராம ஊரக வளர்ச்சிக்கு ரூபாய் 23 ஆயிரத்து 161 கோடி,

விவசாயத்திற்கு ரூபாய் 11 ஆயிரத்து 894 கோடி, காவிரி – குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு ரூபாய் 700 கோடி, சுற்றுவட்ட சாலைக்கு ரூபாய் 12 ஆயிரம் கோடி, மின்சாரத்துறைக்கு ரூபாய் 20 ஆயிரத்து 115 கோடி, மகளிர் மேம்பாட்டிற்கு ரூபாய் 78 ஆயிரத்து 796 கோடி, குறிப்பாக டாக்டர்.முத்துலட்சுமி மகப்பேறு திட்டத்திற்கு ரூபாய் 959 கோடி ஒதுக்கியிருப்பது சிறப்பானதாகும்.

முதியோர் ஆதரவு மையம்

முதியோருக்காக 37 மாவட்டங்களில் முதியோர் ஆதரவு மையங்கள் அமைக்க ரூபாய் 476 கோடியும், காவிரி முதல் தெற்கு வெள்ளாறு வரை இணைப்பு திட்டங்களும் மற்றும் முத்திரைத்தாள் ஒரு சதவிகிதத்தில் இருந்து 0.25% ஆக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு திட்டங்களுக்காக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கியிருப்பது வரவேற்கத்தக்க அம்சமாக இருக்கிறது. இதில் மகளிருக்காக இந்த அரசாங்கம் மிக முக்கிய பங்கு அளித்துள்ளது, இது நாம் அனைவரும் வரவேற்கக்கூடியதாகும்.

மின்சாரத்துறையில் ரூபாய் 20 ஆயிரத்து 115 கோடி ஒதுக்கீடு செய்து மின் வெட்டு இல்லாத மின்சார இணைப்பு, 24 மணி நேரமும் அனைத்து மக்களுக்கும் கிடைக்க கூடிய அளவு இத்துறையை மேம்படுத்தியுள்ளது. கடந்த காலங்களில் ரியல் எஸ்டேட் மிக மோசமான நிலையை அடைந்து பல ஆயிரம் கோடி முதலீட்டை நம்பி வாழ்ந்த பல பேருக்கு வேலைவாய்ப்பு இல்லாமல், பல பிரச்சனைகளை சந்தித்திருந்த நிலையில், இன்றைக்கு முத்திரைத்தாள் ஒரு சதவிகிதத்தில் இருந்து 0.25% ஆக குறைக்கப்பட்டுள்ளது பல பேருக்கு வேலைவாய்ப்பு அமைவதற்கு இது உறுதுணையாக இருக்கிறது.

இதுபோன்ற பல்வேறு திட்டங்களை நாம் வரவேற்றாலும், பட்ஜெட் என்பது நம் கனவாக மட்டும் அமையாமல், செயல் வடிவத்திலும் மக்களுக்கு நேரடியாக செல்லக்கூடிய திட்டங்களாக இருக்க வேண்டும். மேலும் மீன்வளத்துறை, மின்சாரத்துறை, போக்குவரத்துத்துறை, கல்வித்துறை போன்ற துறைகளுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு

அதேபோல் வேலைவாய்ப்பிற்கான மிக முக்கிய அறிவிப்பு இல்லாதது, இளைஞர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. மேலும் வேலைவாய்ப்பை உருவாக்க மாவட்டம் தோறும் தொழிற்சாலைகள் அமைப்பதற்கான அறிவிப்புகளும் இல்லை, இதன் மூலம் பல லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதற்கு இந்த பட்ஜெட்டில் அறிவிப்பு இல்லாதது சிறிது ஏமாற்றத்தை தருகிறது.

எனவே 2020–2021 தமிழக பட்ஜெட்டில் அறிவித்த திட்டங்களை மக்களுக்கு நேரடியாக செல்ல, சொல் வடிவில் இல்லாமல், செயல் வடிவமாக நிரூபிக்க வேண்டும். இந்த பட்ஜெட் தான், இந்த அரசின் இறுதி பட்ஜெடாகும். எனவே இதன் மூலம் தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் எல்லா வளங்களும், எல்லா நலன்களும் பெற்று மக்கள் பயன்பாட்டிற்கு இத்திட்டங்கள் நேரடியாக சென்றடைய வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.

தனியரசு

தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் உ.தனியரசு எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

2020–21–ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் ஏற்கனவே அரசின் நலத்திட்டங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லாமல் தாராளமாக நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது. குறிப்பாக 5 லட்சம் புதிய ஓய்வூதியதாரர்களுக்கு உதவித்தொகை வழங்குவோம் என்று உறுதிபடுத்தப்பட்டு இருக்கிறது. 70 ஆண்டு கால பிரச்சினையான அத்திக்கடவு – அவினாசி திட்டத்துக்காக இந்தாண்டு ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. டெல்டா பகுதியில் கல்லணை கால்வாய்க்கான நிதி ஒதுக்கீடு, குடிநீர் ஆதாரத்துக்கான நிதி ஒதுக்கீடு, அரசு பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான பிரதிநிதித்துவம், பல்வேறு ஊராட்சிகளின் உள் கட்டமைப்புகளுக்கான நிதி ஒதுக்கீடு, புதிய மாவட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு போன்றவை பாராட்டத்தக்கது என்றார்.

ஜி.கே.வாசன்

தா.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

தமிழக பட்ஜெட்டில் விவசாயம், கல்வி, சுகாதாரம், தொழில், வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் ஒதுக்கீடும், திட்டங்களும் இடம் பெற்று இருப்பதால் ஒட்டு மொத்த தமிழக மக்களின் வளர்ச்சிக்கான, தமிழகம் முன்னேற்றம் அடைவதற்கான பட்ஜெட்டாக அமைந்துள்ளது என்றார்.

என்.ஆர். தனபாலன்

பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர். தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

தமிழக பட்ஜெட்டில் புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்களுக்கு ஆட்சேபணை இல்லாதிருந்தால் ஆகஸ்ட் மாதத்திற்குள் பட்டா வழங்க முடிவு செய்திருப்பதும், எல்.ஐ.சி.யுடன் இணைந்து ஏழை குடும்பங்களுக்கு காப்பீடு உருவாக்க முடிவு செய்திருப்பதும், அரசு பஸ்களில் கண்காணிப்பு கேமிரா பொருத்த முடிவு செய்திருப்பதும் பாராட்டுக்குரியது. மொத்தத்தில் இந்த பட்ஜெட் தமிழகத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்றார்.

ஏ.சி.சண்முகம்

புதிய நீதிக்கட்சி நிறுவனத் தலைவர் ஏ.சி.சண்முகம், தென்னிந்திய வர்த்தக சபையின் தலைவர் ஆர்.கணபதி, தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கத் தலைவர் எஸ்.அன்புராஜன், சென்னை மாவட்ட சிறு தொழிற்சாலைகள் சங்கத்தின் தலைவர் டி.வி.அரிசுரன், தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர் பி.கே. இளமாறன் ஆகியோர் பட்ஜெட்டை வரவேற்று கருத்து தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *