சிறுகதை

ஒரு தாயின் பண ஆசை | மு.வெ.சம்பத்

Spread the love

நேர்மையாக இருந்தார்; அதிகாரிகளின் நெளிவு சுளுவிற்கு வளைந்து கொடுக்க வில்லை.

அதனால் ஜெகந்நாதனை அடிக்கடி வேறு ஊர்களுக்கு மாறுதல் செய்தார்கள். இவர் தயங்காமல் முணுமுணுப்பின்றி சென்று விடுவார்.

ஜெகந்நாதன் வீடு கட்டித்தரும் ஒரு நிறுவனத்தில் நடுத்தர அதிகாரியாக பணி புரிபவர். நேர்மையான சாதுவான குணமுடையவர். யாருக்காகவும் தனது கொள்கையை விட்டுக் கொடுக்காதவர். இவருக்கு ஒரு மகன் , ஒரு மகள். மனைவியோடு சென்னையில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.

இவர் வெளியூரிலிருந்தால் மாதத்திற்கு இரு முறை வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம். வந்த நாட்களில் இவர் மனைவி பொருளாதார நிலையைச் சுட்டிக் காட்டி நிந்தனை செய்வாள்.

மற்றவரை ஒப்பிட்டு வாழாதே என்று எத்தனை தரம் சொன்னாலும் அவள் தன் நிலையை மாற்றிக் கொள்ள மாட்டாள் என்ற நிலைக்கு ஜெகந்நாதன் வந்து அவள் என்ன சொன்னாலும் பதிலேதும் சொல்லாமல் இருந்து விடுவார்.

தன்னால் முடிந்த வரை பிள்ளைகள் இரண்டு பேரையும் நன்றாக படிக்க வைத்து வேலையிலும் சேர்த்து விட்டார். அலுவலகத்தில் பணம் கட்டாத வீட்டு ஒதுக்கீட்டாளர்களிடம் நடையாய் நடந்து பணம் வசூல் செய்து கட்டாதவர்களின் பட்டியலை குறைத்து நிறுவனத்துக்கு லாபம் ஈட்டித் தந்தார். இதனால் இவரை பணம் வசூலாகாத கிளைகளுக்கு மாற்றி வசூல் செய்யச் செய்தனர். இவரும் தளராது தன் பணியைச் செய்து வெற்றியும் கண்டார்.

ஜெகந்நாதன் ஓய்வு பெற ஓரு வருடம் இருக்கையில் அவரை சென்னையில் பிரதான அலுவலகத்திற்கு மாற்றம் செய்தனர். இவர் அலுவலக சம்பந்தமாக அடிக்கடி உயர்அதிகாரியைச் சந்திக்க வேண்டியிருந்தது. வேலைப்பளு அதிகமானது. வீட்டிற்கு வருவதற்கு தினமும் தாமதமானது.

வீட்டிற்கு வந்தால் பழைய படி மனைவியின் நச்சரிப்பால் நிலைகுலைந்து போவார். மகளும் மகனும் ஒருவாறாக அப்பாவை சமாதானப் படுத்தி அவரை அரவணைத்துக் கொள்வார்கள்.

ஏழை, நடுத்தர மக்கள் வீடு மனை தவணை முறையில் வாங்க தன்னை மும்மரமாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டு சமுதாயத்திற்கு நல்லது செய்வது என்ற முடிவு எடுத்தார்.

வீட்டு மனை கட்டும் இடத்தைத் தேர்ந்தெடுத்தார். கோப்புகளைத் தயார் செய்தார். மேலிடத்தில் சமர்ப்பித்தார்.

தக்க தருணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்.

ஜெகந்நாதன் ஓய்வு பெற இன்னும் குறுகிய நாட்கள் இருக்கையில் மேலிட அதிகாரி ஜெகந்நாதனை அழைத்து உங்கள் பரிந்துரைகளை பார்த்தேன். மிகவும் நன்றாக உள்ளது. நீங்களோ சீக்கிரம் ஓய்வு பெறப் போகின்றீர்கள். நேர்மையான அதிகாரி. பொறுப்புகள் நிறைய உள்ள மனிதர்.

எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. அதை நிறைவேற்றுவீர்களா என்றார். சொல்லுங்கள் என்றார் ஜெகந்நாதன்.

இந்த இடத்தை குலுக்கல் ஒதுக்கீட்டு முறையில் உயர் வருமானப் பிரிவு மக்களுக்கு பணம் ஐந்து தவணைகளில் செலுத்தும் திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்தால் நமது நிறுவனத்துக்கு வருமானம் வருமல்லவா என்றார்.

சற்று நேரம் யோசித்த ஜெகந்நாதன் அவரிடம் ஏழை, நடுத்தர மக்கள் வீட்டு மனையை எங்கே அமைத்துக் கொள்வது என கேட்டார்.

அதிகாரி தற்போதுள்ள இடத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இடத்தைச் சொல்லி அதற்கேற்றபடி கோப்புகள் தயார் செய்யுமாறு கூறினார்.

ஏழை, நடுத்தர மக்கள் வீட்டு மனை ஒதுக்கீடு இவ்வாறானதே என்ற வருத்தத்தில் ஆழ்ந்தார்.

தொடர்ந்து வேலை செய்து வரைபடம் மற்றும் எல்லா கோப்புகளையும் தயார் செய்து அதிகாரியிடம் அனுமதிக்காக அனுப்பி வைத்தார்.

அதிகாரி அழைப்பின் பேரில் சென்ற ஜெகந்நாதனிடம் சில நெளிவு சுளிவு வேலையைச் செய்யுமாறு அதிகாரி பணிக்க ஜெகந்நாதன் நாசுக்காக தனது இயலாமையைக் கூறினார்.

அதிகாரி அதை காதில் வாங்கிக் கொள்ளாமல் பணியைச் செய்யக் கட்டாயப்படுத்தினார்.

ஓய்வு பெறும் முதல் நாளில் கோப்புகளில் கையெழுத்திட நிர்பந்தப்படுத்தினார்கள். கோப்பைகளில் கையெழுத்திட ஜெகந்நாதன் மறுத்தவிட்டார்.

ஒய்வு பெறும் நாளில் சீக்கிரமே அலுவலகம் வந்த ஜெகந்நாதனுக்கு மன உறுத்தல் அதிகமாகவே இருந்தது.

மேலும் வந்த ஒரு செய்தி அவரை மிகவும் உலுக்கியது. அதாவது யாரோ ஒருவர் வந்து வீட்டில் அவர் மனைவியிடம் பெருந்தொகை கொடுத்து விட்டு சென்றனராம். மனைவி அடைந்த மகிழ்வுக்கு எல்லையே இல்லை எனச் செய்தி வந்தது.

நிலை குலைந்த ஜெகந்நாதன் ஒரு பேப்பரை எடுத்து ராஜினாமா கடிதம் எழுதினார். அதில் தனக்கு சேர வேண்டிய எல்லா பணத்தையும் எனது மனைவியிடம் சேர்த்து விடுங்கள். நான் ஆசிரமத்தில் சேரப் போகின்றேன் என்று எழுதி அதிகாரியிடம் தரச் சொல்லி விட்டு யாரிடமும் சொல்லாமல் அலுவலகத்தை விட்டு வெளியேறினார்.

இந்த செய்தி கேட்ட அவரது மகன் மற்றும் மகள் தாளாத வேதனைய டைந்தார்கள். அம்மாவின் பண ஆசையால் அப்பாவின் நல்ல மனத்தை உடைந்து விட்டதே என்று கூறி விட்டு அப்பாவைத் தேட முயன்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *