போஸ்டர் செய்தி

மனிதரில் புனிதராக வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர். : ஓ.பன்னீர் செல்வம் புகழாரம்

Spread the love

சென்னை, பிப்.13–

சென்னை மயிலாப்பூர் பாரதீய வித்யா பவனில் நடைபெற்ற விழாவில் புரட்சித்தலைவரின் உடனிருந்து பணியாற்றிய கே.மகாலிங்கம் எழுதிய எம்.ஜி.ஆரின் புகழ் பரப்பும் ‘‘சரித்திர நாயகனோடு ஒரு சாமானியன்” என்ற வரலாற்று நூலை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட, முன்னாள் அமைச்சர் டாக்டர் எச்.வி. ஹண்டே பெற்றுக் கொண்டார்.

விழாவிற்கு அவைத்தலைவர் இ.மதுசூதனன் தலைமை வகித்தார்.

நூல் வெளியீட்டு விழாவில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:–

1967ம் ஆண்டில், துப்பாக்கியால் சுடப்பட்டு, கழுத்திலே துப்பாக்கிக் குண்டுக்கும் இடமளித்து, மருத்துவமனையில் படுத்துக் கிடந்த நிலையில், தொகுதிக்கே செல்லாமல் தன்னுடைய தொகுதியை மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் அறிஞர் அண்ணாவின் தி.மு.க.வை வெற்றி பெறச் செய்தவர் எம்ஜிஆர்.

அதேபோல 1984ம் ஆண்டில் நடைபெற்ற தமிழக சட்ட மன்றத் தேர்தலில் அமெரிக்காவில் மருத்துவமனையில் இருந்த நேரத்திலும் படுக்கையில் இருந்தபடியே வெற்றி பெற்று சரித்திர சகாப்தம் படைத்தவர், நமது எம்ஜிஆர்.

தமிழகத்தின் முதலமைச்சராக ஆறு முறை பணியாற்றியவர் என்ற பெருமையைப் பெற்ற அம்மாவை, அரசியல் வான் உச்சிக்கு அழைத்துச் சென்று பெருமைபடுத்தியவர் எட்டாவது வள்ளலான எம்.ஜி.ஆர். ஆவார்.

கடலூரில் 1982–ம் ஆண்டு நடைபெற்ற மாநாட்டில் அம்மாவை அரசியலில் அறிமுகப்படுத்தி உரையாற்ற வைத்து, மக்களின் மகத்தான ஆதரவைப் பெறச் செய்து எதிர்க்காலத்தில் தலைமை ஏற்று தமிழகத்தை வழி நடத்த இருப்பவர் அம்மா தான் என்று முன்னோட்டம் தந்தவர் எம்.ஜி.ஆர்.

தனது உயிருக்கும் மேலாக மதித்து போற்றி வணங்கிய தனது தாயின் மறைவிற்குப் பின்னர் தனது வீட்டில், அவரது திருவுருவப்படம் ஒன்றை வைத்து, அதன் முன்பு இருந்த இருக்கையில் அமர்ந்துகொண்டு, புனித அன்னையை வணங்கிவிட்டுப் பணிகளைத் தொடங்குவதுதான் புரட்சித்தலைவரின் வாடிக்கை. அந்த இருக்கையில் அவரைத் தவிர யாரும் அமர மாட்டார்கள்.

மனிதரில் புனிதர்

ஆனால், ஒரு முறை, பொன்மனச் செம்மலின் உதவியை நாடி வந்த பெண்மணி ஒருவர், தனது சின்னஞ் சிறு குழந்தையுடன் அவரது இல்லத்திற்கு வந்தார். தலைவர் அவர்கள் அப்போது இல்லத்தில் இல்லாத நேரம். எனவே, அவரது வருகைக்காக காத்திருந்த அப்பெண்மணி, அன்னை சத்யா திருவுருவப்படத்திற்கு முன்பு போடப்பட்டிருந்த இருக்கையில் அறியாமல் உட்கார்ந்து கொண்டு, கண்ணயர்ந்து விட்டார்.

சற்றுநேரம் கழித்து வந்த புரட்சித்தலைவர், அப்பெண்மணியைக் கண்டார். “கோபத்தில் என்ன செய்யப்போகிறாரோ” என்று அருகிலிருந்தவர்கள் அஞ்சி நடுங்கினர். ஆனால், அவர்களது எண்ணத்திற்கு நேர்மாறாக, அவர் அப்பெண்மணி அமர்ந்திருந்த இருக்கைக்கு மேல் இருந்த, மின்விசிறியை இயங்கச் செய்தார். அவரது தூக்கத்தை தடை செய்யாமல் அமைதியாக தூங்க வைத்தார்.

பிறகு திடுக்கிட்டு எழுந்த பெண்மணி, தன் தவறுக்காக மனம் வருந்தினார். எம்.ஜி.ஆரோ குடிக்கத் தண்ணீர் கொடுத்து அவரது பதட்டத்தை தணித்து அவர் கேட்ட உதவியை கொடுத்து அனுப்பினார். இவ்வாறு மனிதரில் புனிதராக வாழ்ந்தவர் நமது புரட்சித் தலைவர் என்பதை சுட்டிக்காட்ட நான் கடமைப்பட்டுள்ளேன்.

இத்தகைய மனித நேயத்தின் சின்னமாக விளங்கியவர் எம்.ஜி.ஆர். இவ்வாறு கண்கள் விரியத்தக்க, இதயம் நிறையத்தக்க எண்ணற்ற சம்பவங்களை, அவரது பெருமைகளை சொல்லிக்கொண்டே போகலாம்.

இத்தகைய குணக்குன்றாக விளங்கிய புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் பெருந்தன்மைமிக்க செயல்களைத்தான் நண்பர் கே.மகாலிங்கம் தனது நூலில், படிப்பவர்கள் பிரமிக்கத்தக்க அளவிற்கு எடுத்துரைத்திருக்கிறார்.

ஒரே ஒரு சம்பவத்தை நான் சொல்லி கொள்ள விரும்புகிறேன். 1982ம் ஆண்டு பெரியகுளம் நாடாளுமன்றத்திற்கு அப்போது இடைத்தேர்தல் நடந்த சமயம். ஹண்டே கூட தேர்தல் பொறுப்பாளராக இருந்து தேர்தல் பணியாற்றினார். புரட்சித் தலைவர் தேர்தல் பிரச்சாரத்திற்காக, தொகுதி முழுமைக்கும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டார், அவர் வைகையிலிருந்து கிளம்பி வடுகப்பட்டி கிராமத்திற்கு பிரச்சாரத்திற்கு வருவதாக கேள்விப்பட்டு நாங்கள் பெரியகுளத்திலிருந்து வந்து காத்திருந்தோம், லட்சக்கணக்கான மக்கள் அங்கு கூடியிருந்தார்கள்.

ஒரு நிமிடம் என்னிடம் பேசினார்

அந்தக் கூட்டத்தை கடந்துதான் தாமரைக்குளம் வழியாக, கள்ளிப்பட்டி வழியாக, தேனி பொதுக் கூட்டத்திற்கு செல்ல வேண்டும். கூட்டம் கடுமையாக இருந்தது. நான் அப்போது ஒரு கடை ஓரத்தில் நான் ஓட்டி வந்த டூவிலர் வைத்துக் கொண்டு நின்றுக் கொண்டிருந்தேன். தலைவருடைய கார் வந்தது. அதற்கு பின்னாலே தலைவருடைய வேனும் வந்தது. ஆனால் தலைவர் வண்டியை நிறுத்தவில்லை. நிறுத்தாமல் போய்விட்டார். தலைவர் பேசாமல் போய்விட்டார் என்று பயங்கரமான கலவரம் வந்துவிட்டது. நான் தப்பித்தோம் பிழைத்தோம் என வண்டியை எடுத்துக் கொண்டு வேகமாக அங்கிருந்து கிளம்பி தலைவர் வண்டியை ஓவர் டேக் பண்ணினேன். உடனே யார் அந்த பையன் டூவிலரில் நம்மை ஓவர் டேக் பண்ணுகிறார் என்று பார்த்தார். சிறிது தூரத்தில் தலைவருடைய வண்டி நின்றது. உடனே என்னை அதிகாரிகள் சுற்றி கொண்டனர். என் பெயர் என்ன, விலாசம் என்ன என்று மாறி மாறி விசாரித்து சூழ்ந்துக் கொண்டார்கள். எனக்கு ரொம்ப பயமா போச்சு, தலைவர் என்னை பார்த்தார். யார் நீ என்று கேட்டார். உடனே நான் பெரியகுளத்திலே நகரத்திலே வட்டசெயலாளர் என்று சொன்னேன்.

உடனே தலைவர், அங்கு தேர்தல் பணிகளை பார்க்காமல் என் பின்னாலே சுற்றிக் கொண்டிருக்கிறாயே என்று கேட்டார். அப்போது தான் நான் தலைவரை நேரடியாக பார்த்து, நேரடியாக சந்தித்தேன். தலைவர் எனக்கு அறிவுறுத்திய அறிவுரை, ஆக இந்த ஒரு சம்பவத்தையே நான் எனக்கு கிடைத்த பெரும் புண்ணியமாக எண்ணுகிறேன்.

அண்ணன் மகாலிங்கம் 15 ஆண்டு காலம் தலைவரோடு பயணித்து வந்துள்ளார், நானோ தலைவர் ஒரு நிமிடம், ஒரு வினாடி நம்மிடம் பேசிவிட்டாரே என்பதை பெரிய புண்ணியமாக இருக்கிறது. அவர் பயணித்த நீண்ட நெடிய வரலாற்றை நமக்கு புத்தகமாக வழங்கியுள்ளார். அவர் எழுதியுள்ள புத்தகத்தை பாகம், பாகமாக பிரித்தால் 100 பாகமாக புத்தகம் வெளியிடும் அளவுக்கு அங்கு செய்திகள் இருக்கிறது. ஆக எல்லாவற்றையும் சுருக்கி அண்ணா தி.மு.க. தொண்டர்கள் மட்டுமல்லாமல், அனைத்து தரப்பு மக்களும் அறிந்து தெரிந்து கொள்ளும் அளவிற்கு படைக்கப்பட்டுள்ள இந்தப் புத்தகம் அருமையான வரலாற்றில் இடம் பெறும்.

நிகழ்வுகள், தகவல்கள் அனைத்தும் உண்மை

பாரத ரத்னா எம்.ஜி.ஆரிடம், 1972 முதல் 15 வருடங்கள் அவருடைய நேர்முக உதவியாளராகப் பணிபுரிந்த கே.மகாலிங்கத்தால் உருவாக்கப்பட்ட நூல் இது. அதனால் இதில் குறிப்பிடப்பட்ட நிகழ்வுகள், தகவல்கள் அனைத்தும் உண்மையானவை. சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவை என இந்த நல்ல நேரத்தில் தெரிவித்து கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

1987ம் ஆண்டுவரை பொன்மனச் செம்மல், இம்மண்ணை விட்டு நீங்கும் வரை அவருடனே இருந்து, அவரைப் பற்றி நன்கு அறிந்தவர் மகாலிங்கம். அதனால்தான், இதுவரை யாரும் அறிந்திராத பல்வேறு புதிய தகவல்களை, வியக்கத்தக்க சம்பவங்களை, இந்நூலில் திறம்பட விவரித்துள்ளார். இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

விழாவில் அமைப்புச் செயலாளர் சி. பொன்னையைன், சென்னை மாநகர முன்னாள் மேயர் சைதை சா. துரைசாமி, முன்னாள் காவல் துறை தலைவர் ஏ.எக்ஸ்.அலெக்சாண்டர், எம்.ஜி.ஆரின் முன்னாள் அரசு துணைச் செயலாளர், த. பிச்சாண்டி, கலைமாமணி டி.கே.எஸ். கலைவாணன், பாரதீய வித்யா பவன் தலைவர் ராமசாமி, மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.நடராஜ், தமிழ் மகன் உசேன், தாடி ராசு, கமலக்கண்ணன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் காஞ்சி பன்னீர் செல்வம் , கவிஞர் முத்துலிங்கம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ராமதாஸ், சுப்புரத்தினம், ஜெயலலிதா பேரவை மாநில துணைச் செயலாளர் டி.ரமேஷ், பகுதி செயலாளர் ஜெயசந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கலைமாமணி சி.வி. சந்திரமோகன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *