செய்திகள்

23–ந்தேதி தமிழக இடைக்கால பட்ஜெட்: ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்

சென்னை, பிப்.16–

தமிழகத்தில் 23–ந்தேதி இடைக்கால பட்ஜெட்டை சட்டசபையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்.

இந்த ஆண்டிற்கான முதல் சட்டசபை கூட்டம் கடந்த 2–ந்தேதி கவர்னர் உரையுடன் துவங்கியது. கொரோனா பரவல் காரணமாக கலைவாணர் அரங்கில் போதிய இடைவெளியுடன் சட்டசபை கூட்டம் நடத்தப்பட்டது.

கவர்னர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.

அன்றைய கூட்டத்திற்கு பிறகு அலுவல் ஆய்வுக் குழுவில் 5–ந்தேதி வரை சட்டசபையை நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது. அதன்படி 3–ந்தேதி அன்று மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அமைச்சர் துரைக்கண்ணு, பாடகர் எஸ்.பி.பி, புற்றுநோய் நிபுணர் சாந்தா உள்ளிட்டோர் மறைவுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது. 4–ந்தேதி மற்றும் 5–ந்தேதிகளில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானமும், அறிவிப்புகளும் இடம்பெற்றன.

ரூ.12,110 கோடி விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி, ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் பதியப்பட்ட வழக்குகள் தள்ளுபடி, ஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றன.

இதன் பின்னர் தேதி குறிப்பிடப்படாமல் சட்டசபையை சபாநாயகர் தனபால் ஒத்திவைத்தார்.

இந்த நிலையில் 23–ந்தேதி சட்டசபை கூட்டம் கூட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அன்றைய தினமே இடைக்கால பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படுகிறது.

இதுகுறித்து பேரவைச் செயலர் சீனிவாசன் இன்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:–

“தமிழ்நாடு சட்டப்பேரவையின் அடுத்த கூட்டத் தொடர் பிப்ரவரி 23–ந்தேதி செவ்வாய்க்கிழமை முற்பகல் 11 மணிக்கு சென்னை வாலாஜா சாலை ஓமந்தூரார் அரசினர் தோட்டம் கலைவாணர் அரங்கம் மூன்றாவது தளத்தில் உள்ள பல்வகை கூட்ட அரங்கத்தில் சபாநாயகர் கூட்டியுள்ளார்.

மேலும் 23–ந்தேதி அன்று 11 மணிக்கு 2021–22ம் ஆண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை பேரவைக்கு அளிக்கப்பெறும்’’ என்று பேரவைச் செயலாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளதால், இடைக்கால பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் இடம் பெறும் என தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *