செய்திகள்

சென்னையில் புத்தக கண்காட்சி: ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்

‘புத்தக வாசிப்பு மூலம் சிந்தனை மேம்படும்’ என பேச்சு

சென்னை, பிப்.25–

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி) சார்பில் 44வது புத்தக கண்காட்சி, சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நேற்று தொடங்கியது.

இதில் தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று குத்துவிளக்கேற்றியும், ரிப்பன் வெட்டியும் கண்காட்சியை தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், புத்தகங்கள் வாசிப்பதன் மூலமாக ஒருவரின் சிந்தனை திறன் மேம்படும், சொல் வளமும், கற்பனை வளமும் பெருகும். வாசகர்கள் புத்தகக் காட்சிக்கு வெறும் பார்வையாளர்களாக வந்து செல்லாமல், சிறந்த நூல்களை வாங்கிப் படிக்க வேண்டும். அதில் உள்ள நல்ல கருத்துகளை தங்களுக்கு ஏற்றவாறு வாழ்வில் பின்பற்ற வேண்டும். பபாசி நடத்தும் 44-வது புத்தகக்காட்சி மிகப்பெரிய வெற்றியடைய எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

நிகழ்ச்சியில் அண்ணா தி.மு.க. செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் உள்பட நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். ‘பபாசி’ தலைவர் ஆர்.எஸ்.சண்முகம், செயலாளர் எஸ்.முருகன், பொருளாளர் எ.கோமதிநாயகம் உள்பட நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

100 ஆண்டு பதிப்பகங்களுக்கு விருது

இதையடுத்து நூற்றாண்டு கண்ட பதிப்பகங்களுக்கு விருது வழங்கும் விழா சென்னை புத்தகக் கண்காட்சி வளாகத்தில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு அழைப்பாளராக சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார். இதைத் தொடர்ந்து பபாசி விருதுகள் வழங்கப்பட்டன. முன்னதாக அவர் பேசுகையில், வாழ்வில் ஏற்படும் எந்தவொரு பிரச்சினைக்கும் புத்தகங்கள் மூலம் தீர்வு காண முடியும். இன்றைய சூழலில் இணையதளங்களில் மூழ்கியிருக்கும் இளைஞர்களுக்கு புத்தக வாசிப்பின் அவசியம் குறித்து பெற்றோர் உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என்றார்

புத்தக கண்காட்சி அடுத்த மாதம் (மார்ச்) 9-ந்தேதியுடன் முடிவடைகிறது. ஒவ்வொரு நாளும் கண்காட்சி காலை 11 மணிக்கு தொடங்கி இரவு 8 மணியுடன் நிறைவு பெறுகிறது. கண்காட்சிக்கு அனுமதி கட்டணமாக ரூ.10 வசூலிக்கப்படுகிறது. கண்காட்சியில் சுமார் 700 அரங்குகளுடன் 500 பதிப்பாளர்களின் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளிலான புத்தகங்கள் இடம்பெற்று உள்ளன.

கொரோனா நோய்த்தொற்றுக்கு மத்தியில் புத்தக கண்காட்சி நடத்தப்படுவதால், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருக்கின்றன. அதிலும் குறிப்பாக அரங்குகளுக்கு செல்லும் பாதைகள் ஒருவருக்கொருவர் உரசாமல் செல்வதற்கு ஏதுவாக விசாலமான பாதைகளாக ஏற்படுத்தப்பட்டுள்ளன. 5 நுழைவுவாயில்களிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டும், தெர்மல் ஸ்கேனர் கருவி கொண்டு காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்ட பிறகே பொதுமக்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

கண்காட்சியில் வழக்கமாக வழங்கப்படும் 10 சதவீதம் தள்ளுபடியில் புத்தகங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதுதவிர சில பதிப்பாளர்கள் 20 முதல் 30 சதவீதம் வரையில் தள்ளுபடி வழங்குகிறார்கள். கொரோனா சூழலிலும் இந்த ஆண்டு வாசகர்கள் அதிகளவில் பார்வையிட வருவார்கள் என்றும், கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் ரூ.20 கோடி அளவில் புத்தகங்கள் விற்பனை ஆகும் என்றும் ‘பபாசி’ நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *